லோகா: சாப்டர் 1 சந்திரா சினிமா விமர்சனம்

ஹாலிவுட் ஸ்டைல் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் மல்லுவுட் தந்திருக்கும் படம்.

மனிதர்களை கடத்தி உடல் உறுப்புகளைத் திருடும் கும்பலால் பரபரப்பாக இருக்கிற அந்த நகரத்தில் குடியேறுகிறார் சந்திரா என்ற இளம்பெண். அவளது அழகில் மயங்கும் எதிர் வீட்டிலிருக்கும் இளைஞன் சன்னி அவளுடன் தொடர்பு உருவாக்கிக் கொண்டு பேசிப் பழகுகிறான். சில நாட்களில் உறுப்பு திருடும் கும்பல் சந்திராவை கடத்துகிறது. சன்னி அந்த கும்பலிடமிருந்து அவளை காப்பாற்ற நினைக்கிறான். ஆனால், கடத்தியவர்களை சந்திராவிடமிருந்து காப்பாற்றும்படி நிலைமை மாறுகிறது. அந்தளவுக்கு சந்திரா அவர்களை அதிரடியாக தாக்கி மீண்டு வருகிறாள். சன்னி அதைப் பார்த்து அவள் சாதாரண பெண்ணில்லை; அதீத சக்தி படைத்தவள் என்பதை புரிந்து கொள்கிறான்.

அவள் யார், எதற்காக வந்திருக்கிறாள் என்ற கேள்விகள் அவனுக்குள்ளும் படம் பார்க்கும் நமக்குள்ளும் உருவாகிறது. அதற்கான பதில்களைத் தந்து வேகமெடுக்கிறது திரைக்கதை…

சந்திராவாக கல்யாணி பிரியதர்ஷன். அவரது உடல்வாகு சூப்பர் ஹீரோ பாத்திரத்துக்கு சரியாக அமைந்திருக்க, எதிரிகளை தாக்குகிற ஆக்சன் அதிரடியில் உடல்மொழி அசத்துபவர், மற்ற உணர்வுகளையும் கதையின் தேவைக்கேற்ப நடிப்பில் கொண்டு வந்து அப்ளாஸ் பெறுகிறார்.

சந்திராவை சாதாரண பெண் என்று நினைத்து காதலுடன் பழகுவது, சூப்பர் பவர் கொண்டவள் என்று தெரியும்போது மிரட்சியடைந்து மயங்கி விழுவது என ரசிக்கும்படி நடித்திருக்கிறார் சன்னியாக வருகிற நஸ்லென். அவரது நண்பர்கள் இருவரும் காமெடி பங்களிப்புக்கு உதவுகிறார்கள்.

டொவினோ தாமஸ், இந்த படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் என கேமியோ பங்களிப்பாக எட்டிப் பார்ப்பவர்களும் அவரவர் பங்கிற்கு அதிரடி கிளப்புகிறார்கள்.

உறுப்பு திருடும் தரப்புக்கு உடந்தையாக இருந்தபடி காட்டும் வில்லத்தனம், சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும்போது காட்டும் வெறித்தனம் என கவனிக்க வைக்கிறார் சாண்டி மாஸ்டர்.

கதையின் ஒவ்வொரு கட்டமும் பரபரப்பாக இருக்க தனது பின்னணி இசையால் விறுவிறுப்பை பல மடங்கு ஏற்றியிருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய்.

சம்பவங்கள் நிகழும் நேரத்திற்கேற்ற ஒளியுணர்வைக் கடத்தும்படி கேமரா கோணங்களை அமைத்து காட்சிகளை பிரமாண்டமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி. ஆர்ட் டைரக்டரின் உழைப்பு படத்திற்கு பெரும் பலம்.

கெட்டவர்களை அழிக்க வந்த சூப்பர் ஹீரோ(யின்) என்பதோடு கதையை முடிக்காமல்,

பல காலம் முன் அரசரால் கொல்லப்படுகிற மக்கள், அவர்களின் வாரிசான ஒரு சிறுமிக்கு கிடைக்கிற அதீத சக்தி என பிளாஷ்பேக் வைத்து அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர் டோம்னிக் அருண்.

அடுத்த பாகத்திற்கான லீடு, அதில் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என நம்ப வைக்கின்றன.

லோகா: சாப்டர் 1 சந்திரா _ மலையாள சினிமாவின் தனித்துவமான படங்களின் வரிசையில் முந்துறா!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here