மனிதர்களை பணத்துக்காக கடத்துகிற ரவுடி, அவர்களை எதிர்க்கிற ஹீரோ என்ற எளிமையான கதைக்களத்தில் ‘கடத்தல்.’
ரவுடி கும்பலால் கடத்தப்படும் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க நினைக்கிறான் கதையின் நாயகன். துரதிஷ்டவசமாக அந்த குழந்தையை கடத்தியவனே அவன்தான் என காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாகிறான். ரவுடி கும்பலும் அவனை கொலைவெறியோடு துரத்துகிறது. நல்லது செய்யப் போய் ஆபத்தில் சிக்கிக் கொண்ட அவன் அதிலிருந்து மீள்கிறானா இல்லையா என்பதே ஸ்க்ரீன்பிளே. இயக்கம் சலங்கை துரை (‘காத்தவராயன்’,‘காந்தர்வன்’, ‘இ.பி.கோ 302′ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்)
முகத்தில் முக்கால்வாசியை மறைக்கும்படியான தாடி மீசையோடு சற்றே முரட்டுத் தோற்றத்தில் நாயகன் எம் ஆர் தாமோதர். கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பாசமாகப் பார்த்துக் கொள்ளும்போதும், சூழ்நிலையால் கொலைகாரனாகி தன் தாயைப் பறிகொடுத்து கலங்கும்போதும் அவர் நடிப்புக்கு புதுசு என்பது தெரிகிறது. தன்னைத் துரத்தும் ரவுடியின் அடியாட்களை சமாளித்து குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க போராடும் காட்சிகளில் நடிப்பில் துடிப்பு காட்டுகிறார். அதற்கு பாஸ்மார்க் போட்டு ஊக்குவிக்கலாம். அவருக்கு இரண்டு ஜோடிகள், இருவரிடமும் இதழோடு இதழ் இணையும் முத்தம், டூயட் என நீளும் காட்சிகள் ‘மனுஷன் வாழ்றான்யா’ என்று சொல்லும்படியிருக்கின்றன.
நாயகிகள் விதிஷா, ரியா இருவரும் லட்சணமாக இருக்கிறார்கள். வழக்கம்போல் நாயகன்மீது காதல் பார்வை வீசுகிறார்கள். கிஸ்ஸடித்து கிறங்க விடுகிறார்கள்.
படு சீரியஸாக கடந்தோடும் காட்சிகளுக்கிடையில் தொடைநடுங்கியாக இருந்தாலும் ‘நான் யார் தெரியுமா?’ ‘எத்தனை கொலை செய்திருக்கிறேன் தெரியுமா?’ என்றெல்லாம் அலட்டலாய் பேசித் திரியும் சிங்கம் புலி கொஞ்சமே கொஞ்சம் ரிலாக்ஸ் ஃபீல் தருகிறார். அவருக்கு மனைவியாக ஓருசில காட்சிகளில் எட்டிப் பார்க்கிற கம்பம் மீனாவின் எடுப்பான உடல்வாகும் இடக்கான பேச்சும் கவர்கிறது.
நாயகனுக்கு அம்மாவாக சீனியர் நடிகை சுதா. கணவன் கொலைகாரன் என்பதால் மகனும் கொலைகாரனாகிவிடுவான் என அவனை பயந்து பயந்து பொத்திப் பொத்தி வளர்ப்பதாகட்டும், அவனை குற்றவாளியாக பார்க்கும்போது அதிர்ந்து அழுது சரிவதாகட்டும் அனுபவ நடிப்பால் மனதில் நிறைகிறார்.
கியூட்டாக இருக்கிற குழந்தை நட்சத்திரம் தருண் துறுதுறுவென அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பதே கதையோட்டத்துக்கு போதுமானதாக இருக்கிறது.
நாயகனுக்கு நண்பனாக வருகிறவர்கள், மதுரை முத்து’ என்ற பெயரில் கெத்து காட்டும் வில்லன், உயரதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் என்கவுண்டருக்கு தயாராகும் போலீஸ் என மற்ற நடிகர்களின் பங்களிப்பில் குறையில்லை.
எம் ஸ்ரீகாந்த் இசையில் ‘பிச்சிப்பூ’ பாடலின் மெல்லிசை உற்சாகமூட்ட, அம்மா பிள்ளை பாசப்பிணைப்பை எடுத்துச் சொல்லும் ‘என்ன பெத்த ஆத்தா’ பாடல் மனதைத் தாலாட்டுகிறது.
ராஜ் செல்வாவின் ஒளிப்பதிவு நேர்த்தி.
அம்மாவையும் பிள்ளையையும் தனித்தனியாக கடத்தும் ஆரம்பக் காட்சியை பரபரப்பாக அமைத்த இயக்குநர் அதே வேகத்தில் திரைக்கதையை நகர்த்தியிருக்கலாம். அம்மா பிள்ளை சென்டிமென்ட் காட்சிகளைக் குறைத்து, கடத்தல் துரத்தலில் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.
காட்சிகள் சிலவற்றில் நாடகத்தனம் அதிகம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பார்த்தால், ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்பதை அழுத்தமாய் சொன்னவிதத்தில் ‘கடத்தல்’ கருத்துப் பாய்ச்சல்!