சமூக அக்கறை படங்களின் வரிசையில் ‘பொருள்‘ பொதிந்த படைப்பு!
பெற்றெடுத்த குழந்தையை வளர்க்க இயலாத வறுமைச் சூழல், முறையான திருமண உறவுக்கு முன் கருத்தரித்து பிறந்த குழந்தை… இப்படியான காரணங்களால் குழந்தைகள் குப்பைத் தொட்டி உள்ளிட்ட இடங்களில் கைவிடப்படுவதை, அங்கிருந்தெல்லாம் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆதரவற்றோர் இல்லங்களில் வளர்க்கப்படுவதை கேள்விப்படுகிறோம்; பார்க்கிறோம்.
அப்படி கைவிடப்பட்ட ஒருசில குழந்தைகளை, வீடு வாசலின்றி சாலையோரம் தங்கி வாழ்நாளைக் கழிக்கிற ஒரு நல்ல மனிதர் எடுத்து வளர்க்கிறார். அந்த குழந்தைகள் சிறார் பருவத்தை எட்டியபின் பிச்சையெடுக்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
அந்த பரிதாபச் சூழலில் வளர்கிற பெண் குழந்தையொன்று, பருவமடைந்தபின் காமப் பசியாளர்களுக்கு விருந்தாகிற கொடுமையும் தொடர்கிறது. அப்படி ஒருநாள் அந்த பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகும்போது, அவளுடன் வளர்கிற ஒரு சிறுவன் கொதித்துக் கொந்தளிக்கிறான். காமவெறியர்களை தாக்குகிறான்.
அந்த துணிச்சலால் அவனுக்கு, ஊரில் அரசியல் செல்வாக்குள்ள தாதாவிடம் வேலைக்குச் சேர்கிற வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பு அவன் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதே பரபரப்பான கதையோட்டம்…
கதாநாயகனுக்கு ‘பொருளு’ என்ற பெயர் வைக்கப்படுவதும் அதற்கான காரணமும் சுவாரஸ்யம். இயக்கம் கே. ஏழுமலை
இயக்குநரே கதைநாயகனாகவும் வருகிறார். மனதளவில் மென்மையானவன், உடலளவில் தன் முதலாளிக்காக குற்றங்களை குறையின்றிச் செய்பவன் என உருவாக்கப்பட்ட கனமான பாத்திரத்துக்கு கச்சிதமாக நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார். தன்னுடன் ஆதரவற்றவர்களாக வளர்ந்தவர்களை சொந்த தம்பியாக நினைத்து பாசம் காட்டுவது, நன்றாகப் படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி மனநிறைவடைவது, தன் உயிருக்கு ஆபத்து என்பதால் தன்னை நேசித்த பெண்ணிடமிருந்து விலகுவது என நீளும் காட்சிகள் நெகிழ்ச்சி!
பிராமண குடும்பத்துப் பெண்ணாக கதைநாயகனின் காதலியாக வருகிறவர், ஆதரவற்ற சிறுவர்கள், அவர்களில் ஒருவராக வருகிற அந்த இளம்பெண், மாறன் என்ற பெயரில் அரசியல்வாதியாக வருகிறவர், கதைநாயகனின் தம்பிகளை கொன்று தீர்க்கிற வெறியோடு வலம் வருகிற முரட்டு மீசைக்காரர், அவரது அல்லக்கைகள் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கேற்ற தேர்வு!
கால்கள் செயல்படுவதில் குறையிருந்தாலும், ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்க்கிற அந்த மாற்றுத் திறனாளி (‘பேராண்மை’ வேலு) கதாபாத்திரமும் அவரது நடிப்பும் நிறைவு!
‘தீப்பெட்டி’ கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அவரது இளமையும் படத்தின் சில அம்சங்களும் ‘இது சிலபல வருடங்கள் முன் எடுக்கப்பட்ட படம்’ என்பதை சொல்கின்றன.
‘காதலும் ரவுடித்தனமும் பண்ணக்கூடாது; பண்ணா விடக்கூடாது’ என்பதுபோல் ஆங்காங்கே வந்துவிழும் வசனங்கள் கூர்மை!
செளந்தர்யன் இசையில் துள்ளாட்டம் போட‘குத்துக் குத்து கும்மாங்குத்து’, மனதை வருட ‘ஏனோ நெஞ்சோடு பாரம் கூடுதே’, கருத்துக்களை கடத்த ‘என்னடா இந்த பூமி சொல்லுடா என் சாமி’ என பாடல்களில் வெரைட்டிக்கு பஞ்சமில்லை!
பாரதியாரின் ‘ஓடி விளையாடு பாப்பா’ பாடல், வில்லங்கத்தை விலைக்கு வாங்கும்படி ‘ஓடி விளையாடும் பாப்பா; இந்த பெண்ணுக்கு பிடிக்காதே தாப்பா’ என்றெல்லாம் வரிமாறி உருமாற அதற்கான துள்ளலிசையும் கலர்ஃபுல்லான நடனமும் கிறங்கடிக்கிறது!
‘ஏனோ நெஞ்சோடு பாரம் கூடுதே’ பாடலில் பின்னிப் பிணைந்திருக்கிற, ‘அனுபவம் என்பது காதலுக்கு கிடையாதே; அப்படி இருந்தால் அது காதலே கிடையாதே’ என்ற வரிகளில் தெரிகிறது எழுதியவரின் தனித்துவம் !
உருவாக்கத்தில் குறைகள் இருந்தாலும், ‘வளர்த்து ஆளாக்க வக்கில்லைன்னா பிள்ளை குட்டிகளை பெத்துக்காதீங்கடா; பெத்து அனாதையா தவிக்க விடாதீங்கடா’ என சமூகத்தின் மீது கருத்துப் பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கும் இயக்குநரின் அக்கறையை பாராட்டுவதே அறம்!