அந்த கிராமத்தில் சமூகக் கேடுகளை முழுநேரத் தொழிலாக செய்கிற மூன்று பேர். அதிகார பலம், பணபலம், அடியாள் பலம் கொண்ட அவர்களைத் தட்டிக் கேட்கிற ஒரு இளைஞன். அந்த இரு தரப்புக்கும் இடையே நடக்கும் மோதல்களும் விளைவுகளுமே கதை… இயக்கம் கே. ராஜரிஷி
வீரமிக்க இளைஞன், காவல்துறை அதிகாரி என இரண்டு வேடங்களில் மிரட்டல் தோற்றத்தில் வருகிற கதைநாயகன் ஹரிகுமார் அநியாயத்துக்கு எதிராக ஆவேச அவதாரம் எடுப்பது, சண்டைக் காட்சிகளில் சிங்கமாய் சீறுவது என வெரைட்டி காட்டியிருக்கிறார். டூ வீலருக்கு ஸ்டிக்கர் ஒட்டியது போன்ற அவரது தாடி கவர்கிறது. தன் சகோதரனைக் கொன்றவர்களை பழிவாங்கும்போது ஹரிகுமார் வெறிக்குமார்!
கிராமத்துப் பெண் வேடத்தில் நாயகி மாதவிலதா கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.
எம்.எல்.ஏ.வாக சுமன், சாராய சாம்ராஜ்ய அதிபதியாக பருத்திவீரன் சரவணன், கந்துவட்டிப் பேர்வழியாக காளையப்பன்… மூவரின் வில்லத்தனமும், ராதாரவி, டெல்லி கணேஷ்,எம்.எஸ். பாஸ்கர், இயக்குநர் ராஜ்கபூர், ஓ.ஏ.கே சுந்தர், கெளசல்யா, பருத்தி வீரன் சுஜாதா, கஞ்சா கருப்பு, பெசன்ட் நகர் ரவி என சீனியர் நடிகர், நடிகைகளின் பங்களிப்பும் கதையோட்டத்தின் பலம்!
வஸ்தாது வஸ்தாது’ பாடலுக்கு, அசத்தலான வளைவு நெளிவுகளுக்குச் சொந்தக்காரரான அஸ்மிதாவின் ஆட்டம் இளைஞர்களின் ஹார்மோனை கண்டிப்பாய் சூடேற்றும்!
இளையராஜாவின் இசையில் கல்யாணம் செஞ்சு வச்ச மீனாட்சிக்கு பாடலில் வழியும் இனிமை மனதுக்கு இதம். ‘உலகாளும் நாயகியே’ பாடலிலும், இளையராஜா பாடியிருக்கும் ‘மனசுல பெரியவன்தான் மதுரக்காரன்’ பாடலிலும் உற்சாகம் தெறிக்கிறது!
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, படத்தை பொதுபோக்கு அம்சங்களுடனும் பரபர விறுவிறு காட்சிகளுடனும் கொண்டு சென்றிருப்பது கமர்ஷியல் சினிமா ரசிகனை திருப்திப்படுத்தும்!


