பரத் நடிப்பில் உருவான 50-வது படம் ‘லவ்.’ காதல் த்ரில்லர் சப்ஜெக்டில் ஆர் பி பாலா தயாரித்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படம் வரும் ஜூலை 28-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் 13.7. 2023 அன்று இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் நடிகர் பரத் பேசியபோது, ‘‘எனது 50-வது படத்தின் விழாவில் உங்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியது மகிழ்ச்சி. எனது சினிமா பயணத்தை துவங்கி வைத்த இயக்குநர் ஷங்கர் சார், தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படம் நடிக்கும்போது மிக உற்சாகத்துடன் வேலை பார்க்கிறோம். ஆனால், பட ரிலீஸ் என வரும் போது பெரும் பிரச்சனைகள் வந்து நிற்கிறது. மன உளைச்சல்கள் தருகிறது. சினிமா இரண்டாகப் பிரிந்து போயிருக்கிறது. ஆனால் நான் எப்போதும் என் வேலையை சிறப்பாக செய்து வருகிறேன். இந்த படம் எங்கேயும் உங்களுக்கு போரடிக்காது. சிறப்பான படம் பார்க்கும் அனுபவம் தரும்” என்றார்.
நடிகை வாணி போஜன் பேசியபோது, ‘‘இந்த படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. படத்தில் நானும் பரத்தும் நிறைய சண்டைகள் போட்டுள்ளோம், அடிகளும் பட்டது. அதெல்லாம் படத்திற்காக மட்டும் தான். படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது, உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்” என்றார்.
இயக்குநர் ஆர் பி பாலா பேசியபோது, ‘‘இப்போது படம் எடுப்பதை விட ரிலீஸ் செய்வதுதான் கஷ்டமாக இருக்கிறது. இசையமைப்பாளர் மரைக்காயர் படத்தில் வேலை செய்த போது இந்தப்படம் பற்றி சொன்னேன். அவர் எனக்காக இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். பரத் என்னை நம்பி 50வது படம் தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது, உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
பாடலாசிரியர் ஆ பா ராஜா பேசியபோது, ‘‘இயக்குநர் ஆர் பி பாலா பல படங்களுக்கு பாடல்கள் எழுதியவர். மிகச்சிறந்த பாடலாசிரியர். அவர் படத்தில் எனக்கு பாடல் எழுத வாய்ப்பு. பாடல் எழுதத் தெரிந்த இயக்குநரிடம் பணிபுரிவது மிகக் கடினம். முழுக்க தமிழில் பாட்டு எழுதசொன்னார். அதுவே மிக மகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் பாடல் அற்புதமாக வந்துள்ளது. பார்த்து, கேட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.
இசையமைப்பாளர் ரோனி ரஃபேல் பேசியபோது, ‘‘தமிழில் இது எனது முதல் படம். கேரளாவில் நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளேன். மலையாளப் படம் மூலம் தான் பரத் சாரும் பாலாவும் அறிமுகம். தமிழில் வேலை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. பரத் சாரின் 50வது படத்தில் வேலை பார்ப்பது மகிழ்ச்சி. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. படமும் நன்றாக வந்துள்ளது” என்றார்.