ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில், சிலம்பரசன் எஸ் டி ஆர், கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் ‘பத்துதல.’
வரும் மார்ச் 30-ம் தேதி வெளியாகவிருக்கிற இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா, “பலரும் இந்தப் படம் நன்றாக வரவேண்டும் என்று நினைத்தார்கள். அதன் பிரதிபலிப்புதான் இது. மிகப்பெரிய பொருட்செலவில் இதனை ஞானவேல்ராஜா எடுத்திருக்கிறார். முதல் 15 நாட்கள் எடுத்துவிட்டு பிறகு, மீண்டும் ரீஷூட் செய்ய வேண்டும் என்பது சாதாரண விஷயம் கிடையாது. எஸ்.டி.ஆர்.ரை வைத்து படம் செய்வது சாதாரணம் கிடையாது. ஏனெனில், ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். அதை நாம் திருப்திப்படுத்த வேண்டும். இது சிம்புவால் எனக்கு எளிதானது.
கெளதம் கார்த்திக்கை நிறைய கொடுமைப் படுத்தி இருக்கிறேன். ஆக்ஷன், புழுதி என கடினமான சூழலில் அவருக்கு படப்பிடிப்பு நடத்தினோம். சிறப்பாக செய்திருக்கிறார். கெளதம் மேனன் என்னுடைய பாஸ். சிறப்பான வில்லன். அவரிடம் இதுவரை பார்த்திராத ஒரு புதுமுகத்தைப் பார்க்கலாம். பிரியா பவானி சங்கருக்கும் நன்றி.
எஸ்.டி.ஆருக்கு தங்கை கதாபாத்திரம் நடிக்க தென்னிந்தியாவில் ஒரு நடிகைகூட தயாராக இல்லை. ஒத்துக் கொண்ட ஒரே நடிகை அனுசித்தாரா மட்டும்தான். அவருக்கும் நன்றி. மனுஷ்யபுத்திரனுக்கு கவிதை, அரசியல் என பல தளங்கள் காத்திருந்தும் என் நட்புக்காக ஓடிவந்தார். மதுகுருசாமிக்கும் நன்றி.
கேட்டதும் சாயிஷா உடனே ஒத்துக்கொண்டு ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்த பாடல் இவ்வளவு நன்றாக வரக் காரணம் சாயிஷா, ரஹ்மான் இசை, பிருந்தா மாஸ்டர் மூவரும்தான்” என்றார்.
சிலம்பரசன் எஸ் டி ஆர், ”எனக்குத் தெரிந்து ‘விடிவி 2’ பண்ண முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு இப்போது வரும் பல படங்களிலும் கெளதம் மேனன் நடித்துக் கொண்டிருக்கிறார். ’பத்து தல’ வந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அது அதிகமாகும். அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி.
ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பல நடிகர்கள் இருக்கிறபோது எப்படி அவர்களை சமாளிக்கப் போகிறார் இயக்குநர் என்ற கேள்வி இருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு இத்தனை நடிகர்களுக்கு திரையில் சரியான இடம் கொடுத்து, இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை முடித்திருக்கிறார். அவரது திறமைக்கு சரியான இடம் உண்டு.
சாயிஷா அருமையாக நடனம் ஆடி இருக்கிறார். ’பத்து தல’ படம் நான் ஒத்துக் கொள்ள முக்கியக் காரணம் கெளதம் கார்த்திக்தான். எந்தவிதமான கஷ்டத்தையும் ஜாலியாக எடுத்துக் கொள்வார். அந்த குணத்துக்காகவே அவர் பெரிய இடம் அடைய வேண்டும். இந்த படத்தில் அவரது ஆக்ஷன் காட்சிகளை ரசித்து பார்த்தேன். கஷ்டமான ஆக்ஷன் காட்சிகளை ரொம்பவே எளிதாக செய்துள்ளார். ரஹ்மான் சார் இந்த படத்தின் இசையை சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார்” என்றார்.
