கதையாழத்துக்கு பேர்போன மலையாள மண்ணிலிருந்து பிரித்விராஜ் சுகுமாரனும் மோகன்லாலும் பிரமாண்டத்தை நம்பி களமிறங்கியிருக்கும் ‘எம்புரான்.’
கேரள முதலமைச்சர் பி கே ஆர் மறைந்தபின், மாநிலத்தை போதையில் மிதக்கவிட முயற்சித்த அவரது மருமகனைக் கொன்று, அவரது மகன் ஜிதினிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்து காணாமல் போவார் ஸ்டீபன் நெடும்பள்ளி. ‘லூசிபர்’ இப்படியாக முடிவுக்கு வர, இந்த இரண்டாம் பாகம் எம்புரானில்…
நல்லாட்சி தருவார் என்ற எதிர்பார்ப்பைக் குழி தோண்டி புதைத்துவிட்டு ஊழலில் பெரும்புள்ளியாகிறார் ஜதின். அந்த குற்றங்களிலிருந்து தப்பிக்க மதவாதக் கட்சியொன்றுக்கு கேட் திறந்துவிடுகிறார். மதவாதத்தின் கை ஓங்கினால் கேரளாவுக்கு ஆபத்து என்கிற நிலைமை.
இது ஒருபக்கமிருக்க சர்வதேச போதைப் பொருள் தாதாக்களால் உலகளவில் பிரச்சனைகள் உருவாகிறது.
இரண்டையும் ஒரு கை பார்ப்பது என தீர்மானித்து ஃபிரேமுக்குள் வருகிற ஸ்டீபன் நெடும்பள்ளி அடித்து ஆடுகிற ஆட்டமும் புத்திசாலித்தனமான நகர்வுகளுமே திரைக்கதை…
ஸ்டீபன் நெடும்பள்ளியாக மோகன்லால். அவர் திரையில் தோன்றுகிற அத்தனை காட்சிகளுக்குமே ஸ்லோமோஷன், அதிரவைக்கும் இசை என ஃபில்ட் அப் ஏராளம் தாராளம். சர்வதேச தாதாக்களை வீழ்த்தும் விதம் படு மிரட்டலாக இருக்க, கேரள மண்ணில் கால் பதித்தபின் செய்யும் சம்பவங்கள் அத்தனையும் ஆக்சன் அதகளமாய் விரிகிறது; அணுகுண்டு குடோன்களுக்கு ஒரே நேரத்தில் தீமூட்டியது போன்று திரைக்களம் பற்றியெறிகிறது.
முதலமைச்சராக வருகிற டொவினோ தாமஸ் பல படங்களில் பார்த்துப் பழகிய கார்ப்பரேட் வில்லன்களின் ஜெராக்ஸ் போன்ற கெட்டப்பிலிருக்கிறார்; அரசியல் கள வில்லத்தனம் இன்னும் கொஞ்சம் வீரியமாக இருந்திருக்கலாம். என்றாலும் செயல்பட்டவரை நடிப்பில் குறையில்லை.
முதலமைச்சராக இருக்கிற தம்பியின் அதட்டல் உருட்டலுக்கு அடிபணியாமல், மக்கள் செல்வாக்கைப் பெற துணிச்சலாக ஸ்கெட்ச் போட்டு செயல்படுத்தும் நெஞ்சுறுதியால் அட போட வைக்கிறார் மஞ்சு வாரியர்.
இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன் ஆக்சன் ஏரியாவில் அட்டகாச அட்டனன்ஸ் போட்டிருக்கிறார்.
சுராஜ் வெஞ்ஞாரமூடு, இந்திரஜித் சுகுமாரன், சுகந்த் கோயல், ஃபாசில், பைஜு சந்தோஷ் என பலரும் நடிப்புப் பங்களிப்பை பலமாகப் பந்திவைக்க, நம்மூர் கிஷோரும் கெத்தாக வந்து போகிறார்.
கேரளாவில் தொடங்கி, வட இந்தியாவுக்கு பறந்து, ஆப்பிரிக்காவில் பாய்ந்து, லண்டன், எகிப்து என தாவும் கதை நிகழ்விடங்களை அந்தந்த மண்ணுக்கேற்ற ஒளியுணர்வோடு தன் கேமராவில் சுருட்டியிருக்கிற ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், சண்டைக் காட்சிகளிலும் அரசியல் கூட்டங்களிலும் இருக்கிற பிரமாண்டத்தை பல மடங்காக பரிமாறியிருக்கிறார்.
காட்சிகளில் இருக்கிற வார்த்தைகளில் விவரிக்க முடியாத பரபரப்புக்கும் ஆக்சன் அதிரடிக்கும் 100 சதவிகிதம் எனர்ஜி ஏற்றியிருக்கிறது தீபக் தேவின் பின்னணி இசை.
ஸ்டன்ட் சில்வாவின் ஆக்ஷன் கோரியோகிராபியை அட்டகாசமாக இருக்கிறது; அனல் பறக்கிறது, ரத்தம் தெறிக்கிறது என எப்படி வேண்டுமானாலும் வர்ணிக்கலாம்; அந்தளவுக்கு மனிதர் சுழன்றிருக்கிறார்.
வன்முறையைத் தொழிலாக செய்பவர்கள், மதக் கலவரக் காரர்கள் அரசியல் களத்தை ஆக்கிரமிக்கும் ஆபத்தான சூழ்நிலையை போகிற போக்கில் விவரிக்கும் திரைக்கதை, எந்தவொரு காட்சியிலும் குறையாத பிரமாண்டம், மூன்றாம் பாகத்துக்கான பட்டாசான லீடு என ‘மேக்கிங்’கிற்காக போட்டிருக்கும் உழைப்பு எம்புரானை இந்தியளவில் திரும்பிப் பார்க்க வைக்கலாம். ஒரு படத்தின் வெற்றியென்பது அது மட்டுமல்ல; ஆடியன்ஸை திரும்பத் திரும்ப பார்க்க வைப்பது.
எம்புரான் _ பிரமாண்டத்தை நம்புறான்!
-சு.கணேஷ்குமார்