காதலுக்காக எதையும் செய்கிற காதலன் என்கிற ஒன்லைனுக்கு, இயக்குநர் விஷ்ணுவர்தன் ஸ்டைலிஷ் மேக்கிங்கில் திரைவடிவம் தந்திருக்கும் படம்.
அர்ஜுனும் தியாவும் காதலர்கள். அர்ஜுன் தியா மீது அதிகப்படியான அன்பு காட்ட, அது அவளுக்கு அலர்ஜியாகி அவஸ்தையாகிறது. அதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு உருவாக, அர்ஜுனின் காதலை முறித்துக் கொள்கிற தியா தனது பணியைத் தொடர போர்ச்சுகல் போய்ச் சேர்கிறாள். போன இடத்தில் இளைஞன் ஒருவனை சுட்டுக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக்குச் செல்கிறாள்.
தகவல் கேள்விப்படும் அர்ஜுன், தியாவை மீட்க போர்ச்சுகலுக்கு பறக்கிறான். அங்கு அவன் சந்திக்கும் சவால்கள் பரபரப்பான காட்சிகளாக விரிய, அதில் தியா சொன்றதாக சொல்லப்படும் நபர் யார்? தியாவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? தியா அவரை கொலை செய்தது உண்மை என்றால் அதற்கான காரணம் என்ன? ஒருவேளை தியா கொலை செய்யவில்லை என்றால் அந்த விவகாரத்தில் அவர் சிக்கியது எப்படி? என்ற எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது.
அர்ஜுனாக (நடிகர் ‘இதயம்’ முரளியின் இளைய வாரிசு; அதர்வா முரளியின் தம்பி) ஆகாஷ் முரளி. மீசை, தாடி நிறைந்த தோற்றம் ஆத்திர ஆவேசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளுக்கு கச்சிதமான பொருத்தம். போர்ச்சுகல் சிறையில் தியாவை பார்த்துக் கலங்குவது, தியாவுக்கு நடந்தது என்ன என்பதை அலசி ஆராய்ந்து சதிகாரர்களை அடையாளம் காண்பது, குழந்தைகள் நிரம்பிய பேருந்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து போர்ச்சுகல் காவல்துறையை பணிய வைப்பது என நடிப்பில் சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை. ஆக்சனிலும் அதகளம் செய்ய முயற்சித்திருப்பவர், ரொமான்ஸில் இன்னும் தேற வேண்டியிருக்கிறது.
தியாவாக அதிதி ஷங்கர். காதல் காட்சிகளில் அதற்கேற்ற மெல்லிய உணர்வையும், கோபப்படும்போது தேவையான படபடப்பையும் ஓரளவு சரியாக தன் உடல்மொழியில் கொண்டு வந்திருப்பவர், சிறையில் எதிரியால் தாக்கப்பட்டு வலியால் துடிக்கும்போது பரிதாபத்தை சம்பாதிக்கும்படி உடம்பை சிரமப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
வழக்கறிஞராக வருகிற கல்கி கோச்சலினுக்கு எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் கவனிக்கும்படி இருக்க அவரது இயல்பான நடிப்பும் தனித்து தெரிகிறது.
அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்பவராக சரத்குமார், மகன் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தின் விளைவாக கணவரிடம் கொதித்துக் கொந்தளிக்கிற குஷ்பு என சீனியர்கள் அவரவர் பங்களிப்பை சின்சியராக செய்திருக்க,
விக்கல்ஸ் விக்ரம், பிரபு, ராஜா என பலரும் பெரிதாய் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் நடமாடுகிறார்கள்.
போர்ச்சுகலின் கட்டிடங்கள், சாலைகள், தெருக்கள் என எல்லாமே அழகாக அமைந்திருக்க அவற்றை விதவிதமான கோணங்களில் நேர்த்தியான ஒளியுணர்வுகளோடு கலந்துகட்டி சுருட்டியிருக்கிறது ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரிசனின் கேமரா.
யுவன் இசையில் தொலஞ்ச மனசு பாடல் மனதுக்குள் உற்சாகம் பாய்ச்சுகிறது. பின்னணி இசையில் குறிப்பிட்டுச் சொல்வதற்கான சங்கதிகள் தென்படவில்லை.
அஸ்டண்ட் டைரக்டர் பெடரிகோ கியூவாவின்உருவாக்கத்தில் சண்டைக் காட்சிகளும், பைக் சேஸிங் சீனும் அதிரிபுதிரி அனுபவம் தருகின்றன.
திரைக்கதையில் லாஜிக் என்கிற சமாச்சாரம் தொலைந்து போயிருந்தாலும், காட்சிகளில் திணிக்கப்பட்டிருக்கும் பரபரப்பும் விறுவிறுப்பும் இந்த ரொமான்டிக் திரில்லரை சோர்வின்றி பார்க்க உதவியிருக்கிறது.
நேசிப்பாயா _ காதல் சடுகுடு!
-சு.கணேஷ்குமார்