‘அட்டு’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலை பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர் ரத்தன் லிங்கா. அவர் இயக்கி, விரைவில் வெளிவரவுள்ள படம் ‘லாக்.’
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா 8.1. 2023 அன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.
நடிகர் விஜய் சூரிய பாலாஜி, மதன் ,படத்தொகுப்பாளர் மகேந்திரன் கணேசன், காவல்துறை உயர் அதிகாரியான ராஜகோபால், தொழிலதிபர்கள் ரஜினிகாந்த் சண்முகம் ,ரஞ்சித் கருணாகரன், ஜூலியஸ் கிறிஸ்டோபர்,உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினிகாந்த் சண்முகம், சுண்டாட்டம் பட இயக்குநர் பிரம்மா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும்போது, “இந்தப் படம் பல போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு எங்களது பக்க பலமாக இருந்த சக்திவேல் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மற்றும் படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் இருவரும் திடீரென காலமானது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களுடைய கனவெல்லாம் இந்தப் படத்தின் மீதுதான் இருந்தது. அந்த இருவருடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதத்தால் இந்தப் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.
படத்தயாரிப்பில் இணைந்துள்ள அல்முரா நிறுவனத்தின் தலைவர் ராஜ்குமார் வேலுச்சாமி பேசும்போது, “நான் ஈராக், துபாய் என்று பரபரப்பாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன். நான் முதலில் ‘அட்டு’ படத்தைப் பார்த்த போது அது எனக்கு மிகவும் பிடித்தது. யார் இந்தப் படத்தை இயக்கியவர் என்று விவரங்களைத் தேடிய போது ரத்தன்லிங்கா அறிமுகமானார். நண்பர்களானோம்.
திறமை இருந்தாலும் அங்கீகாரம் இல்லாமல் பலரும் சினிமாவில் சிரமப்படுகிறார்கள் என்று அவரை வைத்து நான் அறிந்து கொண்டேன். இப்படி வருங்காலத்தில் இளைஞர்கள் திறமையோடு சிரமப்படக்கூடாது என்று ஸ்டுடியோ ஒன்று நாங்கள் ஆரம்பித்துள்ளோம். புதிய திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் அளிக்கும் தளமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் இதைத் தொடங்கி உள்ளோம்.
ரத்தன்லிங்கா அட்டு படத்திற்குப் பிறகு இந்த இரண்டாவது படம் எடுப்பதற்குள் ஐந்தாண்டுகள் ஓடி விட்டது. இனி ஆண்டிற்கு ஐந்து படங்கள் இயக்கும் அளவிற்கு அந்த வசதிகள் இவருக்குப் பக்கபலமாக இருக்கும். பல படங்கள் இந்த ஸ்டுடியோவில் பணியாற்றி வெளிவர வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் ஸ்டுடியோவின் நோக்கமே வளரும் இயக்குநர்கள் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான். அதன்படி ஒரு புது படத்தையும் தொடங்கி இருக்கிறோம். அட்டு படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரதாப் அந்த படத்தின் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் .இந்த லாக் படத்தில் போலீஸ் காவல்துறையில் பணியாற்றும் இளங்கோவனின் மகன் அர்ஜுன் நடிகராக அறிமுகம் ஆகிறார். எங்களது பயணம் தொடரும்” என்றார்.
படத்தின் இசையமைப்பாளர் விக்ரம் செல்வா பேசும் போது, “ரத்தன்லிங்காவின் திரைப்பட உருவாக்கம் அசல் தன்மையோடு இருக்கும். அதுதான் அவரது பாணியாக இருக்கிறது. இந்தப் படத்தின் கடைசி 10, 15 நிமிடங்கள் வசனங்களே இல்லாமல் காட்சிகள் நகரும். அந்த அளவிற்கு காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளார்” என்றார்.
கதாநாயகி மது ஸ்ரீ பேசும்போது, “இயக்குநர் ரத்தன்லிங்கா குறும்படம் எடுத்த போது அதில் நான் ஒரு சின்ன பெண்ணாக தாவணியுடன் தோன்றினேன். அடுத்ததாக அவர் அட்டு படம் எடுத்தபோது நான் தவற விட்டு விட்டேன். அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். இன்று கூட அதை நினைத்து வருத்தப்படுகிறேன். பின்னர் ‘மதுபானக்கடை’ படத்தில் நடித்த பிறகு 10 ஆண்டுகளுக்குள் எனது எடை கூடி குண்டாகிவிட்டேன்.
