சரமாரி கத்திக்குத்து, திரும்பிய பக்கமெல்லாம் துப்பாக்கிச் சூடு, ஆறாய் பாய்ந்தோடும் மனித ரத்தம் என வன்முறைப் படங்கள் வரிசை கட்டி கதறவிட்டுக் கொண்டிருக்கும் சூழலில், அவ்வப்போது சில பேய்ப்படங்கள் எட்டிப் பார்த்து பயங்காட்ட முயற்சிக்கின்றன. அந்த வரிசையில் இந்தவார வரவாக ‘டீமன்.’
அந்த இளைஞன் உதவி இயக்குநராக இருந்து, தனியாக படம் இயக்குவதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டு, அதற்கான வாய்ப்பு கிடைத்து உற்சாகத்தில் மிதக்கிறான். சூட்டோடு சூடாக வாடகைக்கு வீடு பிடித்து குடியேறுகிறான். ஒரு பெண் மீது பிரியம் தொற்றிக் கொள்ள, அவளைப் பின் தொடர்ந்து மனதில் இடம் பிடிக்கிறான்.
எல்லாம் நல்லபடியாய் நடந்தால் கதை எப்படி சூடுபிடிக்கும்? அவன் வசிக்கப் போன வீட்டில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி கனவில் வந்து அவனை பலவிதமாய் பயமுறுத்துகிறது. அலறித் துடிக்கிறான்; அமைதியின்றி தவிக்கிறான். அந்த அமானுஷ்ய சக்தி அவனது உயிரை பறிக்காமல் விடாது என்கிற அளவுக்கு நிலைமை விபரீதமாகிறது.
அந்த விபரீதத்துக்கு பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? கொலைவெறியோடு துரத்தும் அந்த சக்தியிடமிருந்து அவன் எப்படி தப்பிக்கிறான்? படம் இயக்க மேற்கொண்ட முயற்சியின் அடுத்த கட்ட நகர்வு என்ன? அவனது காதல் என்னவானது? இப்படியான கேள்விகளுக்குப் பதில் தரும் விதமாய் விரிகின்றன அடுத்தடுத்த காட்சிகள்…
டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரே இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த படத்திற்கான கதையைக் கருவாக்கி இயக்கியிருக்கிறார் ரமேஷ் பழனிவேல். (இயக்குநர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இவர்.)
ஏற்றிருக்கும் பாத்திரத்துக்கு பொருத்தமாக, இளமையாக, லட்சணமாக இருக்கிறார் கதையின் நாயகனாக வருகிற சச்சின். படத் தயாரிப்பாளரிடம் தன்னம்பிக்கையோடு கதை சொல்லி படம் இயக்க வாய்ப்பு பெறும்போது காட்டும் மகிழ்ச்சியாகட்டும், ‘சினிமாகாரனுக்கு பெண் தர முடியாது’ என மறுப்பவரின் பெண்ணையே தன் அணுகுமுறையால் காதலியாக்கிக் கொள்ளும் சாமர்த்தியமாகட்டும், தன் வசிப்பிடத்தை ரசனையாய் அலங்கரிப்பதாகட்டும், பேய்களோடு போராடி மீள்வதாகட்டும், நடிப்பில் சச்சின் அடிக்க நினைத்திருப்பது அத்தனையும் சிக்ஸர். ‘ஃபோர்’க்கு குறையில்லை.
நாயகி அபர்நதிக்கு நடிப்பில் திறமை காட்ட வாய்ப்பு குறைவான கதாபாத்திரம். ஆனாலும், வந்துபோகிற மிகச்சில காட்சிகளில் சின்னச் சின்ன கண்ணசைவுகளால், தெனாவட்டுப் பார்வையால் மனதில் நிறைகிறார்.
மிகச்சிலர் மட்டுமே நடித்திருக்கும் இந்த படத்தில் அந்த பங்களாவில் இருக்கும் அமானுஷ்ய சக்திகளின் பின்னணியை விவரிக்கும் காட்சிகளில் நடித்துள்ளவர்களும், கதைநாயகனின் நட்பு வட்ட நபராக வருகிற கும்கி அஸ்வின் உள்ளிட்டோரின் நடிப்பும் கதையின் தேவையை கச்சிதமாய் நிறைவேற்றியிருக்கிறது.
சமீபத்தில் வெளியான ‘அஸ்வின்ஸ்’படத்தில் இசைக் கலவை செய்து கவனம் ஈர்த்த
ரோனி ரபேல் இந்த படத்தில் பின்னணி இசைக்காக தந்திருக்கும் உழைப்பு கதைக்களத்துக்கு சுறுசுறுப்பூட்டியிருக்கிறது.
ஆர் .எஸ். அனந்தகுமாரின் ஒளிப்பதிவு நேர்த்தி.
பொதுவாக பேய்ப்படம் என்றால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பங்களாவையே கதைக்களமாக்கும் வழக்கத்தை மாற்றி, பரபரப்பான நகரத்தின் அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் சம்பவங்கள் நடப்பது தனித்துவம்.
திரைக்கதையில் கூடுதல் விறுவிறுப்பு கூட்டியிருந்தால் டீமன் ரசிகர்களின் வரவேற்பில் ஏ ஒன் ஆகியிருக்கும்.