Home விமர்சனம் ‘போலீஸ் ஃபேமிலி’ சினிமா விமர்சனம்

‘போலீஸ் ஃபேமிலி’ சினிமா விமர்சனம்

போலீசார் சந்தேக கேஸில் ஒரு இளைஞனைப் பிடித்து, லாக்கப்பில் வைத்து அடித்து துவைக்கிறார்கள். அதன்பின், அவன் அந்த ஏரியாவின் மிகப் பெரிய தாதா தனாவின் மகன் என்பது தெரிகிறது. அடிபட்டு மயங்கிக் கிடந்தவனை அப்படியே தூக்கிப்போய் ஊருக்கு வெளியில் ஒதுக்குப்புறமாக போடுகிறார்கள். மறுநாள் அவன் செத்துக்கிடக்க, தனாவுக்கு தன் மகனை போலீஸ் பிடித்துக்கொண்டு போனதும், ஸ்டேஷனில் வைத்து கடுமையாக அடித்ததும் தெரிகிறது.

கோபத்தின் உச்சிக்கு போகிற தனா, மகனை போலீசார்தான் கொலை செய்திருப்பார்கள் என்ற முடிவுக்கு வருகிறார். மகனை அடித்த போலீஸாரின் குடும்பத்தினரை கொன்று தீர்க்க களமிறங்குகிறார்.

இப்படி அதகளமாக துவங்கும் கதை, தனா எப்படியெல்லாம் பழிவாங்குகிறார் என்ற பரபரப்புடன் பயணிக்க, உண்மையில் தனாவின் மகனைக் கொன்றது யார் என்பதை அடையாளம் காட்டும்போது ‘அடப்பாவி நீதானா அது?’ எனபது போல் ஆச்சரியத்தை அள்ளிக் கொடுக்கிறது.

தனாவாக சித்தப்பு சரவணன். போலீஸுக்கு கட்டுப்படாத ரவுடியாக, நான் என் மகனை இழந்து நிற்பதுபோல் போலீஸார் அவர்களின் மனைவி, பிள்ளைகளை இழந்து நிற்க வேண்டும் என்ற உறுதியுடன் காட்டும் வில்லத்தனம் அலட்டலில்லாத மிரட்டலாக டெலிவரியாகியிருக்கிறது.

போலீஸ் உயரதிகாரியாக வருகிற (இந்த படத்தின் தயாரிப்பாளர்) ராஜா மலைச்சாமி தன் இரு மகள்களும் தனாவிடம் சிக்கிக்கொள்ள, எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என துடிப்பது பரிதாபமாகவும் நடிப்பு சுமாராகவும் இருக்கிறது. வில்லன் கும்பல் அவரை தாறுமாறாக அடித்து நொறுக்கினாலும், எந்த சேதாரமும் இல்லாமல் எனர்ஜியாக எழுந்து நடமாடுவது எப்படி என்பதுதான் புரியவில்லை.

ராஜா மலைச்சாமியின் மகள்களாக வருகிற நிஷா துபே, சுரேகா, நிஷாவின்  காதலனாக ரோஜன் லியோன், இன்னபிற கேரக்டர்களில் ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா உள்ளிட்டோரின் நடிப்பு கதையோட்டத்தில் கலந்திருக்கிறது.

காதல் சுகுமாருக்கு நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்கிற அளவு முக்கியத்துவமுள்ள பாத்திரம். எளிமையாக நடித்திருக்கிறார்.

காடு, மேடு, மலை, பாழடைந்த கட்டடங்கள் என த கேமரா வழியாக புகுந்து பயணித்து காட்சிகளின் விறுவிறுப்பு தன்மை மாறாமல் பார்த்து கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயகுமார் தங்கவேல்.

ஜெயா கே.தாஸின் இசையில் பாடல்கள் மனதைத் தொடவில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பு கூட்டியிருக்கலாம்.

போலீஸாரும் ரவுடியும் மோதிக்கொள்கிற கதையை சற்றே வேறுவிதமாக சொல்ல நினைத்த இயக்குநர் எம் பாலு, மனம்போன போக்கில் திரைக்கதை அமைத்திருக்கிறார். பெரிதாய் பாராட்ட ஏதுமில்லையென்பதால் படத்துக்கு பாஸ்மார்க் போட்டுவிட்டு கடந்துபோகலாம் என்ற உணர்வைத் தருகிறார்!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்