நாம் வாழும் நிலப்பரப்பு அதன் வரலாற்றுப் பெருமைகளை உலகத்துக்கு எடுத்துச் சொல்வதற்கானதா? மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கானதா? அரசாங்கம் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்?
இப்படியான கேள்விகளை முன்வைத்து, அதற்கு சரியான கோணத்தில் பதிலும் சொல்லியிருக்கிற படம். ‘கிடாயின் கருணை மனு’ தந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மண்மணம் மாறாத படைப்பாக ‘கெணத்த காணோம்.’
கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்திலிருக்கிற அந்த கிராமத்து மக்கள், தீர்வு பிறக்கும் என்ற நம்பிக்கையில் கிணறு தோண்டுகிறார்கள். இருபதடி கூட தோண்டியிருக்க மாட்டார்கள், அதற்குள் பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு உயிரினத்தின் படிமம் கிடைத்துவிட, அதுவரை தோண்டப்பட்ட கிணறும், அந்த ஊர் முழுமையும் தொல்பொருள் துறையின் கட்டுபாட்டுக்குள் வருகிறது.
அந்த ஊர் மக்கள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கும் அடிப்படை வசதிகள் செய்துதரப்படாமலிருக்கும் சூழ்நிலையில், கிணறு தோண்டவும் முடியாமல் தவிக்கும் நிலைமை உருவாகிறது. அப்போது அவர்கள் எடுக்கும் ஒரு முடிவு தண்ணீர் பஞ்சத்திலிருந்து மீண்டு வரவும், மற்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொள்ளவும் பயன்படுகிறது.
அந்த முடிவும், அதன் மூலம் கிராமம் அடையும் நன்மைகளுமே திரைக்கதை…
கோயில் பூசாரியாக வருகிற யோகிபாபு ஊர் மக்களுக்காக கிணறு தோண்ட தன் வசிப்பிடத்தை விட்டுக் கொடுப்பதிலிருந்து, ஊருக்கு நல்லது நடக்க அரசாங்கத்தை துணிச்சலாக எதிர்த்து நின்று காரியம் சாதிப்பது வரை வழக்கம்போல் எளிமையான நடிப்பால் கேரக்டரை தூக்கி நிறுத்துகிறார்.
கிராமத்து மக்கள் அழுக்கடைந்தவர்களாக, பஞ்சத்தில் அடிபட்டவர்களாக, பெரும்பாலும் எலும்பும் தோலுமாக இருக்க வேண்டும். அதுதான் அவர்கள் வாழும் ஊரின் வளமில்லா சூழலின், வசதிகளற்ற நிலைமையின் சான்றாக இருக்கும். அதற்கேற்ப, கவிஞர் விக்கிரமாதித்தனாகட்டும் ஹலோ கந்தசாமியாகட்டும் நடித்திருப்பவர்கள் எல்லாவிதத்திலும் பொருந்தியிருக்கிறார்கள்.
மக்கள் பாவப்பட்டவர்களாக இருக்க, ஊர்த் தலைவர் மக்களை வைத்து கண்டபடி பணம் சம்பாதிக்கத் தெரிந்தவராகவும் சொகுசான வசதிகளுடன் வாழ்பவராகவும் வருகிறார். அதை, திரைக்கதை நன்றாக எழுதப்பட்டிருப்பதற்கான சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.
தொல்லியல்துறை அதிகாரியாக, தன் வேலையை கறாரான மனநிலையில் இருந்து செய்பவராக ரேச்சல் ரெபேக்கா இயல்பான நடிப்பில் ஆளுமையாக வலம் வருகிறார். அவருக்கு கீழ்நிலை அதிகாரியாக வருகிற ராமகிருஷ்ணன் மனிதாபிமானத்தின் பக்கம் நிற்பது கவனம் பெறுகிறது.
ஊர் மக்கள் ஒவ்வொருவரும் பல விதங்களில் அவஸ்தைபட்டுக் கொண்டிருக்க, தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் அப்படியும் இப்படியும் வந்து போகிறார் லவ்லின் சந்திரசேகர். கதைநாயகன் யோகிபாபுவுக்கு அவர் ஜோடி என்பதை தவிர எந்த தாக்கத்தையும் தராத கதாபாத்திரம்.
கவிதா பாரதி அமைச்சராக வந்து போகிறார். மொட்டை ராஜேந்திரனை கறிவேப்பிலை போல் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
நிவாஸ் கே பிரசன்னா இசையில், மோகன்ராஜா வரிகளில் ‘தெய்வம் இல்லையோ’ பாடல் சோககீதமாக கடந்துபோக, மதுரை முரளிதரன் வரிகளில் ‘ஒத்தையடி பாதையில’ பாடல் உற்சாகம் தருகிறது. ஜெகன் கவிராஜின் அர்த்தமுள்ள வரிகளில் ‘கெணத்த காணோம்’ பாடலும் அணிவகுப்பில் அழுத்தமாக இடம்பிடித்திருக்கிறது.
வி தியாகராஜன் ஒளிப்பதிவில் ராமநாதபுரத்தின் வறட்சி, கதைச் சுழலின் பரபரப்பு என எதையும் விடாமல், நேட்டிவிட்டி துளியும் குறையாமல் பதிவு செய்து படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார்.
சீரியஸாக எடுக்க வேண்டிய சப்ஜெக்டை, சிரிப்பு மசாலாவில் போட்டுப் புரட்டியிருப்பது படத்தின் மைனஸ்.
அரசாங்கம் ஒரு திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்துவிட்டால் கையாளும் வழிகள் எத்தனை கடுமையாக, கொடுமையாக இருக்கும் என்பதை போகிற போக்கில் சுட்டிக்காட்டி, மக்கள் ஒன்றாக திரண்டால் எந்த அநியாய அக்கிரமங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டியிருப்பது படத்தின் ஹைலைட்!
கெணத்த காணோம் – அர்த்தம் அதிகம்; ஆழம் குறைவு!
-சு.கணேஷ்குமார்
