முன்னணி யூ டியுப் சேனலான பிளாக்ஷீப் (YouTube Blacksheep) நிறுவனம் தனது ‘BLACKSHEEP TV’ என்ற தொலைக்காட்சி ஒளியலையை வரும் நவம்பர் 6-ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த நிறுவனத்தின் தூதராக இருக்கிற, நடிகர் வடிவேலுவின் முன்னோட்டம் (Promo) இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
பிளாக்ஷீப் நிறுவனர் விக்னேஷ்காந்த்திடம் பேசினோம்… “தொலைக்காட்சி உலகில் எங்கள் புதுவரவை உலகிற்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி. எங்கள் யூ டியூப் நிகழ்ச்சிகளுக்கு கிடைத்த வரவேற்புகளுக்காக நாங்கள் பெற்ற மகிழ்ச்சி சொல்லிலடங்காதது. எங்களின் வளர்ச்சிக்கு காரணம், இளைஞர்களின் பெரும் பங்களிப்பு என்பதை அறிந்தோம். அவர்களின் தீவிரமான ஆதரவும் பாராட்டுமே எங்களைப் பல்வேறு உள்ளடக்கங்களையும் படைப்புகளையும் உருவாக்கத் தூண்டியது. அதுவே தொலைக்காட்சியை தொடங்கும் சிந்தனைக்கு வழிவகுத்தது.
அது பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை படைக்கவும், அவை இளம் தலைமுறையினருக்கு மட்டும் பயன்படும் வழியில் அல்லாமல், அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமையும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு புனைவு மற்றும் அபுனைவு அல்லாத நிகழ்ச்சிகள், வெவ்வேறு பிரிவுகள் மற்றும் கருத்துகளை சார்ந்த படைப்புகளையும் உருவாக்க உள்ளோம்.
அதுமட்டுமின்றி, சிறந்த சாதனையாளர்கள், வெற்றித் தொழில்முனைவோர்கள் மற்றும் வெவ்வேறு தளங்களின் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் ஆகியோரை அறிமுகப்படுத்தி இளைஞர்களை ஈர்க்கும் வகையிலும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் வழங்க உள்ளோம்.
வைகைப்புயல் வடிவேலு பொழுதுபோக்கு உலகையே ஆள்பவராக திகழ்கிறார். அவரது பல்வகை நகைச்சுவை திறன்களால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே உள்ளார். நாமும் நமது BLACKSHEEP தொலைக்காட்சியை அதே வடிவமைப்பில் வளர்த்து வருவதால், அவர் மட்டுமே நமது தொலைகாட்சியின் மிகப் பொருத்தமான சின்னமாக இருக்க முடியும் என உணர்ந்தோம்” என்றார்.


