இந்தியாவைப் பற்றி டாக்குமெண்ட்ரி படங்கள் எடுத்த ஜப்பானிய இயக்குநர் யூகோ சாகோவை இந்தியாவின் பிரபல இதிகாசமான ராமாயண கதை கவர்கிறது. அதை அனிமேஷன் படமாக எடுக்க நினைக்கிறார்.
படத்தை எடுக்க இந்தியாவின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட ‘ராமாயணம் அனிமேஷனில் உருவானால் உலக முழுக்க ராமரின் கதை போய்ச் சேரும்’ என்று சொல்லி அனுமதி பெற்று, ராமாயணா: தி லெஜெண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ என்ற பெயரில் படத்தை எடுத்து முடித்தது 1993 காலகட்டத்தில். ஆனால், படத்தை வெளியிடுவதில் பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட மதம் சார்ந்த பிரச்சனைகள் உருவாக, அதையெல்லாம் கடந்து 1997-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் படம் குறைந்த எண்ணிகையிலான திரையரங்குகளில் வெளியானது. இதெல்லாம் கடந்த கால வரலாறு. அப்போது உருவான படம் இப்போது டிஜிட்டலில் தரம் உயர்த்தப்பட்டு 4 கே ரெசலூஷனில் மீண்டும் வெளியாகியுள்ளது.
நாட்டை ஆளவேண்டிய ராமர் தன்னைச் சூழ்ந்த சூழ்ச்சியால் மனைவியோடும் தம்பியோடும் வனவாசம் போக வேண்டிய கட்டாயம். போன இடத்தில் சீதை ராவணனால் கடத்தப்பட, சீதையை மீட்கும் விஷயத்தில் அனுமன் துணைக்கு வர, சீதையை அவர்கள் மீட்பதற்கான நடவடிக்கைகளில் இரு தரப்புக்குமிடையே போர் உருவாகி, முதலில் ராவணனின் சொந்த பந்தங்கள் அழிக்கப்பட்டு, நிறைவாக ராவணனும் கொல்லப்பட்டு, அதன்பின் ராமர் நாடு திரும்பி ஆட்சியதிகாரத்தில் அமர்வது வரை ராமாயணக் கதை கதை உலகத்துக்கே தெரிந்ததுதான். அந்த கதை இந்த படத்தில் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கிறது.
விஸ்வாமித்திரர் தாடகையை வதம் செய்ய ராமரை அழைத்துச் செல்வதில் தொடங்கும் படம், ராவணனுக்கு முடிவு கட்டியபின் விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கிவிட்டு ராமர் நாடு திரும்புவதற்காக புஷ்பக விமானத்தில் பயணிப்பதோடு நிறைவு பெறுகிறது.
போரில் எதிரிகள் அனைவரையும் கொன்றழிக்கிற ராமரை கனிவான தோற்றத்திலேயே காண்பித்திருக்கும் இயக்குநர், ராவணனின் நல்ல பக்கங்களை காட்டாமல் தவிர்த்திருக்கிறார். அனிமேஷனில் கதாபாத்திரங்களின் உருவாக்கம் மனதைக் கவர்கிறது. காட்சிகள் நீளமாக இருந்தால் பார்ப்பவர்களுக்கு சலிப்பு தட்டும் என்பதை மனதில் வைத்து கடகடவென கதையை நகர்த்தியிருப்பது புத்திசாலித்தனம்.
அயோத்தியில் பாலராமர் கோயில் திறக்கப்பட்டு ஓரு வருடம் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் விதமாக இந்த படம் இப்போது வெளியாகியுள்ளது என்பது விசேஷ செய்தி.


