சினிமாவுக்குள் சினிமா என்ற சப்ஜெக்டில், எளிமையான நடிகர் நடிகைகளின் பங்களிப்பில், எளிமையான பட்ஜெட்டில் ‘க.மு க.பி.’
திரைப்படம் இயக்குவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிற அன்பு, தனது முயற்சிக்கு சரியான பலன் கிடைக்கும் முன்பே, காதலித்த பெண்ணை மனைவியாக்கிக் கொள்கிறான். சம்பாத்தியம் என எதுவுமில்லாமல் மனைவி வேலைக்குப் போய் சம்பாதிப்பதில் குடும்பம் நடத்துகிறான். அதனால் உருவாகும் தாழ்வு மனப்பான்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். கணவன் மனைவிக்குள் சிலபல சிக்கல்கள் அதிகரிக்க, விவாகரத்துக்கு தயாராகிறார்கள்.
நினைத்தபடி இயக்குநராக முடியாத நிலையில், மனைவியையும் பிரிய வேண்டிய சூழ்நிலை… இப்படி பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்ட அன்பு அடுத்தடுத்த நாட்களில் என்னவாகிறான் என்பது கதையின் மீதி… இயக்கம் புஷ்பநாதன் ஆறுமுகம்
அன்புவாக வருகிற விக்னேஷ் ரவிக்கு உற்சாகம், சோகம், இயலாமை, விரக்தி என பல உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரம். அவர், சினிமா இயக்கும் கனவைச் சுமந்துகொண்டிருப்பவர்கள் சந்திக்கிற அத்தனை பிரச்சனைகளையும் சந்திக்கிறார். அவை தரும் வலிகளை சிரித்த முகத்தை வைத்துக் கொண்டு ஓரளவுக்கு மேல் பிரதிபலிக்கத் திணறினாலும், காதலியுடனான ரொமான்ஸில் ஸ்கோர் செய்கிறார்.
பிரியத்தைப் பொழியும் காதலியாக, கணவனின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து நடக்கும் மனைவியாக, கணவனின் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் அதிருப்தி அடைபவராக, கணவன் காட்டும் வெறுப்பால் மனம் உடைபவராக தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார் சரண்யா ரவிச்சந்திரன்.
கதையின் இன்னொரு பக்கத்தை காதலாலும் காதலர்களுக்குள் உருவாகும் சண்டைச் சச்சரவுகளாலும் நிரப்ப வேண்டிய பொறுப்பு டி எஸ் கே, பிரியதர்ஷினி ஜோடிக்கு. அதை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஆணாதிக்க மனப்பான்மையில் இருக்கிறவர்களின் மனதை அசைத்துப் பார்க்கும் காட்சியில் நிரஞ்சன், அபிராமி முருகேசன் ஜோடியின் நடிப்பு கச்சிதம்.
கபாலி பெருமாள் உள்ளிட்ட இன்னபிற நடிகர்கள் கதையின் தன்மையுணர்ந்து களமாடியிருக்கிறார்கள்.
ஜெகன் கவிராஜ் வரிகள் தந்த ‘இறைவியே’ பாடலுக்கு, சமந்த் நாக் தந்திருக்கும் மெல்லிசை மனதை வருடிப் போகிறது. பின்னணி இசையை ஆர்ப்பாட்ட அதிரடி ஏதுமின்றி தந்திருக்கும் தர்சன் ரவிகுமாரை தனியாக பாராட்ட வேண்டும்.
‘நேசிச்சவங்க கூட இல்லைன்னா வெற்றிகூட தோல்விதான்’ என்றெல்லாம் வந்துவிழும் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
திறமையை மட்டும் வைத்துக்கொண்டு திரைத்துறையில் கால்பதிக்க விரும்புகிறவர்கள் படுகிற பாடுகளை, அவமானங்களை, இழப்புகளை, உழைப்புச் சுரண்டல்களை பல படங்களில் பார்த்துள்ள நமக்கு, அதே அனுபவத்தை தருகிற மற்றுமொரு படைப்பாக இருந்தாலும்,
காட்சிகளை அடுக்கியதில் கையாண்டிருக்கும் வித்தியாசமான அணுகுமுறையும், திரைக்கதையிலிருக்கும் உயிரோட்டமும் படத்தை தரம் உயர்த்தியிருக்கிறது.
க.மு. க.பி _ கதைக்களம் தருகிறது ஹேப்பி!