Home விமர்சனம் முஸ்தபா முஸ்தபா சினிமா விமர்சனம்

முஸ்தபா முஸ்தபா சினிமா விமர்சனம்

‘ஜாலியா வாங்க; சிரிச்சுட்டு போங்க’ டைப்பில் ஒரு படம்

கார்த்திக் பிரபலமாகாத டி வி சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர். அவருக்கு திருமணம் நிச்சயமாகி, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கல்யாணம் என்ற நிலையில், அவர் வேறொரு பெண்ணுடன் பெட்ரூமில் அப்படியும் இப்படியும் இருக்கிற வீடியோ யூ டியூபில் அப்லோடாகி வியூஸ் எகிறிக் கொண்டிருக்கிறது. பதறிப்போகிற கார்த்திக் அந்த வீடியோ தனக்கு நிச்சயம் செய்துள்ள பெண்ணின் பார்வையில் சிக்கும்முன் யூ டியூபிலிருந்து நீக்குவதற்கான முயற்சியில் இறங்குகிறார். அதற்கு ஹேக்கரான தன் நண்பனிடம் உதவி கேட்கிறார்.

இப்படி ஆடியன்ஸை பரபரப்பு மோடுக்கு கொண்டு செல்லும் கதை, வீடியோவில் அவர் சிக்கியதன் பின்னணி என்ன? வீடியோவை நீக்க முடிந்ததா? திட்டமிட்டபடி கல்யாணம் நடந்ததா? வீடியோவை யூ டியூபில் ஏற்றியது யார்? ஏன்? என்பதையெல்லாம் விளக்கியபடி கடந்தோடுகிறது…

கார்த்திக்காக சதீஷ். ஹேக்கராலும் வீடியோவை நீக்க முடியாமல் போக தவித்துப் போகிறார். கல்யாணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்ணை ஒரு தலையாக காதலிப்பவன் கண்ணில் அந்த வீடியோ சிக்கியபின் அவனது மிரட்டலால் படாதபாடு படுகிறார்.எது நடக்கக்கூடாது என போராடினாரோ அது நடந்தபின் சமாளிக்க முடியாமல் திணறுகிறார். அவரது உடல்மொழியால் அதையெல்லாம் நம்மால் ரசிக்க முடிகிறது. காதல், டான்ஸ் என ஹீரோவுக்கான மற்ற டெம்ப்ளேட் விஷயங்களிலும் ஈடுபடுகிறார்.

மோனிகா சின்னகொட்லாவுக்கு முகம் சின்னதாக இருந்தாலும், சதீஷுடன் சொஞ்சல் மிஞ்சல், அவனது தவறுகள் தெரிந்தபின் கடுப்பை வெளிப்படுத்தல் என நீளும் காட்சிகளில் எக்ஸ்பிரஷன் பெரிதாக, கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறது.

சதீஷுக்கு நண்பனாக வருகிற சுரேஷ் ரவி, சதீஷ் அனுபவிக்கிற அத்தனை பிரச்சனைகளையும் ஜெராக்ஸ் எடுத்தது போல் அனுபவிக்கிறார். அதில் துடிப்பான நடிப்பை பார்க்க முடிகிறது. அவர் ஏன் அப்படி அனுபவிக்கிறார் என்பதில்தான் கதையின் டிவிஸ்ட் இருக்கிறது.

எதிரிகள் என புதிதாக யாரும் உருவாவதில்லை; நண்பர்களே எதிரியாக மாறுவார்கள்’ என்று சொல்லப்படுவதுண்டு. அதற்கு உதாரணமாக  அமைக்கபட்டுள்ள கதாபாத்திரத்தில் ஹேக்கராக வருகிற கருணாகரனின் நடிப்பு கலகலப்பூட்டுகிறது.

கதையில் சர்ச்சைக்குள்ளாகும் வீடியோவில் கவர்ச்சி காட்டுகிற கடமை ஐஸ்வர்யா தத்தாவுக்கு. போதுமான அளவில் காட்டி கிறக்கமூட்டுகிறார்.

இரண்டாம் கதாநாயகியாக மானஸா செளத்ரி, அந்தரங்க வீடியோவை மணப்பெண்ணிடம் காட்டிவிடுவதாக உதார் காட்டுகிற காதலனாக விஜய் டிவி புகழ், வேலை வெட்டியையெல்லாம் விட்டுவிட்டு பியர் குடித்தபடி கதாநாயகனின் பிளாஷ்பேக் சம்பவங்களைக் கேட்டு எக்ஸைட்மெண்ட் ஆகிற வி ஜே பார்வதி, தான் எடுக்கப்போகும் படத்துக்கான டீசர் என்ற பெயரில் அந்த மாதிரியான காட்சியை படமாக்கி ஹீரோவின் நிம்மதிக்கு ஆப்பு வைப்பவராக வினோத் முன்னா, உப்புமா டிவி சேனலின் தலைமைப் பொறுப்பு வகிப்பவராக ஜாவா சுந்தரேசன்… எல்லோரும் கலகலப்பு கலாட்டாக்களில் குஷியாக பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் அடிக்கடி வருவதும் போவதுமாக இருந்தாலும் பெரிதாய் எந்த தாக்கமும் தரவில்லை. கே எஸ் விஷ்ணுஸ்ரீயின் ஒளிப்பதிவில் கிட்டத்தட்ட அத்தனை ஃபிரேமும் கலர்ஃபுல்லாக இருக்கின்றன.

‘நாம் சின்னதாய் செய்யும் தப்புக்குக்கூட என்றாவது ஒரு நாள் தண்டனை கிடைத்தே தீரும்’ என்கிற கருத்தை ஒரு துளியாக எடுத்துக்கொண்டு, காட்சிகளை காமெடி காக்டெயிலாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் பிரவீன் சரவணன.

எல்லோர் கையிலும் செல்போன், திரும்பிய பக்கமெல்லாம் சிசிடிவி, சிறிய விவகாரம் கிடைத்தாலும் பற்றிக்கொண்டு எரிகிற சோஷியல் மீடியாக்கள் என வேறொரு விதமான விறுவிறுப்புடன் சுற்றும் உலகில், நாம் எதை செய்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த படம் லாஜிக் பார்க்காமல் சிரித்து ரசிக்க தயாராக இருப்பவர்களுக்கு குட் சாய்ஸ்.

முஸ்தபா முஸ்தபா – நட்பே துணை; நண்பனே வினை!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்