அப்பா மகன் சென்டிமெண்ட்டில் ஊறவைத்த கதை. வல்லவனாக செயல்பட முடியாத நல்லவன் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களின் காட்சித் தொகுப்பாக இயக்குநர் மகா கந்தன் படைத்திருக்கும் ‘ராஜபுத்திரன்.’
ஊரில் பெரியளவில் செல்வமும், செல்வாக்கும் கொண்டவர் செல்லையா. ஒரு கட்டத்தில் அவரது சொத்துக்கள் கைவிட்டுப்போய்விட, அவரது மகன் ஒரு வேலையில் சேர்கிறார். அங்கு முறைகேடான பணப்பரிமாற்ற வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதை பொறுப்பாக செய்துகொண்டிருக்கிறார். ஒருமுறை அந்த வேலையில் தவறு நடந்துவிட முதலாளியிடம் சிக்குகிறார். அதிலிருந்து அவரால் மீண்டு வர முடிந்ததா, இல்லையா என்பது மீதிக்கதை. அவர் சிக்கியது எப்படி என்பது திரைக்கதையிலிருக்கும் விறுவிறுப்பான எபிசோடுகள்…
வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் வெற்றி, இந்த முறை கமர்சியல் ஏரியாவில் களமிறங்கியிருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் வில்லன்களைப் போட்டுப் பொளந்து திணறடிக்கிறார். காதல், பாசப்பிணைப்பு என களமாடும்போது பொருத்தமான நடிப்பைப் பரிமாற முடியாமல் திணறுகிறார்.
செல்லையாவாக பிரபு. மகனைப் பொத்திப் பொத்தி வளர்ப்பது, மகனை வில்லன் கும்பல் அடித்து துவைத்ததும் பொங்கியெழுந்து அவர்களைப் புரட்டியெடுப்பது, உயிர் உருகும்படி பாசம் காட்டுவது என இளைய திலகம் தந்திருப்பது வழக்கம்போல் முதிர்ச்சியான நடிப்பு.
நாயகி கிருஷ்ணப்பிரியா ஒரு பக்கம் பார்த்தால் அந்தக் கால ஷோபனா மாதிரியிருக்கிறார்; இன்னொரு பக்கம் பார்த்தால் இந்தக்கால ஸ்வாதி ஹொன்டே போலிருக்கிறார். தேகம் முழுக்க இளமை ததும்புகிறது; இதழ்களும் விழிகளும் பட்டாம்பூச்சியாய் படபடக்கிறது. காதல், கொஞ்சல், உற்சாகம், அழுகை, கோபம், பழிவாங்கும் வெறி என பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும்படியான கனமான பாத்திரத்தை, பொருத்தமான நடிப்பால் தரம் உயர்த்தியிருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரங்களை இயக்குநர்கள் அவரை நம்பி ஒப்படைக்கலாம் என்ற நம்பிக்கையையும் தருகிறார்.
வெளிநாடுகளில் இருந்து வருகிற பணம், அதை வைத்து வரி மோசடி என பெருங்குற்றத்தை செய்கிற தாதாவாக கோமல்குமார். சுருட்டு புகையும் வாயோடும், நெருப்பு கக்கும் கண்களோடும் டெரராக நடமாடியிருக்கிறார்.
கோமல்குமாரின் தளபதியாக வருகிற லிவிங்ஸ்டனின் வில்லத்தனத்துக்கான மதிப்பெண்ணை உயர்த்திப் போடலாம் என்றால் அந்த சிங்கமுத்து மீசை தடுக்கிறது.
இமான் அண்ணாச்சி, தங்கதுரை என நகைச்சுவையர்கள் ஒன்றிரண்டு பேர் எட்டிப்பார்த்தாலும் மலர்ந்து சிரிக்கும்படியான காட்சிகள் ஏதுமில்லை. இன்னபிற நடிகர், நடிகைகளின் நடிப்பு கதையோட்டத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
மஸ்காரா அஸ்மிதாவின் குத்தாட்டக் கவர்ச்சி விருந்தும் படத்தில் உண்டு.
கதை நடக்கும் 1990 காலகட்டத்தை தன் ஈடுபாடான உழைப்பால் காட்சிகளில் கலந்திருக்கிறார் கலை இயக்குநர் அய்யப்பன்.
நௌஃபல் ராஜா இசையில் ‘ஆகாசத்த தொட்டாச்சி’ பாடல் புத்துணர்ச்சியூட்டுகிறது. பின்னணி இசைக்கு பாஸ் மார்க் கொடுக்கலாம்.
இராமநாதபுரத்தின் வறட்சியைக்கூட வளமாக காட்டியிருக்கிறது ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனியின் கேமரா.
அப்பா _ மகன் சென்டிமென்டில் சட்டவிரோதக் கும்பலின் அராஜகங்களைக் கலந்துகட்டிய கதை விறுவிறுப்புதான் என்றாலும்,
திரைக்கதையில் இந்தக்கால ரசிகர்களை திருப்திப்படுத்தும் அம்சங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் ராஜபுத்திரன் வசூல்குவிக்க முடியாத சோக புத்திரனாகியிருக்கிறான்!
-சு.கணேஷ்குமார்