24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற சென்னையில் தொடர்ந்து ஒரே மாதிரியான கொலைகள் நடந்துகொண்டிருக்க போலீஸ் சுறுசுறுப்பாகிறது. சீரியல் கில்லரை கண்டுபிடிக்கும் பொறுப்பு அசிஸ்டண்ட் கமிஷனர் அரவிந்தனிடம் (நவீன் சந்திரா) வருகிறது. இது கதை.
அவர் என்னவெல்லாம் கண்டுபிடித்தார், எப்படி கண்டுபிடித்தார், குற்றவாளி யார் என்பதெல்லாம் திரைக்கதை.
கதையைஅப்படியும் இப்படியுமாய் மனம்போன போக்கில் நகர்த்தியிருக்கிற இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், கிளைமாக்ஸின் நெருக்கத்தில் வைத்திருக்கிற டிவிஸ்ட் ஆச்சரியப்படுத்தாமல் விடாது.
‘சிரிப்பு என்றால் என்ன?’ என்னவென்றே தெரியாதவர் என நினைக்கும்படி முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கொலையாளியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிற நவீன் சந்திரா தான் ஏற்றிருக்கும் காவல்துறை அதிகாரி பாத்திரத்துக்கு தேவையான கம்பீரத்தை சரியான விகிதத்தில் தன் நடிப்பில் பரிமாறியிருக்கிறார். தன் மீது காதலாகி சுற்றிச் சுற்றி வருகிற பெண்ணிடமும் அவர் விரைப்பும் முறைப்புமாக பழகுவதன் காரணத்தை கிளைமாக்ஸில் தெரிந்து கொள்ள முடிகிறது.
நவீன் சந்திராவின் இளவயது கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர் சகோதர பாசத்தால் நிரம்பியவராக உணர்வுபூர்வமான பங்களிப்பை பரிமாறி கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நவீன் சந்திராவை துரத்தித் துரத்தி காதலிக்கிற கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார் இளமையும் அழகுமாக இருக்கிற (இந்த படத்தின் தயாரிப்பாளரான) ரேயா ஹரி.
அபிராமி, தான் நடத்தும் பள்ளியில் படிக்கும் மாணவன் மற்ற மாணவர்களால் கேலி கிண்டலுக்கு ஆளாகி மனம் உடைகிறபோது ஆறுதலாய் தாங்கிப் பிடித்து அவனுக்கு அம்மாவாக மாறுகிற கனமான பாத்திரத்துக்கு தேர்ந்த நடிப்பால் உயிரோட்டம் தந்திருக்கிறார்.
கதாநாயகன் நவீன் சந்திராவுடன் சேர்ந்து கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் துறுதுறுப்பாக செயல்பட்டிருக்கிறார் திலீபன்.
காவல்துறை உயரதிகாரியாக ஆடுகளம் நரேன், பதவிக்கான தோரணையோடு இரண்டொரு காட்சிகளில் வந்து போகிறார்.
ரித்விகா, அர்ஜய் என இன்னபிற நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவமுள்ள பாத்திரங்கள் வழங்கப்பட்டிருக்க அதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
கிரைம் திரில்லர் சப்ஜெக்டில் முதன்முறையாக பணிபுரிந்துள்ள டி இமான் தொடர் கொலைகள், போலீஸ் விசாரணை என தடதடக்கும் கதையோட்டத்துக்கு பொருத்தமாக அதிரடி ஆர்ப்பாட்ட பின்னணி இசையைத் தந்து விறுவிறுப்பு கூட்டியுள்ளார்.
ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸ் என்பது பல படங்களில் பார்த்துப் பழகியதுதான் என்றாலும், ‘இரு’ மடங்கு வித்தியாசத்தை திரைக்கதையில் இணைத்துப் பிணைத்திருப்பதால் லெவன் தருகிற அனுபவம் வேற லெவல் ஆகியிருக்கிறது.
-சு.கணேஷ்குமார்