வடசென்னையை கதைக்களமாக கொண்ட மற்றொரு படம்.
‘அந்த பக்கம் நா வர மாட்டேன்; இந்த பக்கம் நீ வரக்கூடாது; பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ என்ற வடிவேலு வசனம் போல், ‘நீ சப்ளை பண்ற இடத்துல நான் சப்ளை பண்ண மாட்டேன், நான் சப்ளை பண்ற இடத்துக்கு நீ வரக்கூடாது’ என தீர்மானித்துக் கொண்டு தண்ணீர் கேன் போடும் பிஸினஸ் செய்து வருகிறார்கள் ஆண்டவரும் ஜானும்.
அந்த தீர்மானத்தை அவர்களிடம் வேலை செய்கிறவர்கள் அவ்வப்போது மீறுகிறார்கள். அதனால் இரு தரப்புக்கும் இடையில் சிறியளவில் பிரச்சனை வந்தாலும், பெரிய பாதிப்புகள் இல்லாமல் பிஸினஸ் நடக்கிறது.
இதென்ன கதை, ‘உப்பு சப்பில்லாத பத்தியச் சாப்பாடு மாதிரி’ என்ற நினைப்பு நமக்குள் வரும்போது,
இரு தரப்பையும் பல காலமாக கண்காணித்துக் கொண்டிருக்கும் அந்த பகுதிக்கான போலீஸ் உயரதிகாரி ஃபிரேமுக்குள் வருகிறார். இருவரது தொழில் போட்டியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஸ்கெட்ச் போடுகிறார்.
தொழில் போட்டியாளர்கள் பகையாளிகளாக மாறுகிற சூழ்நிலை உருவாகிறது. எந்த தரப்புக்கு பாதிப்பு அதிகம் என்பது கிளைமாக்ஸ்… இயக்கம் ஜெயவேல் முருகன்
ஆண்டவராக ராதாரவி. ‘நான் அடிச்சா நீ தாங்க மாட்டே, ஆனா அடிக்கிறது என்னோட நோக்கமில்ல, என்னை என் வேலைய செய்ய விடுங்க’ என்ற மனப்பான்மையில் இருக்கிற கதாபாத்திரத்தை ஏற்று, பேச்சாலும் கண்களின் அசைவுகளாலும் கெத்து காட்டியிருக்கிறார்.
ஜானாக சரண்ராஜ். கம்பீரமாக நடிக்கக்கூடியவர். அவருக்கு கொடுத்திருப்பதும் அப்படிப்பட்ட கதாபாத்திரம்தான். ஆனாலும் அவரை திக்குவாய் பிரச்சனை உள்ளவராக களமாடவிட்டதில் கம்பீரத்தின் சதவிகிதம் அதளபாதாளத்துக்கு போயிருக்கிறது.
அந்த குறையைப் போக்கும் விதமாக அவருக்கு மனைவியாக வருகிற மகேஸ்வரி தாதா ரேஞ்சுக்கு வரிந்துகட்டி விளாசியிருக்கிறார். ‘உங்க ஆளுங்க ஒழுங்கா இல்லாட்டி குடோனை கொளுத்திப்புடுவேன்’ என்பதுபோல் ராதாரவியிடம் எகிறிப்பேசி அதிரடி அதகளம் செய்திருக்கிறார்.
ராதாரவியிடம் பணிபுரிகிறவர்களாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ், பிரியதர்ஷன் இருவரும் அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிற பாத்திரம். பங்களிப்பு கச்சிதம்.
துஷ்யந்தின் காதலியாக வருகிற கேப்ரில்லா ஏழாவது எட்டாவது படிக்கும் சிறுமி போலிருக்கிறார். அதன்மூலம் இந்த படம் எடுக்கப்பட்டு பல வருடங்களாகிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
சந்தர்ப்பம் பார்த்து காரியம் சாதித்துக்கொள்கிற போலீஸ் அதிகாரியாக ஜீவா ரவி தந்திருப்பது பொருத்தமான நடிப்பு.
சங்கர் நாக் விஜயனின் வில்லத்தனத்தில் எனர்ஜி அதிகம்.
அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி என மற்றவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு நேர்த்தி.
பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை இயக்குநரின் உழைப்பு அனைத்தும் படத்துக்கு பலம்.
கேன் வாட்டர் பற்றிய படம் என்றதும், அந்த வாட்டரால் இந்த தலைமுறை சந்தித்துக் கொண்டிருக்கிற பிரச்சனைகளை, அடுத்தடுத்த தலைமுறை சந்திக்கப் போகிற ஆபத்துகளை விலாவாரியாக அலசுகிற படைப்பாக இருக்கும் என எதிர்பார்த்தால் அப்படியெல்லாம் ஏதுமில்லை.
கதை வடசென்னையில் நடப்பதாக இருந்தால் இப்படித்தான் இருக்கும் என்ற ரசிகர்களிடம் இருக்கும் சலிப்பான மனநிலையை இந்த படமும் மாற்றவில்லை.
வருணன் _ வறட்சி!
-சு.கணேஷ்குமார்