காதல் கதை என்ற பெயரில், இன்றைய தலைமுறைக்கு பிடிக்கும் என்ற எண்ணத்தில் உருவாகியிருக்கும் படம்.
அந்த இளைஞனும் இளைஞியும் பழகுகிறார்கள்; பழக்கம் நெருக்கமாக அவள் தாய்மையடைகிறாள். அவன் கலைக்கச் சொல்கிறான். அவள் மறுக்கிறாள்.
இப்படி பல படங்களில் பார்ட் பார்ட்டாக பிரித்து மேய்ந்த பழங்காலத்துக் கதையில் உருவான ‘ஸ்வீட் ஹார்ட்.’
இளைஞன் இளைஞியிடம் கருவைக் கலைக்கச் சொல்வதற்கான காரணம் அத்தனை புதுமையானது; அவனது ஜோடிக்கு மட்டுமல்ல, படம் பார்க்கும் நமக்கும் ஆத்திரத்தைக் அதிகரிக்கக்கூடியது.
தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்தவள் உண்மையிலேயே கர்ப்பாக இருக்கிறாளா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள நினைக்கிறான் கதைநாயகன். ஆனால், அவள் வீட்டார் அவளை அவளை வெளியில் வர விடாமல் சிறைப்படுத்தியிருக்கிறார்கள். அந்த நிலையில் அவளிடம் யூரின் பெற்றுக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு போக வேண்டும். நேரம் வேறு குறைவாக இருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் நடக்கிற கூத்துகள் கொஞ்சமாக சிரிப்பையும் அதிக எரிச்சலையும் கிளப்புகிறது.
ஒரு கட்டத்தில், கதாநாயகி கர்ப்பமாக இருப்பது தெரிந்து அவளுடைய அப்பா ஆத்திரத்தில் கொந்தளிக்கிறார். அப்போது கர்ப்பத்துக்கு காரணமானவன் ‘உங்க பொண்ணு கூப்பிட்டுத்தான் பல தடவை உங்க வீட்டுக்கு வந்துபோனேன்’ என அவரிடம் சொல்கிறான். இப்படியொரு மோசமான குணம் கொண்டவன்தான் கதையின் நாயகன்.
‘உன்கூட மேட்டர் மட்டும்தான்; கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்’ என்ற கொள்கையுடன் இருப்பவனுடன் நினைத்த போதெல்லாம் உடலால் கலப்பவள்தான் கதையின் நாயகி.
கதைநாயகனுக்கு கதைநாயகியை வளைத்துப் பிடித்து கிஸ்ஸடித்துக் கொண்டிப்பதுதான் முழுநேரப் பணி; மற்றதெல்லாம் பார்ட் டைம் ஜாப் மாதிரி.
கதையும் திரைக்கதையும் வெறுப்பேற்றுவதாக இருந்தாலும் நடித்திருக்கும் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் ஜோடியின் நடிப்பில் துளிகூட குறையில்லை.
ரியோவுக்கு நண்பனாக வருகிற அருணாச்சலேஸ்வரனின் பங்களிப்பு தனித்து தெரிகிறது. சீனியர் நடிகர் காத்தாடி ராமமூர்த்தியை வைத்து காமெடி செய்திருக்கலாம்; பாவம், அவரை வைத்து காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையில் ஏகப்பட்ட பாடல்கள்; சில பாடல்களை அவரே பாடியிருக்கிறார். ஒருமுறை கேட்கும் ரகமான அந்த பாடல்கள் மனதில் பதிய மறுக்கிறது.
எது நிகழ்காலக் கதை, எது இப்போது நடக்கும் கதை என்பதில் வருகிற குழப்பத்தை எடிட்டர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாமோ என்னவோ தெரியவில்லை.
கிளைமாக்ஸ் எதிர்பார்த்ததுதான்.
ஸ்வீட் ஹார்ட் _ ‘ஹார்ட்’டை தொடவில்லை!
-சு.கணேஷ்குமார்


