Home விமர்சனம் ஹிட் 3 சினிமா விமர்சனம்

ஹிட் 3 சினிமா விமர்சனம்

கொடூரமான கொலைகார கும்பலை கண்டுபிடித்து அழிப்பதற்காக கொலைகாரனாக மாறும் காவல்துறை உயரதிகாரி. இந்த ஒன்லைனுக்கு இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலானு அமைத்திருக்கிற திரைக்கதை முழுக்க வயலன்ஸ்… வயலன்ஸ்… வயலன்ஸ்… ரத்தம்… ரத்தம்… ரத்தம்…

மனிதர் திடீரென திரையைக் கிழித்துக் கொண்டு குதித்து நம் தலையை, கை கால்களை வெட்டி வீசிவிடுவாரோ என்று படம் பார்க்கும் நமக்கு பயம் தொற்றுகிற அளவுக்கு,

இரண்டு பேரை குரூரமாக கொல்வதிலிருந்து கொலைகார கும்பலை சுற்றி வளைத்து கிட்டத்தட்ட 150 பேரை கொன்று தீர்ப்பதுவரை சிறப்பு புலனாய்வுப் படை அதிகாரியாக வருகிற நானி கத்தி, அரிவாள், துப்பாக்கி, மெஷின்கன்களோடு  ஆடியிருக்கும் வெறியாட்டம் அட்டகாசம் ஆவ்சம். உடல்மொழியும் வசன உச்சரிப்பும் கம்பீரத்தின் உச்சம்.

ஹீரோவை காதலிப்பதை முழு நேர தொழிலாக செய்கிற வழக்கமான ஹீரோயின் போல் இடைவேளை வரை நடமாடுகிற ஸ்ரீநிதி ஷெட்டி, கிளைமாக்ஸின் நெருக்கத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்து ஆச்சரியமூட்டுகிறார்.

மனிதர்களிடமிருந்து மனிதாபிமானத்தை சுத்தமாக பறித்து அவர்களை கொலைகாரர்களாக மாற்றுகிற, மருத்துவ துறை பயன்பாட்டுக்காக மனிதர்களை கொன்று குவிக்கிற பிரதீக் பப்பரின் வில்லத்தனம் மிரட்டல்.

ராவ் ரமேஷ், சமுத்திரக்கனி என மற்றவர்களும் கேமியோ’க்களாக வந்துபோகிறவர்களும் கச்சிதமான பங்களிப்பை வழங்கியிருக்க, மிக்கி ஜே. மேயரின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு ஆக்ரோஷம் தந்திருக்கிறது.

காஷ்மீரின் அழகு, பயங்கரவாதத்தின் தீவிரம் என பலவற்றையும் கலந்துகட்டியிருக்கிறார் படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ்.

பயங்கரமான சம்பவங்களின் அணிவகுக்க, அதீத வன்முறையால் நிரம்பியிருக்கும் இந்த படத்தை மென் மனதுடையோர் நிச்சயமாய் பார்க்க முடியாது. படத்தின் பிரமாண்டததைப் பார்த்து வியப்படையாமல் இருக்க முடியாது; ‘மேக்கிங்’கை பாராட்டாமல் விட முடியாது.

இன்னொரு முக்கியமான விஷயம்… நம்மூர் ஹீரோ கார்த்திக் கதைநாயகனாக நடிக்கவிருப்பதை எடுத்துக் காட்டியிருக்கும் நான்காம் பாகத்துக்கான லீடு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்