ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் பவர்ஃபுல்லானவர்கள்தான். அப்படியொரு பவர்ஃபுல்லான ‘சதுரங்க வேட்டை‘க்காரர் இளைஞன் ராவணன். அவன் தன்னுடன் நான்கு பேரை கூட்டு சேர்த்துக்கொண்டு விதவிதமாக ஸ்கெட்ச் போட்டு மக்களை ஏமாற்றுகிறான். அப்படி ஏமாற்றி சேர்த்த பணம் ஒரு கோடி ரெண்டு கோடியல்ல; பத்தாயிரம் கோடி.
அந்த குற்றங்களுக்கு சன்மானமாக தூக்கு தண்டனையைச் சந்திக்கப் போகிற ராவணன், தான் செய்த குற்றங்கள் என்னென்ன என்பதை விவரிப்பதாக விரிகிறது திரைக்கதை… அந்த கிளைமாக்ஸ் டிவிஸ்ட் ‘அடடே’ ரகம்.
படத்தை இயக்கியிருக்கிற கார்த்தீஸ்வரனே கதைநாயகன் ராவணனாகியிருக்கிறார். விதவிதமாக கெட்டப் போட்டுக்கொண்டு 250 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன், 1 லட்சம் கட்டினால் 2 லட்சம் ரிட்டர்ன் என்பதுபோல் சகட்டுமேனிக்கு ஆபர்களை அடித்து விடுகிறார். அத்தனையும் சுவாரஸ்யம். நடிப்பிலும் குறையில்லை.
பெரிய பிளேயர் ஒருவர் அடித்து விளையாடும்போது பந்து பொறுக்கிப் போடும் சிறுவர்களைப் போல் பங்காற்றியிருக்கிறார்கள் ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட நான்கு பேர். அடித்த பணத்தில் அவர்களுக்கும் சமமான ஷேர் என கதைநாயகன் முடிவெடுக்கும்போது ‘நமக்கு இப்படியொரு முதலாளியைக் கொடுக்கவில்லையே’ என கடவுள் மீது வெறுப்புணர்ச்சி உருவாகிறது.
மோசடிப் பேர்வழி கமிஷனர் தோளில் கைபோட்டுப் பேசுகிற அளவுக்கு உலகமகா செல்வாக்கு மிக்கவனாக மாறியிருப்பதை பார்த்து சற்றே மிரண்டாலும், அவனை எப்படியாவது சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் காவல்துறை உயரதிகாரியாக வருகிற ஸ்ரீநிதி. அவர் கைது செய்து நாலு போடு போடுவார் என்றால் குற்றவாளிகளுக்கு குஷி மூடு வர வாய்ப்பிருக்கிறது. அந்தளவுக்கு அம்மணி பளபள முகமும் பப்பாளி தேகமுமாக களமாடுகிறார். கவர்ச்சியான அம்சங்கள் ஒரு பக்கமிருக்க, மேடம் போலீஸ் அதிகாரிக்கான கம்பீரத்திலும் குறை வைக்கவில்லை.
வீடியோ காலில் ஆபாச அசைவுகளைக் காட்டும் பெண்ணிடம் மயங்கி அக்கவுண்டில் இருக்கும் பணத்துக்கு ஆப்பு வைத்துக் கொள்பவராக பிளாக்பாண்டி, கட்டும் பணம் பல மடங்காக திரும்பக் கிடைக்கும் என்ற வசியப் பேச்சுக்கு மயங்கி லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்து அதிர்ச்சிக்கு ஆளாகும் லிவிங்ஸ்டன் என இன்னபிறரிடமிருந்து கதைக்கு தேவையான நடிப்பு கிடைத்திருக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் அவரது தந்தை தேவா பாடும் ‘இது சக்ஸஸு பார்ட்டி’ பாட்டும் அதற்கு ஹீரோவுடன் அஸ்மிதா போடும் குத்தாட்டமும் உற்சாகத்துக்கு கேரண்டி. நடிகர் ஜெய் ஒரு பாடலை ரசிக்கும்படி பாடியிருக்கிறார். சைந்தவி குரலில் கடந்தோடும் பாடல் மனதுக்கு இதம். பாடல்களின் வரிகள் கருணாகரனின் சிந்தனையிலிருந்து சிந்தியவை. பின்னணி இசை சில காட்சிகளுக்கு பரவாயில்லை ரகம்; சில காட்சிகளுக்கு அளவுக்கு மீறிய அதிரடி ரகம்.
தன் பங்களிப்பை பக்காவாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ்.
மனிதர்களிடம் பேராசை இருக்கும்வரை மோசடிக்காரர்களின் காட்டில் அடைமழைதான். இந்த யாராலும் மறுக்க முடியாத உண்மையை சமூக அக்கறையுடனும் அலுப்பு சலிப்பில்லாமல் பார்க்கும்படியான காட்சிகளுடனும் எடுத்துச் சொல்லியிருக்கிற ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படக்குழுவை பாராட்டுவது நம் பொறுப்பு!
-சு.கணேஷ்குமார் 


