எல்லாவிதங்களிலும் மாறிப்போயிருக்கிற காலகட்டத்தின் பிரதிபலிப்பாக ‘காதலிக்க நேரமில்லை.’
இன்றைய காதல் தோல்வியால், கல்யாணம் செய்து கொள்ளாமல் ஆணுடன் உடல்ரீதியாக இணையாமல் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வருகிறார் ஸ்ரேயா.
அது ஒருபக்கமிருக்க குழந்தை பெற்றுக் கொள்வதில் உடன்பாடில்லாத சித்தார்த், காதலியைப் பிரிந்து நண்பர்களுடன் உற்சாகமாக நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்.
இப்படி ஊர் உலக வழக்கத்துக்கு மாறான எண்ணம் கொண்ட இருவரும் ஒரு கட்டத்தில் சந்திக்கிறார்கள். அதன்பின் அவர்களின் மனதில் ஏற்படும் மாற்றங்களும் அதன் விளைவுகளுமே மீதிக் கதை… ஸ்ரேயா பெற்றுக் கொண்ட குழந்தையின் அப்பா யார் என்பது (ஸ்பெர்ம் டோனர்) யார் என்பது
விவகாரமான விபரீதமான ரூட்டில் பயணிக்கிற ஸ்ரேயாவாக நித்யா மேனன். காதல் வாழ்வின் ஏமாற்றத்தை வலியுடன் கடந்து வருவது, யார் என்ன சொன்னாலும் கவலையில்லை என்ற முடிவுக்கு வந்து தான் விரும்பிய படியே தைரியமாக குழந்தை பெற்றுக் கொள்வது, அப்பா அம்மாவைப் பிரிந்து குழந்தையை வளர்த்து ஆளாக்குவது, சித்தார்த்தை சந்தித்தபின் குழப்பமான மனநிலைக்கு மாறுவது என காட்சிக்கு காட்சி பொருத்தமான உணர்வுகளை பரிமாறியிருக்கிறார்.
காதலில் தோல்வியைச் சந்திக்கும்போது வெளிப்படுத்தும் உணர்வாகட்டும், நித்யா மேனனுடன் மலரும் உறவில் வெளிப்படும் கெமிஸ்ட்ரியாகட்டும், நித்யாவின் மகன் மீது காட்டும் பிரியமாகட்டும், முன்னாள் காதலியை சந்திக்கும்போது மனதுக்குள் கலவரப் படுவதாகட்டும் மென்மையான சித்தார்த்தாக வருகிற ரவி மோகனின் உடல்மொழி
சிறுவயதுக்குரிய துடுக்குத்தனம், உனக்கு அப்பா இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத மனநிலை, அப்பாவைப் போல் பாசம் காட்டும் ஒருவர் கிடைத்ததும் உருவாகும் உற்சாக மனநிலை என காட்சிகளின் தேவையை நித்யா மேனனின் மகனாக வருகிற ரொஹான் சிங்கின் துடிப்பான நடிப்பு நிறைவு செய்திருக்கிறது.
முன்னாள் காதலனை சந்தித்து அவன் வெறொரு பெண் மீது காதல் வயப்பட்டிருப்பதை உணர்ந்து கலக்கமான உணர்வுக்குள் விழுவதை துல்லியமான முகபாவங்களில் கொண்டு வந்திருக்கிறார் டி ஜே பானு.
தன்பாலின ஈர்ப்பாளராக (Gay) தனக்கு தரப்பட்டிருப்பது முக்கிய கதாபாத்திரm என்பதை உணர்ந்து களமாடியிருக்கிறார் வினய்.
நண்பராக வரும் யோகிபாபுவின் வழக்கமான அலப்பரைகள் லேசாக சிரிப்பூட்டுகிறது.
பாடகர் மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், லால் என இன்னபிறரின் எளிமையான நடிப்பு கதைக்கு பக்கபலமாகியிருக்கிறது.
மென்மையான உணர்வுகளைக் கோர்த்துக் கட்டமைக்கப்பட்ட கதைக்களத்திற்கு முழுமையான உயிரோட்டம் தந்திருக்கிறது ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசை. ஆடியோ வடிவில் கவனம் ஈர்த்த என்னை இழு இழு இழுக்குதடி’ பாடல் படத்தின் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் கவர்கிறது.
சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கலாச்சார கட்டமைப்புகளை உடைத்து, பண்பாட்டு எல்லைகளை கடந்து மனம் விரும்பிய பாதையில் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் அதிகரித்து வரும் சூழலில் அப்படியான மனிதர்களை சுற்றிச் சுழலும் கதைக்களத்தை துணிச்சலாக தேர்ந்தெடுத்த கிருத்திகா உதயநிதியின் நேர்த்தியான திரைக்கதையாலும் விரசமில்லாத காட்சிகளாலும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார்.
காதலிக்க நேரமில்லை _ அன்புக்கு எல்லையில்லை!
-சு.கணேஷ்குமார்