டெக்ஸ்டர் சினிமா விமர்சனம்

உடல் நடுங்க வைக்கும் குளிர்ப் பிரதேசத்தில் நடக்கும் உயிர் நடுங்கச் செய்யும் சம்பவங்களின் தொகுப்பாக ‘டெக்ஸ்டர்.’

காதலியைக் கடத்திக் கொன்றவனை பழிவாங்கக் காத்திருக்கும் கதைநாயகன் ஆதி, ஒரு கட்டத்தில் அதே கொலைகாரனிடம் தன்னை அண்ணனாக நினைத்து பாசம் காட்டுகிற பெண்ணுடன் சேர்ந்து சிக்கி உயிர்பிழைக்கப் போராடுகிறான். அந்த கொலைகாரன் சைக்கோ என்பது முக்கியச் செய்தி.

அவன் ஏன் சைக்கோவாக மாறினான்? ஏன் ஆதியின் காதலியைக் கொன்றான்? என்பதெல்லாம் பிளாஷ்பேக் காட்சிகளாக விரிய, அந்த சைக்கோவிடமிருந்து ஆதியும் அவனது தங்கையும் தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பது கதையின் மீதி…

ஆதியாக வருகிற ராஜீவ் கோவிந்த் பிள்ளை காதலியோடு உற்சாகமாக பொழுதைக் கழிக்கும்போது மேன்லி லுக்’கில் அசத்துகிறார். காதலியைப் பிரிந்த துக்கத்தில் குடிபோதையில் மிதக்கும்போது பரிதாபத்தை அள்ளுகிறார். சில காட்சிகளில் ஆக்ரோஷ மனிதராகவும் அதிரடி கிளப்புகிறார்.

மெழுகையும் பால்கோவாவையும் சேர்த்துச் செய்தது போலிருக்கிற யுக்தா பர்விக்கு ஹீரோவைக் காதலிக்கிற வேலை. அதை சரியாகச் செய்து, பாடலொன்றில் ‘இந்த கவர்ச்சி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்கிற ரேஞ்சில் இறங்கியடித்திருக்கிறார்.

ஹோம்லி குத்துவிளக்காக தோற்றம் தருகிற சித்தாரா விஜயனுக்கு பள்ளிக் கால நண்பனை அண்ணனாக ஏற்றுக்கொண்டு, அவனை காதலியைப் பறிகொடுத்த மன அழுத்தத்திலிருந்து மீட்டெடுக்கும் பொறுப்பு. அதை கனிவும் கரிசனமும் கலந்த முகபாவங்களுடன் நிறைவேற்றியிருக்கிறார். சைக்கோவால் கட்டிவைக்கப்பட்டு அடிபடும்போது ஐயோ பாவம் என்றிருக்கிறது. மேடம் அந்தளவுக்கு கஷ்டப்பட்டிருக்கிறார்.

சிறுவயதில் நண்பர்கள் விளையாட்டாக ஒரு விஷயத்தை செய்யப்போய், அதன் பாதிப்பால் மனதை விஷமாக்கிகொண்ட கொடூர மனிதனாக அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் நடிப்பில் வெளிப்பட்டிருப்பது வெறியேறிய வில்லத்தனம்.

மகளை இழந்த சோகத்தையும் மகளைக் கொன்றவனை பழிவாங்க துடிக்கும் மனநிலையையும் வித்தியாசப்படுத்தி பிரதிபலித்திருக்கிறார் ஹரிஷ் பெராடி.

இன்னபிற நடிகர்களின் பங்களிப்பு நேர்த்தி.

காடு, மலை, மலைகளின் நடுவே வளைந்து நெளிந்து படுத்திருக்கும் சாலைகள் என கதை நிகழ்விடத்தின் அழகை அப்படியே அள்ளி வந்து கண்களை நிறைத்திருக்கிறது ஆதித்ய கோவிந்தராஜின் கேமரா.

கதையோட்டத்தின் பயம் பதற்றத்துக்கிடையே ஆறுதல் தருவதுபோல் ‘யாரோ யாரிவனோ’, ‘இனி என்ன ஆகிடுமோ’ பாடல்கள் இதமான இசையில் கடந்துபோகின்றன.

படம் தருகிற கிரைம் திரில்லர் அனுபவத்திற்கு 50, ‘எந்த சூழ்நிலையிலும் யார் மனதையும் நோகடித்துவிடக் கூடாது’ என்ற விழிப்புணர்வைத் தந்ததற்கு 50 என மதிப்பெண்ணை சரிசமமாக பிரித்து வழங்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here