மனிதர்களுக்கு வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் ‘டெஸ்ட்’ வைக்கும். அதற்குள் சிக்கித் தவிக்கிற சிலரை சுற்றிச் சுழல்கிற கதை; நாட்டுப் பற்றும் வீட்டுப் பற்றும் கைகோர்க்கிற ‘TEST.’
கிரிக்கெட் வீரர் சித்தார்த் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கிறார். ஒருவர் அவரை, போட்டியில் தோற்கும் விதமாக விளையாடச் சொல்லி மிரட்டுகிறார். அந்த மிரட்டலுக்கு பணிந்தால் அது தேச துரோகமாகிவிடும். விளையாடி ஜெயித்தால் தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒருவரை இழக்க வேண்டியிருக்கும்.
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எரிபொருள் கண்டுபிடித்துள்ள மாதவன், அரசின் அங்கீகாரத்துக்காக முயற்சிக்கிறார். அதற்கு கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. ஏற்கனவே லட்சக்கணக்கில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் ஆபத்தில் சிக்கியிருக்கும் அவர், தேவையான பணத்துக்காக தேச துரோகம் செய்கிற அளவுக்கு இறங்குகிறார்.
இப்படி இருவரும் சூழ்நிலைக் கைதிகளாகி நிற்க, அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்கள் எல்லாமே விறுவிறுப்பானவை…
பணத்துக்காக எதையும் செய்யத் தயாராகும்போது வெளிப்படுத்தும் வில்லத்தனம், குழந்தை பெற்றுக்கொள்வதில் தன்னிடமிருக்கும் குறையை சுட்டிக் காட்டி நோகடிக்கும் மனைவியால் உருவாகும் மன உளைச்சலை பிரதிபலிக்கும் விதம் என மாதவனின் நடிப்பு வேற லெவல் வெறித்தனம்.
குழந்தையில்லா ஏக்கத்தில் கணவனிடம் சண்டை சச்சரவில் ஈடுபடுவது, பணத்துக்காக தவறான விஷயத்தைச் செய்ய திட்டமிடும் கணவனை தடுப்பது, அந்த விஷயத்தால் நிசசயமாய் பணம் வரும் என தெரிந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக அந்த திட்டத்துக்கு உடன்படுவது என விதவிதமான உணர்வுகளை அதன் தன்மை குறையாமல் தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் நயன்தாரா.
கிரிக்கெட் மைதானத்தில் இறங்கும்போது நாடு முக்கியமா, மகன் முக்கியமா என்ற தடுமாற்றம் தொற்றிகொள்ள அந்த யாரிடமும் சொல்ல முடியாத வலியை மிகச்சரியாக கையாண்டிருக்கிறார் சித்தார்த்.
பல வருடங்கள் திரைக்கு வந்திருக்கிறார் மீரா ஜாஸ்மின். சித்தார்த்தின் மனைவியாக, கணவன் குழந்தை என ஒரு கட்டம் வரை அதே பழைய வசீகரப் புன்னகையுடன் வலம் வருபவர், மகன் காணாது போனபின் மனம் நொறுங்கிப் போனவராய் பொருத்தமான சோக முகம் காட்டியிருக்கிறார்.
அடுகளம் முருகதாஸுக்கு கதைநாயகன் மாதவனை தாறுமாறாய் மிரட்டுகிற, ஆவேசமாய் அடிக்கிற அளவுக்கான வெயிட்டான கேரக்டர். காளி வெங்கட்டுக்கு மாதவனின் சுக துக்கங்களில் உடனிருக்கிற கனமான கேரக்டர். இருவரும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள்.
சித்தார்த்தின் மகனாக வருகிற சிறுவன், போலீஸ் அதிகாரியாக வருபவர் என இன்னபிற கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்களின் நடிப்பு கச்சிதம்.
பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கும் முதல் படம். பாடல்களும், பின்னணி இசையும் அனுபவமுள்ளவரின் பங்களிப்பாய் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
கிரிக்கெட் மைதானம், அதில் நடக்கும் போட்டிகள் வீரஜ் சின் கோஷில் ஒளிப்பதிவில் பிரமாண்டமாகி, நிஜ கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
தான் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்தின் கதைக்களத்தை மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகாளாகும்போது எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்பதை மையப்படுத்தி உருவாக்கி, உயிரோட்டமான திரைக்கதையால் ‘சிக்ஸர்’ அடித்திருக்கிறார் திரைப்படத் தயாரிப்பாளர் ‘ஒய் நாட்’ ஷசிகாந்த்!


