காமெடியனாக பழக்கப்பட்ட பிரேம்ஜி, ‘சூப்பர் ஜி’ என்று பாராட்டும்படி நடித்திருக்கும் படம். ‘சாமானியனின் கோபம் வலிமையானது’ என்பதை எடுத்துச் சொல்லியிருக்கும் ‘வல்லமை.’
சரவணன் ஏழை; மனைவியை இழந்தபின் கிராமத்திலிருந்து மகளுடன் சென்னைக்கு இடம்பெயர்கிறார்; எளிமையான வீடு பார்த்துக் குடியேறுகிறார். போஸ்டர் ஒட்டும் வேலையில் சேர்கிறார். மகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறார். சிலபல நாட்கள் கடந்துபோக, மகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட அதிர்ந்து போகிறார். அதற்கு காரணமானவர்களை கண்டறிந்து பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்.
இப்படி வேகமெடுக்கும் கதையில், மகளிடம் தவறாக நடந்துகொண்டது யார், சரவணன் அவரை எப்படி நெருங்குகிறார், எளிமையான அந்த மனிதனால் நினைத்ததை செய்ய முடிந்ததா இல்லையா என்பது கதையின் மீதி…
சரவணனாக, பூப்பெய்தும் பருவத்திலிருக்கும் பெண்ணுக்குத் தகப்பனாக பிரேம்ஜி. மகள் மீதான பாசத்தில் நெகிழ வைப்பவர், பழிவாங்கும் உணர்வை அலட்டலின்றி அப்பாவித்தனத்துடன் அணுகி தனக்குள்ளிருக்கும் குணச்சித்திர நடிகரை அடையாளம் காட்டியிருக்கிறார்.
தன்னை தவறாகப் பயன்படுத்தியவன் மீது கோபமாக இருக்கும் தந்தைக்குள், ‘அவனை கண்டுபிடிச்சுக் கொல்லணும்ப்பா’ என கொதிப்பாகப் பேசி பழி வாங்கும் எண்ணத்தை தூண்டிவிடுவதாகட்டும், பள்ளியில் தான் ஆடும் நடனத்தைப் பார்க்க தந்தை வந்துவிடுவார் என எதிர்பார்ப்பதாகட்டும், வராதபோது ஏக்கத்தை பிரதிபலிப்பதாகட்டும் சிறுமி திவ்யதர்ஷினியின் நடிப்பில் கணிசமான உயிரோட்டமிருக்கிறது. அவர் ஆடும் பரதம் மனதை நிறைக்கிறது.
தொழிலதிபர், கோடிகளில் புரள்பவர் என ஒரு கேரக்டர் படத்தில் இருந்தால் அவர் குற்றச் செயல்களை குதூகலமாகச் செய்பவராக இருப்பது வழக்கம். அப்படிப்பட்டவராக சி ஆர் ரஜித். நடிப்பில் மென்மையாக வில்லத்தனம் காட்டி கடந்துபோகிறார்.
பெட்ரோல் திருடனாக வருகிற விது, தனியாக இருக்கும் சிறுமியை அணுகும் விதம் கலவரமூட்டுகிறது.
கனிவு பொங்கும் மருத்துவராக வருகிற தீபா சங்கர், நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றிய புள்ளி விவரங்களைப் பட்டியலிட்டு, ‘பாலியல் பலாத்காரத்தில் இந்தியாவில் தமிழகம் மூன்றாமிடத்தில் இருக்கிறது’ என்ற தகவலை எடுத்துச் சொல்லி அதிர வைக்கிறார்.
‘வழக்கு எண்’ முத்துராமன், ‘சூப்பர் குட்’ சுப்ரமணி இருவரும் காவல்துறை அதிகாரிகளாக வந்து போகிறார்கள். ‘ஆட்டோ’ ரவி என்ற பெயரில் அட்டனன்ஸ் போட்டிருக்கிறார் இயக்குநர் கருப்பையா பாண்டியன்.
ஜி கே வி இசையில் இயக்குநர் வெங்கட் பிரபு குரலில் ஒலிக்கும் ‘மகளே என் மகளே’ பாடல் செவிகளுக்கு இதம் தந்து இதயத்துக்குள் தஞ்சமடைகிறது. பின்னணி இசை இன்னும் கொஞ்சம் வீரியமாக இருந்திருக்கலாம்.
கதைக்களத்துக்கேற்ற எளிமையான ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் சூரஜ் நல்லுசாமி.
காலம் கெட்டுக்கிடக்கும் சூழலில் மகளின் பாதுகாப்பு பற்றி பெரிதாய் யோசிக்காத தந்தை, பேச்சில் மெச்சூரிட்டி காட்டும் மகள் யாரோ ஒருவர் காரில் ஏறச் சொன்னதும் யோசிக்காமல் ஏறுவது என நீளும் காட்சிகள் கதைக்களத்தை சற்றே பலவீனப்படுத்தினாலும்,
‘இதெல்லாம் தேவையே இல்லையே’, ‘இதெல்லாம் சாத்தியமில்லையே’ என்ற உணர்வைத் தருகிற சில காட்சிகள் தென்பட்டாலும்,
‘வல்லமை இல்லாவிட்டால் காம வெறியர்கள் சூழ்ந்த உலகில் வாழ்வது கடினம்’ என்கிற உண்மையை உரத்த குரலில் சொல்லியிருக்கிற இயக்குநர் கருப்பையா முருகனை பாராட்டலாம்!