பஞ்சு அருணாசலம் 80-வது ஆண்டு விழா லோகோ வெளியீடு… மூத்த சினிமா பத்திரிகையாளர்களை கெளரவித்த பிளாக்ஷீப் நிறுவனம்!

எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பாடலாசிரிரியர் என பன்முக அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் பஞ்சு அருணாச்சலம்.

200 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதிய பஞ்சு அருணாச்சலம், 100 மேற்பட்ட படங்களில் எழுத்தாளராக பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இளையராஜாவை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றிக்கு துணை நின்றது என பஞ்சு அருணாச்சலம் பற்றி பக்கம் பக்கமாக சொல்லிக் கொண்டே போகலாம்.

சில ஆண்டுகள் முன் காலமாகிவிட்ட அவரது 80_வது பிறந்தநாள் வரும் ஆகஸ்ட் மாதம் வருவதையொட்டி ‘பஞ்சு அருணாச்சலம் 80’ என்ற விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்த் திரையுலகத்தினருடன் பிளாக்ஷீப் யூ டியூப் நிறுவனம் இணைந்து விழாவினை நடத்தவுள்ளது.

விழாவை பஞ்சு அருணாச்சலத்தின் மகன சுப்பு பஞ்சுவின் பி.ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைக்கவுள்ளது. அதன் ஒரு பகுதியாக அந்த விழாவுக்கான லோகோ அறிமுக நிகழ்ச்சி 11.6. 2022 சனிக்கிழமையன்று சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் – பாடலாசிரியர் கங்கை அமரன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, சித்ரா லெஷ்மணன், ரோகிணி திரையரங்க உரிமையாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அன்புச்செழியன், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத்தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பஞ்சு அருணாச்சலத்தின் பெருமைகளை, சாதனைகளை, நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில், சினிமா பத்திரிகையாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களான 90 வயது நிரம்பிய கலைப்பூங்கா இராவணன், தேவிமணி, தேவராஜ், ஜெயச்சந்திரன் உள்ளிட்டோரை கெளரவிக்க பிளாக்ஷீப் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி நிகழ்வில் மேற்குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள், பத்திரிகையுலகில் கடந்து வந்த பாதையைப் பற்றி எடுத்துச் சொல்லும் விளக்கப்படம் திரையிடப்பட்டது. அதையடுத்து, பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு பஞ்சு முன்னிலையில் பத்திரிகையாளர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா, கங்கை அமரன், தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், டி. சிவா உள்ளிட்டோர் வெள்ளிப் பதக்கம் வழங்கி, மாலை அணிவித்து வாழ்த்தினர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here