‘பொய்க்கால் குதிரை‘ சினிமா விமர்சனம்
திருப்பங்களுக்குப் பஞ்சமில்லாத பரபர விறுவிறு திரில்லர்! நிஜக்கால் மனிதர்களின் சுயரூபங்களை தோலுரிக்கும் ‘பொய்க்கால் குதிரை.’
பிரபுதேவா சாமானியர்; மனைவியைப் பறிகொடுத்தவர்; விபத்தில் ஒரு காலையும் இழந்தவர். அவருக்கு, இதயத்தில் வினோதமான பிரச்சனையை சுமந்துகொண்டு ஆபரேஷன் செய்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் ஒரு மகள். மகளின் ஆபரேஷனுக்கு தேவையான 70 லட்சத்தை திரட்ட பல வழிகளில் முயற்சிக்கும் பிரபுதேவா, நல்ல வழிகள் எதுவும் சரிவர கைகொடுக்காத நிலையில் சூழ்நிலைக் கைதியாகி குறுக்கு வழியொன்றை யோசிக்கிறார்.
அந்த வழி என்ன? அது தந்த பலன் என்ன? குழந்தை உயிர் பிழைத்ததா? பரபரவென வேகமெடுக்கும் திரைக்கதையின் அடுத்தடுத்த காட்சிகளில் இருக்கும் திருப்பங்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் தருபவை… இயக்கம்: சன்தோஷ் பி. ஜெயக்குமார்
ஒற்றைக் காலை இழந்தாலும் நம்பிக்’கை’யை இழக்காதவராக பிரபுதேவா. மகளுக்காக உதவி கேட்டு அலைவது, உதவி கிடைக்காமல் ஏமாற்றத்தைச் சந்திப்பது, தனக்கு உதவுவதாக சொன்ன அமைப்பின் மோசடியறிந்து விரக்தியில் விழுவது, வேறு வழியின்றி தவறான வழியில் சென்று சிக்கிச் சின்னாபின்னமாவது என மனம் கனக்கச் செய்யும் பாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார். ‘சிங்கிளு நான் சிங்கிளு’ பாடலில் ஒற்றைக் காலில் அவர் ஆடும் நடனத்திலும், அந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியிலும் அத்தனை எனர்ஜி. மனிதர் கலகலப்பாக இருக்கும்படி ஒன்றிரண்டு காட்சிகளை வைத்திருக்கலாம்!
ஏற்கும் பாத்திரம் எதுவானாலும் தனித்துவ கம்பீரம் காட்டும் வரலெட்சுமி சரத்குமார் இந்த படத்திலும் நடிப்பால் தனித்துத் தெரிகிறார்.
பிரபுதேவாவுக்கு நண்பனாக ஜெகன். தனது ஸ்டைலில் காமெடி செய்ய கதையில் இடமில்லை என்பதை உணர்ந்து, கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்.
பிரபுதேவாவின் மகளாக சிறுமி ஆழியா. அந்த குட்டிக் குழந்தையின் சிரிப்பும், செயற்கைக் கால் பொருத்திக் கொள்ள அன்பால் வலியுறுத்தி தன் தந்தையைச் சம்மதிக்க வைப்பதும் அத்தனை அழகு.
ஒன்றிரண்டு காட்சிகளில் தலை காட்டுகிறார் பிரகாஷ்ராஜ். மின்னல் போல் வந்து மறைகிறார் ஷாம். ‘பிக்பாஸ்’ ரைசா வில்சனும் படத்தில் உண்டு.
இமான் இசையில் ‘செல்லமே செல்லமே’ பாடல் இதயத்தில் நிறைகிறது.
ஒளிப்பதிவு, எடிட்டிங் கச்சிதம்.
உதவி தேவைப்படுபவர்களை நுதன திருட்டுக் கார்ப்பரேட் கும்பல்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை போகிற போக்கில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதற்காக இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டு!
படத்தின் பின்பாதி சிறார் கடத்தல், உறுப்புத் திருட்டு, மனசாட்சியற்ற மனிதர்கள் என சுற்றிச் சுழல்வதில் உண்டாகும் அயர்ச்சியைப் போக்குகிறது கதையோட்டத்தில் ஆங்காங்கே இருக்கிற டிவிஸ்ட்!