கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிற த்ரிஷா, மீண்டும் அப்படியொரு ரோலில் நடித்திருக்கும் ‘த ரோட்.’
கணவரையும் மகனையும் சாலை விபத்தில் பறிகொடுக்கிறார் த்ரிஷா. அந்த துக்கத்திலிருந்து மீள்வதற்குள், அந்த விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடப்பது அவரது கவனத்துக்கு வருகிறது. அதற்கு காரணம் என்ன என்பதை அலசி ஆராய்கிறார். தெரிய வரும் விஷயங்கள் அவருக்கும், படம் பார்க்கும் நமக்கும் அதிர்ச்சியை அள்ளி வீசுகின்றன. இயக்கம் அருண் வசீகரன்.
த்ரிஷா எப்போதும்போல் அழகாக, இளமையாக இருக்கிறார். சில காட்சிகளில் கணவன் மீது நேசம், மகன் மீது பாசம் என உணர்வுபூர்வமாக வெளிப்படுபவர், தொடர் விபத்துக்கான பின்னணியை தோண்டித் துருவ துவங்கியபின் காவல்துறை உயரதிகாரி போல் நடிப்பில் பரபரப்பு கூட்டியிருக்கிறார். எல்லாமே கதைக்குப் பொருத்தமாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.
‘அப்பாவியாக இருந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் ‘அடப்பாவி’யாக மாறுகிற விதத்தில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ‘டான்சிங் ரோஸ்’ சபீர். ஆசிரியராக வரும்போதும், அவமானங்களை அனுபவிக்கும்போதும் தன்மையான மனிதனாய் வெளிப்படுவது, கொலை செய்வதில் சுகம் கண்டபின் கொடூர முகம் காட்டுவது என நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார்.
கம்பீரமாகவே பார்த்துப் பழகிய வேல ராமமூர்த்தியை மாறுபட்ட வேடத்தில் பார்க்கவும், அவரது நடிப்பில் நெகிழவும் முடிகிறது.
சில வருடங்கள் முன் சில படங்களில் கதாநாயகியாக நடித்து கவனம் ஈர்த்த மியா ஜார்ஜ், இந்த படத்தில் நாயகியின் தோழியாக வந்து நேர்த்தியான நடிப்பால் கதைக்கு தோள் கொடுத்திருக்கிறார்.
தன் உயரதிகாரி அலட்சியமாய் அணுகும் வழக்கில், தனிப்பட்ட ஆர்வம் செலுத்தி நாயகியுடன் சேர்ந்து குற்றவாளிகளை நெருங்க உதவுகிற போலீஸ் கான்ஸ்டபிளாக எம் எஸ் பாஸ்கர். வழக்கம்போல் அவரிடமிருந்து தேர்ந்த நடிப்பு.
செம்மலர் அன்னத்துக்கு டெரரான வேடம். முடிந்தவரை மிரட்டியிருக்கிறார்.
த்ரிஷாவின் கணவராக வருகிற சந்தோஷ் பிரதாப், மகனான வருகிற சிறுவன், விவேக் பிரசன்னா, ‘சூப்பர் குட்’ சுப்ரமணி உள்ளிட்ட மற்ற நடிகர்களின் பங்களிப்பு நிறைவு.
பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு சுறுசுறுப்பு டானிக் ஊற்றியிருக்கிறார் சாம் சி எஸ்.
ஒளிப்பதிவும் படத் தொகுப்பும் கச்சிதம்.
சில காட்சிகள் காதில் பூ சுற்றுகின்றன. அதையெல்லாம் தாண்டி, திரைக்கதையின் பலம் ரோடுக்கு தந்திருக்கிறது நல்ல ஸ்பீடு!