‘தண்டேல்’ சினிமா விமர்சனம்

பொதுநல காதலன் சுயநல காதலியிடம் சிக்கித் தவிக்கிற கதையில் ஆன்மிகப் பற்று, நாட்டுப் பற்று என கமர்ஷியல் அம்சங்களை தூக்கலாக கலந்திருக்கும் ‘தண்டேல்.’

ஆந்திராவிலுள்ள மீனவ கிராமம் ஒன்றில் வசிப்பவர் ராஜு. அவர், மீன் பிடிக்கும் பணிக்காக குழுவாக புறப்படுபவர்களுடன் இணைந்து குஜராத் அருகிலுள்ள கடற்பகுதிக்கு செல்வதும், பல மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு வருவதும் வழக்கம்.

அந்த ராஜு தொழிலில் காட்டும் ஈடுபாடு, தன்னைச் சார்ந்த மக்களுக்கு பிரச்சனை ஏதும் வந்தால் துணிச்சலாக களமிறங்கி பிரச்சனை செய்பவர்களை அடக்கி ஒடுக்குவது என்றிருப்பதால் ஒரு கட்டத்தில் அந்த குழுவுக்கு தண்டேலாக (தலைவராக) பொறுப்பேற்கிறார். அவர் தலைமையில் மீன் வேட்டைக்காக குஜராத் புறப்பட முடிவாகிறது.

மீன் வேட்டைக்கு போவதில் உயிர் பறிபோகிற அளவுக்கு ரிஸ்க் இருப்பதால், ராஜுவின் காதலி சத்யா அவரை போகக்கூடாது என தடுக்கிறார். பல குடும்பங்கள் தன்னை நம்பியிருப்பதால் காதலி தடுத்ததை மீறி மீன் வேட்டைக்கு புறப்படுகிறார். போன இடத்தில் புயல் உருவாகி, படகு வழிதவறி பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் போய்விட மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்; சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

தன் பேச்சைக் கேட்காமல் போன கோபத்தில் வேறு நபரை கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வருகிறார் சத்யா. அவரை புரிந்து கொள்கிற மாப்பிள்ளை கிடைக்க திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அதே நேரம் சிறையிலிருக்கும் மீனவர்களை மீட்பதற்கான முயற்சிகளிலும் இறங்குகிறார்.

அவரது முயற்சிகள், அதில் அவர் சந்திக்கும் சவால்கள், முயற்சிக்கு கிடைக்கும் பலன்கள் என காட்சிகள் கடந்தோட நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கான நாள் நெருங்குகிறது…

ராஜுவும் அவரது குழுவினரும் சிறையிலிருந்து மீண்டார்களா? சத்யாவின் திருமணம் திட்டமிட்டபடி நடந்ததா? என்பதற்கான பதில்கள் கிளைமாக்ஸில்…

தண்டேல்’ ராஜுவாக நாக சைதன்யா. ‘காதலிக்கா, தன்னை நம்பும் மக்களுக்கா யாருக்கு முக்கியத்துவம் தருவது?’ என்ற சூழ்நிலை வரும்போது மக்கள் பக்கம் நிற்கிற முடிவெடுப்பதாகட்டும், காதலியை தவிக்கவிட்டதை நினைத்து மன உளைச்சலை அனுபவிப்பதாகட்டும், சிறையில் இந்தியர்களை அவமதிக்கும் தீவிரவாதியை எதிர்ப்பதாகட்டும், சிறையிலிருந்து தன்னைச் சார்ந்த ஒருவர்கூட விடுபடாமல் விடுதலையாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து போராடுவதாகட்டும், பாடல் காட்சியில் சுறுசுறுப்பாக சுழன்றாடுவதாகட்டும், சண்டைக் காட்சிகளில் சூறாவளியாய் சீறுவதாகட்டும் நாக சைதன்யாவின் ஒவ்வொரு அசைவிலும் தன் கதாபாத்திரத்தை தாங்கிப்பிடிக்கும் அக்கறையும் அர்ப்பணிப்பும் தெரிகிறது.

‘யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன, எனக்கு என் காதலன் முக்கியம்’ என்ற மனநிலையிலிருக்கிற, எக்குத்தப்பான சுயநலவாதி கதாபாத்திரத்திற்கு தரமான நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார் சத்யாவாக வருகிற சாய் பல்லவி.

சத்யாவிற்கு நிச்சயிக்கப்படும் மாப்பிள்ளையாக கருணாகரன், சத்யாவின் தந்தையாக பப்லு பிருத்விராஜ், மீனவர் குழுவின் மூத்தவராக ‘ஆடுகளம்’ நரேன், பாகிஸ்தான் ஜெயிலராக பிரகாஷ் பெலவாடி என இன்னபிற நடிகர் நடிகைகள் அவரவர் பாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ‘ஹிலேஸே ஹிலாஸா’ பாடல் காதல் பரவசம் கூட்ட ‘நமோ நமசிவாய’ பாடல் ஆன்மிக அதிர்வலையை உருவாக்கி கடந்து போகிறது.

மீனவ கிராமம், கடலில் பாயும் விசைப்படகுகள், அடாவடி அராஜகங்கள் அரங்கேறும் சிறைச்சாலை எனகழுகுப் பார்வையில் பாய்ந்து கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷம்தத் சைனுதீன். தரமான சிஜி பங்களிப்பும் படத்தில் உண்டு.

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சினிமா மசாலாவை அள்ளிக் கொட்டியிருக்கும் இயக்குநர் சந்து மெண்டோட்டி, ஒரு ஒருசில அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதிலும் தனி கவனம் செலுத்தியிருக்கிறார்.

தண்டேல் _ கமர்ஷியல் பண்டல்!

-சு.கணேஷ்குமார்

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here