‘ஃபில்டர் கோல்டு‘ சினிமா விமர்சனம்
விஜி, சாந்தி, டோரா மூவரும் நெருங்கிப் பழகுகிற திருநங்கைகள். மக்கள் மற்ற ஆண்களை, பெண்களை எப்படி மதிக்கிறார்களோ அப்படி திருநங்கைகளையும் சகமனிதனாக மதிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர். அதற்காக எதையும் செய்யத் துணிந்தவர். திருநங்கைகளுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஆவேசம் கொள்பவர். சமூகத்தின் இழிபிறவிகளை தேர்ந்தெடுத்து, சிநேகிதி டோராவின் உதவியோடு கொல்பவர். அந்த கொலைகளால் அவர்கள் சந்திக்கும் விளைவுகளின் நீள அகலமே கதையோட்டம்…
தமிழ் சினிமாவில் திருநங்கைகளின் வாழ்க்கையை, வாழ்க்கைச் சூழலை, அவர்களின் பேச்சு வழக்கை, சம்பிரதாயச் சடங்குகளை இதுவரை இந்தளவுக்கு யாரும் விலாவாரியாக, வெளிப்படையாக காட்சிப்படுத்தியதாக தெரியவில்லை.
படத்தை இயக்கி, விஜி என்ற பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கிற விஜயபாஸ்கர் தோற்றம், நடை, உடை, பேச்சு என அத்தனை அம்சங்களிலும் திருநங்கையாகவே மாறியிருக்கிறார். தான் வருகிற காட்சிகளில் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கிறார்!
சாந்தி, டோரா கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறவர்கள், ஆசாரியாக வருகிற சிவ இளங்கோ, அரசியல்வாதி, சீர்கெட்ட பள்ளி மாணவன் பாத்திரங்களில் வருகிறவர்களின் பங்களிப்பும் நிறைவு!
பரணிக்குமாரின் ஒளிப்பதிவு, ஹூமர் எழிலனின் இசை உள்ளிட்ட தொழில்நுட்பக்குழுவின் உழைப்பு கச்சிதம்.
சிலபல குறைகள் இருந்தாலும் பாராட்டுக்குரிய முயற்சி என்பதை மறுப்பதற்கில்லை.