Home விமர்சனம் யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன் சினிமா விமர்சனம்

யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன் சினிமா விமர்சனம்

கள்ளக்காதல் கதைகளை விதவிதமாக பார்த்துள்ள நமக்கு, அதையே வேறுவிதமாகப் பார்க்கும் வாய்ப்பையும்,

பார்த்தபின், ‘இதை கள்ளக் காதல்ல சேர்க்க முடியாது போலிருக்கே; வீட்டுச் சாப்பாடு கிடைக்காதவன் ஹோட்டல்ல சாப்பிடுறது தப்பா என்ன?’ என்று நமக்கு நாமே கேள்வி கேட்டு, மனதைக் குழப்பிக்கொள்ளும் வாய்ப்பையும் காம்போவாக தருகிற படம்.

ஹீரோ ஆசையாய் மனைவியைத் தொடுகிறான். அவள் எரிச்சலடைகிறாள். ஒருமுறை இருமுறையல்ல ஒவ்வொரு முறையுமே அவள் அப்படியே நடந்துகொள்ள, அவன் மனம் வெறுத்துப் போகிறான்.

இன்னொரு பக்கம் இன்னொரு தம்பதி. கணவன் குடிகாரன். மனைவிக்கு மது வாசனை பிடிக்காததால் கல்யாணமாகி ஐந்து வருடங்களாகியும் அவனை அவள் தொடவே விட்டதில்லை; அவர்களுக்குள் அந்த விஷயம் நடக்கவேயில்லை. அவனும் குடியை விட்டபாடில்லை.

மனைவி தொட விடாத கடுப்பில் சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோவும், குடிகாரனின் மனைவியும் ஒரு கட்டத்தில் சந்திக்கிறார்கள். உள்ளம் திறந்து பேசுகிறார்கள்; உடலாலும் இணைகிறார்கள்.

இந்த விஷயம் ஹீரோவின் மனைவிக்கும், அந்த பகுதியின் போலீஸ் உயரதிகாரிக்கும் தெரியவருகிறது. அதன்பின் நடப்பதெல்லாம் வில்லங்கம்தான், விபரீதம்தான்…

ஹீரோவாக பால்ராஜ். கார் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறார். வருமானத்துக்கு குறையில்லை. வீட்டைப் பார்த்தாலும் வசதியாக இருக்கிறது. ஆனால் அவரைப் பார்த்தால் பலநாள் குளிக்காதவர்போல், வெகுநாள் சாப்பிடாதவர் போல், கன்னமெல்லாம் ஒட்டிப்போய், தாடியும் மீசையுமாக பரிதாப தோற்றத்திலிருக்கிறார். அப்படியிருப்பவர் ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இன்னும் ஐந்து குழந்தைகள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என மனைவியை வற்புறுத்தும்போது ‘இந்த காலத்துல இதெல்லாம் அநியாயம்ப்பா’ என்று ஆத்திரம் வருகிறது. அதே ஆத்திரம் அவரது மனைவிக்கும் வருகிறது. அதனாலேயே அவர்களுக்குள் சண்டை சச்சரவு. அதை சாதகமாக்கிக் கொண்டு, தன்னிடம் பேசிப்பழகும் பெண்ணோடு ஊர் சுற்றி, அவளுடன் கட்டி உருண்டு, போட்டுப்புரட்டி, ‘அந்த’ சம்பவம் வரை நடந்து முடிகிற வரை ‘மனுஷன் வாழ்றான்யா’ என்கிற அளவுக்கு அதகளம் செய்கிறார். அவரேதான் படத்தின் இயக்குநர், அவரேதான் தயாரிப்பாளர். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். செய்துவிட்டுப் போகட்டும்…

மொத்தமாக ஆறு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு தன்னைச் சுற்றிச் சுற்றி வரும்  கணவனிடம் ‘பெத்த ஒரு பிள்ளைய நல்லா வளர்ப்போம். அடுத்த குழந்தையை எதிர்பார்த்து என்கிட்டே வராதீங்க’ என்று கறார் காட்டும் காயத்ரியின் நடிப்பு கச்சிதம்.

இரண்டாவது ஹீரோயினாக வருகிற ஸ்வேதாஸ்ரீ சிரித்தால் பூ மலர்வது போலிருக்கிறது. பேசினால் கொஞ்சுவது போலிருக்கிறது. இளமையும் உடற்கட்டும் போதையேற்றுவது போலிருக்கிறது. குடிப்பழக்கமுள்ள கணவனை வெறுத்து, எல்லாவிதமான கெட்டப் பழக்கங்களுக்கும் அடிமையானவர் போன்ற தோற்றத்திலிருக்கிற ஆணிடம் மனதைப் பறிகொடுப்பவராக அலட்டிக் கொள்ளாத நடிப்பாலும் பாடல் காட்சியில் பரிமாறும் கவர்ச்சியாலும் கவனம் பெறுகிறார். கதையம்சமுள்ள படங்களில் நடித்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

ஸ்வேதாவின் அழகில் மயங்கி, ‘கல்யாணம் செய்துகொள்ளலாமா?’ என கேட்டு, சம்மதம் கிடைக்காததால், காவல்துறை உயரதிகாரிக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி காமப்பசியைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கும் ரவி மரியாவின் உற்சாகமான நடிப்பு பரபரப்புக்கு கேரண்டி. அப்பா, அம்மா, மாமனார், மாமியார், குடிகாரர் என இன்னபிற கேரக்டர்களை ஏற்றிருப்போரின் நடிப்பில் குறையில்லை.

விஜய் பிரபுவின் இதமான இசையில் ‘இதயம் நோகுதே’, ‘அழகு தேவதையே’ பாடல் வரிகளை பாடகர்கள் பாடாமல் படித்திருப்பது போலிருக்கிறது. பின்னணி இசையில் குறையில்லை. உதயனின் ஒளிப்பதிவு நேர்த்தி.

கதையின் பிரதான கேரக்டர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சூழ்நிலையால் தவறு செய்கிறார்கள். கொலை வரை நடக்கிறது. அதையெல்லாம் பார்க்கும்போது ‘அவர்கள் இடத்தில் இருந்தால் நாமும் அப்படித்தான் நடந்து கொண்டிருப்போம்’ என்பதுபோன்ற ஒரு நினைப்பு வந்து போகிறது.

எளிமையான கதைக்கு சிம்பிளான பட்ஜெட்டில் கமர்சியல் மசாலா தடவியிருக்கும் இந்த படத்தின் நிறைவுக் காட்சி , மாஸ் ஹீரோக்கள் நடிக்கிற கேங்ஸ்டர் சப்ஜெக்ட் படங்களின் கிளைமாக்ஸ் போலிருக்கிறது.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்