அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கிய ‘ஷாட் பூட் த்ரீ’ படத்துக்கு விலங்குநல ஆர்வலரும் அரசியல்வாதியுமான மேனகா காந்தி பாராட்டு!

வெங்கட்பிரபு, சினேகா, யோகிபாபு உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம் ‘ஷாட் பூட் த்ரீ.’

அருணாச்சலம் வைத்யநாதன் தயாரித்து இயக்கிய  இந்த படம் சிறப்புக் காட்சிகளாக முக்கிய பிரமுகர்களுக்குத் திரையிடப்பட்டு அவர்களின் பாராட்டுக்களை பெற்று வருகின்றது. அந்த வரிசையில் கடந்தவாரம் இந்த படத்தை விலங்குகள் நல ஆர்வலரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான மேனகா சஞ்சய் காந்தி பார்ப்பதற்காக திரையிடப்பட்டது.

படத்தைப் பார்த்த மேனகா காந்தி படத்தின் கதைக்களத்தையும் படம் ருவாக்கப்பட்டிருக்கும் விதத்தையும் குறிப்பிட்டு பாராட்டியது உலகெங்கமுள்ள குழந்தைகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேனகா காந்தி படக்குழுவினருடன்
பேசியபோது, ‘‘இந்த படம் குழந்தைகளுக்கான மிகச்சிறந்த திரைப்படம். இந்த படத்தை குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் என அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன். இந்த படம் பலமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டால் எல்லைகளைக் கடந்து அனைத்து மொழி மக்களும் கண்டுகளிக்கலாம். திரையரங்குகளுக்குப் பிறகு OTT தளங்களில் வெளிவரும் சமயம் இத்திரைப்படம் இன்னும் பெரும்பான்மையான மக்களை சென்றடையும் என்று உறுதியாக நம்புகின்றேன்”என்றார்.

ஒரு நாயின் மீது அதீத பாசம்கொண்ட ஒரு சிறுவனின் கதையைச் சொல்கிறது இந்த படம். கதை சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் அனைவரின் இதயத்தையும் வருடி, அன்பு, பச்சாதாபம் மற்றும் விலங்குகள் பராமரிப்பின் முக்கியத்துவம் போன்ற அம்சங்களை எடுத்துகாட்டுவதால், அவற்றை எடுத்துக்கூறும் பெற்றோர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் இத்திரைப்படம் ஒரு சிறந்த தேர்வாக அமையும் என் கிறார்கள் படக்குழுவினர்.

படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான அருணாச்சலம் வைத்யநாதன், ‘‘மேனகா காந்தியிடமிருந்து இவ்வளவு உயர்ந்த பாராட்டுகளைப் பெறுவதில் மிகவும் பெருமைப்படுகிறோம். விலங்குகள் நலனுக்காக தன்னை அற்பணித்துக்கொண்டவரின் பாராட்டு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. முடிந்தவரை அனைத்து குழந்தைகளிடமும் இந்த படத்தைக் கொண்டு செல்ல அவரது வார்த்தைகள் எங்களை உற்சாகப்படுத்துகின்றது. இந்த படம் ஒரு நல்ல மாற்றத்திற்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கும் என்றும் நம்புகிறோம். இறுதிவரை எங்களுக்கும் திரைப்படத்திற்கும் ஆதரவளித்ததற்காக, யூனிட் ஹெட், பீப்பிள் ஃபார் அனிமல்ஸ், திருமதி ஹேமா கல்யாணசுந்தரம் அவர்களுக்கும், இணை நிறுவனர் மற்றும் தலைவர், புளூ கிராஸ் ஆஃப் இந்தியா திரு.எஸ். சின்னிகிருஷ்ணா ஆகியோருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றார்.

படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here