மனிதர்களை கடன் தொல்லை எந்த எல்லை வரை இட்டுச் செல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ‘இறுதி முயற்சி.’
துணிக்கடை பிஸினஸில் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரன், பிஸினஸில் ஏற்பட்ட சரிவாலும், மகனுடைய ஆபரேசனுக்காகவும் 80 லட்சம் வட்டிக்கு கடன் வாங்குகிறார். அதை திருப்பிச் செலுத்த முடியாமல் வட்டி பெருகிப் பெருகி ஒரு கோடியைத் தாண்டுகிறது.
கடன் கொடுத்தவன், கடனை திருப்பிக் கொடுக்க முடியாதவர்களின் மனைவியை, பிள்ளைகளை தூக்கிப் போய் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிற அளவுக்கு கொடூரமானவன். அவன், ரவியின் மனைவியையும் மகளையும் குறி வைக்கிறான். அவனிடமிருந்து தப்பிக்க ரவி எடுக்கும் முயற்சிகளும் அதன் விளைவுகளுமாய் விறுவிறுப்பு தருகிறது மீதிக் கதை.
கதை அவ்வளவுதானா? என்றால், ம்ஹூம்… அதையும் தாண்டி, போலீஸ் தேடிக் கொண்டிருக்கிற சைக்கோ கொலைகாரன் ஒருவன் ரவியின் வீட்டுக்குள் நுழைவதும் அவன் செய்யும் சில அதிரடியான செயல்களுமாய் பரபரக்கிறது இயக்குநர் வெங்கட் ஜனாவின் திரைக்கதை.
சைக்கோ கொலையாளியாக நம் முன் நடமாடுபவரின் பின்ன்ணி என்ன என்பதை நிறைவுக் காட்சியில் தெரிந்துகொள்ளும்போது ‘அடடே’ என்றிருக்கிறது.
ரவிச்சந்திரனாக ரஞ்சித். தன் கண்ணெதிரிலேயே கடனாளி ஒருவரின் மனைவி கொடுமைப் படுத்தப்படுவதைக் கண்டு அதிர்வது, கடனை அடைக்க உதவி கேட்டுப்போன இடங்களில் புறக்கணிப்படும்போது மனம் நொந்துபோவது, வேறு வழியின்றி தற்கொலைக்கு முயற்சி செய்வது, அதைவிட கொடுமையான முடிவுகளையும் எடுப்பது என படம் முழுக்க பரிதாப முகம் காட்டுகிறபடியான கதாபாத்திரம். அதற்கேற்றபடி கண்ணீர், கவலை, இயலாமை, விரக்தி என அனைத்தும் அவரது நடிப்பில் அணிவகுக்கிறது.
ரஞ்சித்தின் மனைவியாக மேகாலி மீனாட்சி. கொப்பும் குலையுமாய், மப்பும் மந்தாரமுமாய் என எப்படி வேண்டுமானாலும் வர்ணிக்கலாம்; அப்படியொரு டெடிபியர் உடல்வாகும் பால்கோவா இளமையுமாய் இருக்கும் அவரை கலர்ஃபுல் சேலைகளில் பார்க்கும்போது பல ஆண்கள் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்க வாய்ப்புண்டு. அவருக்கு வருத்தத்தில் புரண்டு கண்ணீரில் குளிக்கிற வேலை. அதை சரியான முகபாவங்களுடன் செய்திருக்கிறார்.
கடுமையா வட்டி போடுவோம், அதை கட்ட முடியாதவர்களின் மனைவி, மகளை தூக்கி வந்து பெட்ரூம்ல கட்டிப் போடுவோம் என்பதுபோல், மனிதாபிமானமில்லாமல் களமாடும் கந்து வட்டிக் காரர்களாக விட்டல் ராவ், புதுப்பேட்டை சுரேஷ் இருவரும் தங்களால் முடிந்தளவு மிரட்டியிருக்கிறார்கள்.
கடைசிவரை முகம் காட்டாத சைக்கோ கொலைகாரனுக்கும் அநியாய அக்கிரமங்களுக்கு எதிராகவும் குரல் (மட்டும்) கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அது கிளைமாக்ஸுக்கு புத்துணர்ச்சி தருகிறது.
காவல்துறை உயரதிகாரியாக வருகிற கதிரவனின் நடிப்பைவிட கம்பீரமாக இருக்கிறது அவரது குரல். குழந்தை நட்சத்திரங்கள் மெளனிகா, நீலேஷ் கதையுடன் கைகோர்த்து பயணித்திருக்கிறார்கள்.
சூப்பர் வட்டி, ஸ்பீடு வட்டி பார்ட்டிகளின் அல்லக்கைகள் இரண்டு பேர். அவர்களுக்கு, தங்கள் முதலாளியிடம் கடன் வாங்கியிருக்கும் ரஞ்சித் குடும்பத்துடன் எஸ்கேப் ஆகிவிடாமல் கண்காணிக்கிற கடமை. அந்த இருவரும் கண்காணிப்பதை கொஞ்சமாகவும், ரஞ்சித்தின் மனைவியை பாத்ரூம் ஜன்னல் வழி கண்களால் ருசிப்பதை அதிகமாகவும் செய்திருக்கிறார்கள்.
சுனில் லாசரின் பின்னணி இசை காட்சிகளுக்கு சுறுசுறுப்பூட்டுகிறது. பாடல் வரிகள் கதைக்கேற்றதாக இருந்தாலும் இசையால் மனதைத் தொட மறுக்கிறது.
சூர்ய காந்தியின் ஒளிப்பதிவு நேர்த்தி.
கடனில் சிக்குகிறவர்கள் சந்திக்கிற அவமானம், வலி, மிரட்டல் என பலவற்றை காட்சிப்படுத்தியிருப்பதில் புதுமை ஏதுமில்லை என்றாலும், ‘கடன் தொல்லையிலிருந்து மீள தற்கொலை தீர்வல்ல’ என்று படம் சொல்ல வரும் விஷயம் பலமானது!
இறுதி முயற்சி _ எளிமையான கதைமூலம் கருத்துப் புரட்சி!
-சு.கணேஷ்குமார்

