‘மக்களின் உயிர்களுடன் விளையாடும் ஆபத்தான வில்லனுக்கு ஆப்பு வைக்கிற ஹீரோ’ என்ற வழக்கமான கதைக்களத்தில், புதுமையாய் ஒன்றை முயற்சித்திருக்கிற படைப்பு!
இளைஞன் சத்யா குடிசைகள் நிறைந்த பகுதியில் தன் அம்மாவுடனும் தங்கையுடனும் வசித்து வருகிறான். அங்குள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஒரு கட்டத்தில் குடிசை மாற்று வாழ்விடத்திற்கு இடம் பெயர்கிறார்கள். சத்யாவின் குடும்பமும் அந்த நவீன அப்பார்ட்மென்ட்டில் குடியேறுகிறது.
புத்தம் புதிதாய் கட்டப்பட்ட அந்த அபார்ட்மென்ட் வீடுகளின் சுவற்றில் ஆணியடித்தால் சுவரே இடிந்து விழுகிற அளவுக்கு பலவீனமாக இருக்கிறது. கதவுகளின் கைப்பிடியைத் தொட்டால் அப்படியே கழன்று வருகிறது. வீட்டின் மேற்பகுதியில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிகிறது. கொஞ்சம் வேகமாக நடந்தால் படிகள் உடைகிற அளவுக்கு, தரைப்பகுதி சிதைகிற அளவுக்கு மோசமான கட்டமைப்பு.
அதையெல்லாம் பார்த்து சத்யாவின் அம்மா கொந்தளிக்க, தொடைநடுங்கியான சத்யா, ‘அதெல்லாம் அப்படி இப்படித்தான் இருக்கும்; நாமதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழ பழகிக்கணும்’ என சாந்தப் படுத்துகிறான்.
நாட்கள் நகர நகர, ‘அந்த வீடுகளால் ஒட்டுமொத்த மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்’ என்பதை உணர்கிறான்.
தரமற்ற முறையில் கட்டப்பட்ட அந்த அப்பார்ட்மென்ட் தரைமட்டமாகும் முன் அத்தனை பேரையும் காப்பாற்றுகிற பொறுப்பு சத்யாவிடம் வந்து சேர்கிறது. அதற்காக தயாராகிறான். கேடுகெட்ட அரசியல் பலமிக்கவர்களிடம் மோத வேண்டியிருக்கிறது; மோதுகிறான்.
அதிர்ந்து பேசக்கூட தயங்குகிற சத்யாவுக்கு அத்தனை சவால்களையும் சந்திக்கிற ஆற்றல் வந்தது எப்படி என்பது கதையிலிருக்கும் சுவாரஸ்யம்; அதுவே படத்தின் புதுமை. இயக்கம் ‘மண்டேலா’ தந்த மடோன் அஸ்வின்
எது நடந்தாலும் ‘நமக்கேன் வம்பு’ என ஒதுங்கி போகிற, எது நடந்தாலும் பொறுத்துக் கொள்கிற, சகித்துக் கொள்கிற அப்பாவி இளைஞனாக சிவகார்த்திகேயனின் பாத்திரப் படைப்பே ‘அட’ போட வைக்கிறது. பெரிய ஹீரோவான சிவகார்த்தி அப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் துணிச்சலுக்காக ஸ்பெஷல் சல்யூட்!
காமிக்ஸ் கதைக்கு கன்டென்ட் எழுதி, படம் வரைகிற வேலை செய்து வாழ்நாளை நகர்த்துகிற கலைஞனாக சிவகார்த்தி தான் ஏற்றிருக்கும் எளிய கதாபாத்திரத்துக்கு இயல்பான நடிப்பால் உயிரோட்டம் தந்திருக்கிறார். காற்றில் அசரீரி குரல் கேட்கக் கேட்க அதன்படி நடப்பது, அதனால் சிக்கல்களைச் சந்திப்பது என நீளும் காட்சிகளில் அவரிடமிருந்து வெளிப்பட்டிருப்பது தேர்ந்த நடிப்பு!
தன் பாணியில் சிரிப்பூட்ட படத்தில் பல காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதை உணர்ந்து நடித்து கலகலப்பூட்டுகிறார் யோகிபாபு!
பல வருட இடைவெளிக்குப் பின் திரையில் ‘தேன் குரல்’ சரிதா. கனமான உடம்பைச் சுமந்து வலம்வருகிற அவரது நடிப்பும் கனம்!
மனிதாபிமானமற்ற அரசியல்வாதியாக இயக்குநர் மிஷ்கின். தான் ஏற்றிருப்பது வில்லன் வேடமா, காமெடி வில்லன் வேடமா என்ற குழப்பத்தில் நடித்திருப்பது போலிருந்தாலும் ரசிக்க முடிகிறது.
மிஷ்கினோடு மிங்கிளாகித் திரிகிற சுனிலின் நடிப்பு பாகவுந்தி!
படத்தின் கவன ஈர்ப்பு சங்கதி படம் நெடுக காற்றில் கலந்து ஒலிக்கிற விஜய் சேதுபதியின் கவர்ந்திழுக்கிற குரல்!
முக்கியமான விஷயம் படத்தில் ஹீரோயின் என்ற பெயரில் அதீதி ஷங்கரும் இருக்கிறார்.
பின்னணி இசையில் காட்சிக்குக் காட்சி வித்தியாசம் காட்டியிருக்கிறார் பரத் சங்கர். அதிதி ஷங்கர் பாடி ஆல்பத்தில் ஹிட்டடித்த ‘வண்ணாரப் பேட்டையில’ பாடல் ஆடலின்றி, ஆர்ப்பாட்டமின்றி கடந்துபோவது சற்றே ஏமாற்றம்.
ஒளிப்பதிவின் நேர்த்தியையும் பாராட்டலாம்.
குறைகள் இல்லாமலில்லை; அதையெல்லாம் தாண்டி மாவீரனிடம் இருக்கிறது பலம்!