மூத்த பத்திரிகையாளர் கவிதா தலைமையிலான தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி விழா 2024′ கடந்த அக்டோபர் 28-ம் தேதி மாலை சென்னையில் உற்சாகமாக நடந்தது.
மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ‘லப்பர் பந்து’ பட நாயகன் ஹரிஷ் கல்யாண் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தீபாவளி மலரை வெளியிட்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்வில் அமைச்சர் மதிவேந்தன் பேசியபோது, ”அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தம்பி ஹரிஷ் கல்யாண்க்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள். இதற்கு முன்பு பொங்கல் விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். ‘இப்போது போங்கள் நான் தீபாவளிக்கு கலந்து கொள்கிறேன்’ என கூறியிருந்தேன்.
மூன்றாவது முறையாக ஒரு துறைக்கு பொறுப்பு கொடுத்து என்னை கழகம் அமர்த்தி இருக்கிறது. இதற்கு முன்பு சுற்றுலாத்துறை, அடுத்து வனத்துறை, தற்போது ஆதிதிராவிட பழங்குடியினர் நலவாழ்வுத்துறையைக் கவனித்து வருகிறேன். அதனாலயே பொறுப்புகளுக்கு மரியாதை கொடுத்து தொடர்ந்து பணியாற்றும் நிலை இருக்கிறது. எனவேதான் தீபாவளிக்கு வருகிறேன் எனகூறியிருந்தேன். தவறாமல் இந்த தீபாவளிக்கு என்னை அழைத்தார் திருமதி. கவிதா.
நிரந்தர தலைவியாக ஒருவர் இத்தனை காலமும் ஒரு சங்கத்தை வழிநடத்திச் செல்வது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் உறுப்பினர்களான நீங்கள் தொடர்ந்து ஒருவரை முன்னிறுத்தி அவரையே தலைவியாக ஏற்றுக் கொண்டு சங்கத்தை திறம்பட செயல்படுத்துகிறீர்கள் எனில் அதுவே அவரது கடின உழைப்பை காட்டுகிறது.
பத்திரிகையாளர்கள் அவ்வளவு சாதாரணமானவர்கள் அல்ல வெயில், மழை எதையும் பாராமல் கொரோனா போன்ற உயிருக்கே ஆபத்தான நிலையிலும் கூட தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றுபவர்கள். அவர்களின் நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னதான் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தாலும் திரைப்படங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். ஒழுக்கமும், கடின உழைப்பும் இருந்தால் ஒரு துறையில் சரியான இடத்தைப் பிடித்து உயரலாம் என இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். நல்ல கதைகளை தேர்வு செய்து மிகவும் நன்றாக நடித்து வருகிறார். அவர் சினிமாத்துறையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
பத்திரிகையாளர்கள் நிகழ்வு என்றவுடன் நிச்சயமாக எப்படியாவது இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என திட்டமிட்டு விட்டேன். காரணம் எங்களது கழகத் தலைவர் கலைஞர் ஐயா எப்போதும் தன்னை கழகத்தின் தலைவர் என்பதற்கு முன் , தன்னை முதலில் பத்திரிகையாளர் என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்வார். அவர் வழித்தோன்றல்களான நாங்களும் நிச்சயம் பத்திரிக்கையாளர்களுக்கு முதலிடம் கொடுப்போம். உங்கள் பணி சிறக்கட்டும்” என்றார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசியபோது, ”இதற்கு முன்பு இந்த மேடையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தான் பேசியிருக்கிறேன். முதல்முறையாக பத்திரிகையாளர்களுக்கு ஒரு விழா அதில் நான் கலந்து கொண்டது பெருமையாக நினைக்கிறேன். உங்கள் கையெழுத்து தான் எங்களின் தலையெழுத்து. என்னைப் போன்ற எத்தனையோ நடிகர்களையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் பல உயரங்களுக்கு கொண்டு சென்றவர்கள் நீங்கள். சமூகத்தின் மிகப்பெரும் தூண் நீங்கள் தான்.
பல மூத்த அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்களை இன்று நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக கங்காதரன் சாரை இன்று நேரில் சந்தித்தது மட்டுமின்றி அவரை கௌரவிக்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது பெருமையாக நினைக்கிறேன்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய திருமண அறிவிப்பு நிகழ்வு இங்குதான் நடந்தது. அதே திருமண நாளில் இன்று இந்த தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்கிறேன். அதை நினைக்கும்போது மகிழ்வாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எனக்கு கொடுத்து உதவுங்கள். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்றார்.
விழா துளிகள்…
சங்கத்தின் தலைவர் கவிதா சிறப்புரையாற்றினார். முன்னதாக செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்புரை வழங்கினார்.
அமைச்சர் மதிவேந்தன், திருமண நாள் கொண்டாடும் நடிகர் ஹரிஷ் கல்யாண்க்கு பட்டாடைகளை பரிசாக வழங்கி கெளரவித்தார்.
மூத்த திரைப்பட பத்திரிகையாளர்கள் கங்காதரன், தேவி மணி, திரைநீதி செல்வம் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
சங்க உறுப்பினர்களுக்கு இனிப்புடன் ஏழு பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.
பொருளாளர் ஒற்றன் துரை நன்றியுரை வழங்க, இரவு உணவோடு விழா நிறைவுற்றது.