‘சபாபதி’ சினிமா விமர்சனம்

வழக்கமாக காட்சிக்கு காட்சி சிரிப்பு மூட்டும் சந்தானம் சீரியஸ் மோடுக்கு மாற முயற்சித்திருக்கும் படம்.

‘எல்லாமே விதிப்படிதான் நடக்கும்’ என கருத்து சொல்லும் கதை. ‘நேர்மையா இருந்தா இன்னைக்கு இல்லாட்டியும் என்னைக்காச்சும் நல்லது நடக்கும்’ என எடுத்துரைக்கும் திரைக்கதை…

ஒழுக்கம் பாதி, நேர்மை மீதி என்றிருக்கிற இளைஞன் சபாபதி. நன்கு படித்தும் தன்னிடமுள்ள திக்குவாய் பிரச்சனையால் வேலை கிடைக்காமல், மன உளைச்சலுக்கு ஆளாகி விரக்கியில் குடித்துக் கூத்தடிக்கிறார். அந்த நேரத்தில் அவர் கையில் வந்து சிக்குகிறது பெட்டியில் அடுக்கப்பட்ட பலகோடி ரூபாய்.

அதை உரியவரிடம் ஒப்படைக்கப் போனால், எக்குத்தப்பு சம்பவம் நடந்து அந்த பணம் மீண்டும் சந்தானத்திடமே சரணடைகிறது. சரி, அதை செலவழித்து குடும்பத்தை குதூகலப்படுத்தலாம் என்றால் அந்த ஆப்சனுக்கும் விதி வைக்கிறது ஆப்பு!

அந்த பணம் யாருடையது? பணத்தால் நேரும் சிக்கல்களிலிருந்து சந்தானம் எப்படி மீண்டார்? ‘சபாபதி’யின் சாராம்சம், காட்டியிருக்கிற சமாச்சாரம் அம்புட்டுத்தான்… இயக்கம் ஆர். சீனிவாச ராவ்

தனது பாத்திரத்தின் தன்மை திக்குவாய் என்பது மட்டுமின்றி, அரைக்கிறுக்கனாகவும் உருவாக்கியிருப்பதால் எந்த காட்சியில் எப்படி நடிப்பது என்ற முடிவுக்கு வரமுடியாமல் ‘திக்கி’த் திணறுவது போலிருக்கிறது சந்தானத்தின் நடிப்பு!

சந்தானத்துக்கு ஜோடியாக பிரீத்தி வர்மா. நடிப்புக்கெல்லாம் வேலையில்லை. தோன்றுகிற ஒருசில காட்சிகளில் அவரது ஹோம்லி லுக்  சற்றே வசீகரிக்கிறது.

சந்தானத்தின் அப்பாவாக எம்.எஸ். பாஸ்கர். ஏற்ற பாத்திரத்தில் வாழ்கிற மனிதர் இந்த படத்தில் வழிந்திருக்கிறார். அந்தளவுக்கு அசட்டுப் பேர்வழியாய் ஒரு கதாபாத்திரம்!

குக் வித் கோமாளி’ புகழுக்கு அறிமுகப்படம். கையில் புட்டியோடு இரண்டு காட்சிகளில் எட்டிப் பார்ப்பதோடு சரி… படத்தில் புகழ் நடித்திருக்கிறார் என்பதைவிட குடித்திருக்கிறார் என்று சொல்வது பொருத்தம்.

சாம் சி.எஸ். இசையில், ‘மயக்காதே மாயக்கண்ணா’ கொலு பாட்டு மயக்குகிறது.

சந்தானம் வீட்டில் வளர்கிற நாய் கதையின் மையக்கருத்துக்கு பலம் சேர்ப்பதாய் அமைத்திருக்கிற காட்சிக்கு தனி பாராட்டு!

சயாஜி ஷிண்டே, வம்சி, வைஷ்ணவி, லொள்ளுசபா சாமிநாதன், ரமா, மதுரை முத்து என இன்னபிற நடிகர், நடிகைகளின் பங்களிப்பு நிறைவு.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here