பத்துமணி நேரத்தில் கெத்து காட்டும் இன்வென்ஸ்டிகேஷன் திரில்லர்.
கிட்டத்தட்ட 25 பயணிகளோடு சென்னையிலிருந்து வெளியூருக்கு புறப்பட்டு, வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆம்னி பேருந்தில் ஒரு இளைஞன் கொலை செய்யப்படுகிறான்.
பேருந்தில் பயணித்தவர்கள், டிரைவர், கண்டக்டர் என எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணையை துவங்குகிறார் இன்ஸ்பெக்டர் கேஸ்ட்ரோ.
கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? அத்தனை பயணிகள் இருக்கும்போது கொலை நடந்தது எப்படி? இத்தனை கேள்விகளுக்கும் அவரது விசாரணையில் பதில் கிடைக்கிறது…
காணாமல் போன கல்லூரி மாணவியை கண்டுபிடிக்க எடுக்கும் நடவடிக்கைகளில் பரபரப்பு, ஓடும் பேருந்தில் ஒரு பெண் தாக்கப்படுவதாக தகவல் கிடைக்க பேருந்தை மடக்கிப் பிடிப்பதில் காட்டும் சுறுசுறுப்பு, சந்தேகப்படுபவர்களை விசாரிப்பதில் புத்திசாலித்தனம் என தன் கடமையை சின்சியராக செய்திருக்கிறார் சிபிராஜ். கிடைக்கிற கேப்பில் டூயட் பாட்டுக்கு ஆட்டம்போட போய்வருவார் என எதிர்பார்த்தால் அவருக்கு ஜோடி இல்லாததால் அந்த வாய்ப்பு பறிபோய்விட, அடிக்கடி முகம் கழுவி நெற்றியில் அடிக்கடி விபூதி பட்டை அடித்து ரிஃப்ரெஷ் ஆவதோடு முடித்துக் கொள்கிறார்.
கேஸ்ட்ரோவின் கடந்தகால அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி படத்தை துவங்கி வைப்பதிலிருந்து, அவரது விசாரணைகளுக்கு பக்கபலமாக இருப்பது வரை கஜராஜின் பங்களிப்பு கச்சிதம்.
போலீஸார் எத்தனை அடித்து துவைத்தாலும் ஏற்றிய போதை துளிகூட இறங்காத மனிதராக முறுக்கேறித் திரிகிறார் அடுகளம் முருகதாஸ்.
கண் முன் நடக்கும் அநியாயத்தை தடுக்க முயற்சித்து அய்யோ பாவம் நிலைமைக்கு ஆளாகிறார் ராஜ் அய்யப்பா.
வில்லனாக திலீபன், சிங்கமாய் சீற வேண்டிய இடத்திலிருந்துகொண்டு சித்தெறும்பு கடித்த உணர்வைத் தந்து கடந்துபோகிறார்.
ஜீவா ரவி, சரவண சுப்பையா உள்ளிட்டோர் வந்துபோகிறார்கள்.
இரவில் நடக்கும் கதைச் சூழலுக்கேற்ப ஒளி அமைப்புகளில் கவனம் செலுத்தி கேமரா கோணங்களை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்.
கே எஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையில் அதிரடி ஆர்ப்பாட்டம் அதிகம்.
லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங்கில் இரண்டு மணி நேரத்துக்குள் அடங்கியிருக்கிறது படத்தின் நீளம்.
ஒரு கொலை, அதை அவர் செய்திருக்கலாம் இவர் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பலரிடம் விசாரணை என்பது பழக்கப்பட்டதுதான் என்றாலும்,
விசாரணைக்கு ஆளான அத்தனை பேர் மீதும் படம் பார்ப்பவர்களுக்கு சந்தேகம் தொற்றும்படி மலையாள திரில்லர் படங்களைப் போல் கதையின் நகர்வை கட்டமைத்திருப்பதற்காக இயக்குநர் இளையராஜா களியபெருமாளை பாராட்டலாம்.