நடிகை சாயிஷா, “நான் மீண்டும் என் வீட்டுக்கு வந்தது போல ஒரு உணர்வு ‘பத்து தல’ படப்பிடிப்பில் ஏற்பட்டது. எனக்கான சூப்பரான பாடலை ரஹ்மான் சார் இசையில் பிருந்த மாஸ்டர் நடன அமைப்பில் கொடுத்ததற்கு நன்றி. எனக்கு எல்லாவிதமான ஆதரவும் கொடுத்த என் கணவர் ஆர்யாவுக்கு நன்றி. அவர் சொல்லிதான் இந்தப் பாடலில் ஆடினேன். அவரைப் போன்ற ஒரு கணவர் கிடைத்ததற்கு நான் கொடுத்திருக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.
நடிகர் கெளதம் கார்த்திக், “இந்த படத்தில் என்னுடைய மொத்தத் தோற்றத்தையுமே மாற்றி இருக்கிறார்கள். இந்த கதாபாத்திரத்தில் என்னை பார்க்கும்போதே பெருமையாக இருக்கிறது. என்னை கொடுமைப் படுத்தி இருப்பதாக இயக்குநர் சொன்னார். வேலை பார்ப்பதை எப்போதும் நான் கொடுமையாகவே நினைத்தது இல்லை. இது என் கோயில். அதுதான் எனக்கு சாப்பாடு போடுகிறது. அதற்காக எந்த விஷயத்தையும் நான் தாங்கிக் கொள்வேன்.
சாயிஷாவுடன் நடனம் ஆட பயமாக இருந்தது. சாயிஷாவுக்கு இணையாக நடனம் ஆட முடியாது என பிருந்தா மாஸ்டரிடம் கேட்டு எனக்கு நடனத்தைக் குறைத்துக் கொண்டேன்.
அடுத்து சிம்பு அண்ணன். இசை வெளியீட்டு விழாவில் அவர் என்னைப் பற்றி பேசியதை கேட்டு நான் அழுதுவிட்டேன். அவருடைய ரசிகர்களில் நானும் ஒருவன். படப்பிடிப்புத் தளத்தில் வேலையையும் மீறி அவர் என்னிடம் சில கதைகளை சொன்னார். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்ன கதாபாத்திரம் என்றாலும் சரி அவர் எப்போது கூப்பிட்டாலும் சம்பளமே வாங்காமல் செல்லத் தயாராக இருக்கிறேன். கூப்பிடுங்கள் அண்ணா” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, “கோவிட் உள்ளிட்டப் பல தடைகளைத் தாண்டி இந்தப் படத்தை சிறப்பான ஒன்றாக இயக்குநர் கிருஷ்ணா கொடுத்திருக்கிறார். ’சில்லுன்னு ஒரு காதல்’ மூலம் எங்கள் பயணம் தொடங்கியது. அந்த படம் இன்றளவும் பல குடும்பங்களுக்குப் பிடித்த ஒன்று. அந்தப் படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கிருஷ்ணாவுடன் இணைவதில் மகிழ்ச்சி. படம் நிச்சயம் வெற்றியடையும். ரஹ்மான் சாருடன் எனக்கு இது மூன்றாவது படம்.
தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள சாயிஷாவுக்கு ஸ்பெஷல் நன்றி. தமிழ்நாட்டின் ரன்பீர் கபூர் என்று சொல்லும் அளவுக்கு கெளதம் கார்த்திக்கிடம் வசீகரம் இருக்கிறது” என்றார்.
நடிகர் மதுகுருசாமி, “கன்னட ‘மஃப்டி’ படத்தில் நான் நடித்த சிங்கா கதாபாத்திரத்தை தமிழிலும் நானே நடித்திருக்கிறேன். கன்னடத்தில் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். தமிழில் ‘பத்து தல’ என் முதல் படம். இயக்குநர் ‘பத்து தல’ படத்தை அருமையாக எடுத்திருக்கிறார்” என்றார்.
வசனகர்த்தா ஆர்.எஸ். ராமகிருஷ்ணா, ”ரஜினி சாரும் கமல் சாரும் கலந்த கலவையாகத்தான் சிம்பு சாரை பார்க்கிறேன். இந்த படத்தில் ‘நாயகன்’ கமல் சாரையும், ‘தளபதி’ ரஜினியையும் பார்ப்பீர்கள். ’பத்து தல’ தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு டிரேட் மார்க்காக இருக்கும்” என்றார்.