என்னைப் பார்த்துவிட்டு எடை குறைத்து வருமாறு சொன்னார் . இது ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படம். அதற்கேற்றபடி ஃபிட்டாக தயாராக ஒரு மாத அவகாசம் கேட்டேன். இயக்குநர் அவகாசம் கொடுத்து ஊக்கப்படுத்தினார். 30 நாட்களில் எடை குறைந்து அவர் முன் போய் நின்றேன். இயக்குநர் சொன்னபடி நடித்துள்ளேன். எனக்கு மட்டுமல்ல; நடித்திருக்கும் அனைவருக்கும் பளிச்சிடக் கூடிய வாய்ப்புகளை இயக்குநர் வழங்கியுள்ளார்” என்றார்.
இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் முத்தரசன் பேசும்போது, “திரைப்படம் என்பது மக்களிடம் சரியான புரிதலை ஏற்படுத்துவது மட்டுமல்ல விழிப்புணர்வும் ஏற்படுத்தக் கூடியது. விடுதலைப் போராட்ட காலத்திலும் சரி விடுதலைக்குப் பின்பும் சரி மாற்றங்களை மக்களிடம் ஏற்படுத்தியதில் அதன் பங்கு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன் வந்த பிறகுதான் அந்த வரலாறே நம் மக்களுக்குத் தெரிந்தது.
இயக்குநர் ரத்தன் லிங்கா சாதாரணமாக வந்துவிடவில்லை. குறும்படங்கள் எடுத்துள்ளார். திரைப்படம் இயக்கியுள்ளார். திரைப்படம் தயாரித்துள்ளார். இப்போது ஸ்டுடியோ தொடங்கி உள்ளார். இப்படிப் படிப்படியாக முயற்சிகள் மூலம் வளர்ந்து அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
புதிதாக ஆரம்பித்துள்ள ஸ்டுடியோவில் ஆண்டுக்கு ஐந்து படம் செய்ப இருப்பதாகச் சொன்னார்கள். அதில் வியப்பொன்றும் இல்லை. புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என்றது தான் பெரிய மகிழ்ச்சி” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, ”20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இயக்குநராவது என்பது சிரமம். சில ஆண்டுகள் உதவி இயக்குநராக இருந்து, பிறகு இணை இயக்குநராகச் சில ஆண்டுகள் பணியாற்றி, வெளியே வந்து கதை சொல்லி தயாரிப்பாளர் பிடித்து பிறகு தான் இயக்குநராக முடியும். ஆனால் இப்போதெல்லாம் எல்லாமே அவசரக்காலம். இரண்டு ஆண்டுகளுக்குள் படம் இயக்கி விட வேண்டும் என்று இன்று இருக்கிறார்கள். ஆனால், ரத்தன் லிங்கா படிப்படியாக குறும்படம், திரைப்படம் என்று வளர்ந்துள்ளவர். குறும்பட காலத்திலேயே அவரை இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், பிரதாப் போத்தன், மதன் போன்றவர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் நமக்கு நாமே துணை என்று பெண்களுக்கு கருத்து சொல்லியுள்ளார். பெண்களைக் காப்பாற்ற எந்த கதாநாயகர்களும் வர மாட்டார்கள். அவர்கள் தான் அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இருமல் தும்மல் போன்றது தான் காமமும். நம்மை மீறி வந்து விடும். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் தான் பெண்களுக்குப் பெண்களே தான் பாதுகாப்பு என்று இந்தப் படத்தில் கூறியிருக்கிறார். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும் போது , “படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும் போது பல்வேறு சிரமங்கள் இடைஞ்சல்களைக் சந்தித்துதான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதையும் தாண்டித் தான் வர வேண்டும். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் ” என்றார்.படக் குழுவினர் சார்பில் இந்த விழாவில் கேக் வெட்டி இயக்குநர் பாக்யராஜுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.