விளையாட்டுத்தனமாக காதலிப்பது, சந்தர்ப்பத்துக்கேற்ப காதலிப்பது, உணர்வுபூர்வமாக அணுகாமல் உணர்ச்சி வேகத்தில் காதலிப்பது என இன்றைய தலைமுறை காதல் என்கிற பெயரில் அடிக்கும் கூத்துகளின் மினி தொகுப்பு.
கல்லூரி மாணவி இசையை சக மாணவன் ஹானஸ்ட் ராஜ் நான்கு வருடங்களாக காதலிக்கிறான். ‘நீ என்னை காதலிக்கவில்லை; காதல் என்ற பெயரில் டார்ச்சர் செய்தாய்’ என்று சொல்லி அவள் அவனிடமிருந்து விலகுகிறாள்.
கொஞ்ச காலம் கழித்து அவள் வீட்டில் அவன், வீட்டு வேலைகள் செய்கிற ‘ஹவுஸ் கீப்பிங்’ பணியில் இணைகிறான். இப்போது அவனும் அவளும் முதலாளி தொழிலாளி. இருந்தாலும் அவள் அவளிடம் சகஜமாகப் பழகுகிறாள். அதை அவன் காதல் என்று எடுத்துக் கொண்டு மீண்டும் டார்ச்சர் செய்யத் துவங்குகிறான்.
அவள் வேறொருவனை காதலித்து, பழகிப் பார்த்து மனம் ஒத்துப்போய் கல்யாணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறாள். அப்படியான சூழலில் பழைய காதலனின் டார்ச்சர் அவள் நிம்மதியைக் கெடுக்கிறது. அதை அவள் எப்படி சமாளிக்கிறாள் என்பதே கதையோட்டம்… அவள் யாருடன் இணைகிறாள் என்பது கிளைமாக்ஸ்.
இசையாக பிக்பாஸ் லாஸ்லியா. எலும்பும் தோலுமாக மாறி களையிழந்த தோற்றத்திலிருக்கும் அவர் காதல் என்ற பெயரிலான டார்ச்சரை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொந்தளிப்பது, தன்னிடம் வேலைக்குச் சேர்ந்த அதே டார்ச்சர் நபருடன் அன்பாகப் பழகுவது, ஒரு இளைஞனுடன் ‘டேட்டிங்’ செய்து கல்யாணத்தை நோக்கி நகர்வது, அவன் இன்னொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகிய விவரம் தெரிந்ததும் கொதித்துக் கொந்தளிப்பது, டார்ச்சர் காதலன் பக்கம் மீண்டும் பார்வையைத் திருப்புவது என லாஸ்லியாவை லூஸ்லியாவாக மாற்றியிருக்கும் விதம் எரிச்சலூட்டினாலும், அவர் தன் கதாபாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடித்திருப்பதில் துளியும் குறையில்லை.
ஹானஸ்ட் ராஜாக யூடியூபர் ஹரிபாஸ்கர். தன்னைக் காதலிக்காத பெண்ணை துரத்தித் துரத்திக் காதலிப்பதும், அவள் மனதில் இடம்பிடித்தவனை போட்டுப் பொளப்பதுமாய் அவருக்கான வேலையை பொருத்தமான அப்பாவித்தனத்துடன் அரங்கேற்றியிருக்கிறார். பலரைப் போல் நடித்திருப்பதால் அவரது சொந்த நடிப்பு எது என்பது பிடிபடவில்லை.
ஹீரோயினுடன் டேட்டிங் செய்கிற பிக்பாஸ் ராயனின் ஹேண்ட்சம் லுக் கவர்கிறது. நடிப்பு கச்சிதம்.
ஹீரோவின் அப்பாவாக தேர்ந்த நடிகர் இளவரசு. தூங்குவதுபோல் நடிக்கிற மகன் முன் அம்மணமாய் ஆடும்போது அய்யோ பாவம் என்றிருக்கிறது.
ஹீரோவுக்கு நண்பனாக ஷாரா. மனம்போன போக்கில் நடந்துகொள்ளும் நண்பனுக்கு ஆலோசனைகள் அள்ளிவிட்டு, எதுவும் ஒர்க் அவுட் ஆகாமல் அவஸ்தைகள் அனுபவிப்பதை ஓரளவு ரசிக்க முடிகிறது.
இன்னபிற நடிகர் நடிகைகள் தங்கள் பங்களிப்பை தேவைக்கேற்ப வழங்கியிருக்க, ஓஷோ வெங்கட்டின் பின்னணி இசையிலிருக்கும் இரைச்சல் வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகிறது. ஒளிப்பதிவில் எளிமையும் நேர்த்தியும் தெரிகிறது.
‘பாய் பெஸ்டி’, ‘டேட்டிங்’, ‘லிவிங் ரிலேசன்ஷிப்’ என இந்த தலைமுறையின் தாறுமாறான பழக்க வழக்கங்களை மையப்படுத்தி, ‘லவ் யூ’ என்பதற்கும் ‘ஐ லவ் யூ’ என்பதற்குமான வித்தியாசத்தை சொல்லிக் கொடுத்திருக்கும் இயக்குநர் அருண் ரவிச்சந்திரன், ‘திரைப்படம் எடுப்பது எப்படி?’ என நல்லபடியாக சொல்லிக் கொடுப்பவர்களிடம் அனுபவம் பெற வேண்டியது அவசியம்!


