படத்தின் போஸ்டர்களை பார்த்தால் இது ஹீரோயின் சென்ட்ரிக் சப்ஜெக்டாக இருக்கும்; காட்சிக்கு காட்சி கதைநாயகியாக சோனியா அகர்வால் நிறைந்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், படத்தில் இரண்டு பாட்டிகள்தான் அதிகளவில் ஆளுமை செலுத்துகிறார்கள். ஒரு பாட்டி, குடிக்க தண்ணீர் கேட்கும் சோனியா அகர்வாலை கையேந்த வைத்து ஊற்றிக் குடிக்க வைக்கிறார். பாத்திரத்தை அவர் தொட்டால் தீட்டு என்கிறார். சோனியா அப்படி கையேந்தி தண்ணீர் குடிக்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
இன்னொரு பாட்டியின் கண்ணில் சோனியா அகர்வால் பட்டுவிட்டால் போதும்; ‘நீ இன்னும் நாசமா போகலையா?’, ‘நீ இன்னும் செத்து ஒழியலையா?’ என்கிற ரீதியில் நெருப்புச் சொற்களை அவர் மீது வீசுகிறார்.
சோனியா அந்த ஏச்சுப் பேச்சுக்களையெல்லாம் கேட்டு வேதனைப் படுகிறாரே தவிர, பதிலுக்கு ஒரு வார்த்தை கூட பேசாமல் கடந்து போகிறார்.
நமக்கு மனம் கலங்கிப் போகிறது. சோனியாவிடம் ‘நீ அப்படி என்னதாம்மா தப்பு செஞ்சே?’ என்று கேட்கத் தோன்றுகிறது.
அப்படி தோன்றும் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக நகர்கின்றன அடுத்தடுத்த காட்சிகள்…
சோனியா அகர்வால், கிராமத்தில் விவசாயம் சார்ந்த பணிகளில் கூலித் தொழிலாளியாக இருக்கிறார். அவர் உடுத்தி வரும் பளீர் நிற சேலைகளைப் பார்த்தால் அவரை விவசாயக் கூலி என்று சொல்ல முடியாதபடி இருக்கிறது. தன்னிடம் வளர்ந்தால் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்காது என்ற சூழ்நிலையில், பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு தூரமாக இருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டே நாட்களைக் கடத்துகிற மனவலியை, அளவில்லாத திட்டுக்களையும் அவமானங்களையும் சகித்துக் கொள்கிற ரணமான தருணங்களை எளிமையான நடிப்பில் காட்சிகளுக்குள் கடத்துகிறார்.
பாட்டியின் அரவணைப்பில் வளரும் சோனியாவின் மகனாக, கதையின் நாயகனாக ஒடிசலான தேகமும் நல்ல உயரமுமாக சிறுவன் திலீப்ஸ். அந்த, கிராமத்துக் கதைக்கேற்ற முகத்திலிருந்து சோற்றுக்கே அல்லாடும் நிலைமையை உணர்த்தும்போது, சோனியாதான் தன் அம்மா என்பது தெரிந்தபின் அவர் மீது வெறுப்பு காட்டும்போது, அந்த வெறுப்பையும் கடந்து பிரியம் வெளிப்படும்போது பிரதிபலித்திருக்கும் இயல்பான நடிப்பு படத்துக்கு பலம். உயர்சாதி சிறுமியுடன் பழக்கம் நெருக்கம், அதனால் சந்திக்கும் பிரச்சனை எனவும் அந்த சிறுவனுக்கு கனமான காட்சிகள் இருக்கின்றன.
திலீப்ஸின் தோழியாக, உயர்சாதிக் குடும்பத்துப் பெண்ணாக வருகிற சிறுமி வர்ஷிதா சுகன்யா லட்சணமாக இருக்கிறார். கதையின் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார். கீழ் சாதிப் பையனுடன் பழகுவது தெரிந்து அவரது பாட்டி தண்ணீரை தலையில் ஊற்றிவிட காய்ச்சல் கண்டு படுக்கும்போது ஐயோ பாவம் என்றிருக்கிறது.
கதையில் ஒரு அண்ணன் தம்பி. அண்ணன் அவரது மகனுடன் பழகும் பெண்ணை அடித்து உதைத்து, தன் மகனை ஆணவக் கொலை செய்து தன் சாதிவெறியை காட்டுகிறார். தம்பி தன் செல்ல மகள் கீழ்சாதிப் பையனுடன் பழகுவதை ஆதரித்து சாதிப் பாகுபாடு பார்ப்பது தவறு என்பதை சமூகத்துக்கு உணர்த்தும் கடமையைச் சரியாகச் செய்கிறார்.
முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் இரு பாட்டிகளில் ஒருவர் சாதி வெறி பிடித்தவராக கொடூர முகம் காட்டுகறார். இன்னொருவர் கதைநாயகன் மீது பாசமும் அவனது தாய் மீது வெறுப்பையும் கொட்டிக் குவிக்கிறார். ஒருகுறையும் சொல்லமுடியாத நடிப்பு.
குட்டிப்புலி சரவண சக்தி, ஆதவன் உள்ளிட்டோர் ஊறுகாய் அளவிலேயே பயன்பட்டிருக்கிறார்கள்.
கதை நடக்கும் கிராமத்தையும், கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிற மண்ணுக்கேற்ற முகங்களையும் அதன் தன்மை மாறாமல் பதிவு செய்கிறது ராஜேஷின் ஒளிப்பதிவு. ரஞ்சித் வாசுதேவனின் பின்னணி இசையிலிருக்கும் அதிரடி கொஞ்சம் அதிகப்படி.
கிராமம், ஏழை எளிய மக்கள், பணபலமுள்ள மனிதர்கள், சாதி வெறியில் ஊறிப்போன சமூக விரோதிகள் என பலவற்றை துண்டு துண்டாக காண்பித்திருக்கிறார் இயக்குநர் குரு ஏ. அவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் இயக்குநர் சமூகத்தில் சாதிப் பாகுபாடு கூடாது என்பதை வலியுறுத்துகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
படம் முழுக்க கண்ணீரும் கஷ்டங்களுமே நிறைந்திருக்கும் இந்த படத்தில் நான்கைந்து உற்சாகமான காட்சிகளும் உண்டு.
பருத்தி _ கருத்து கனமென்றாலும் உருவாக்கத்தில் இல்லை நேர்த்தி!
-சு.கணேஷ்குமார்


