டி.வி.எஃப். மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணியமைக்கும் கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ். தென்னிந்திய மொழிகளில் தரமான திரைப்படங்களை உருவாக்க திட்டம்!

தென்னிந்திய மொழிகளில் புதிய திரைப்படங்களைத் தயாரிக்க டி.வி.எஃப். (TVF) மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதாக கே.ஆர்.ஜி. (KRG) ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கதை எழுதுவதில் துவங்கி, அதனை படமாக்கி, மக்களிடையே கொண்டு சேர்ப்பது வரை திரைப்படத்தின் அனைத்து பணிகளிலும் ஈடுபடுவதில் கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் வித்தியாசமான, புதுமையான கதைகள் வைத்திருப்போரை ஊக்கப்படுத்துவதை இலக்காக கொண்டிருக்கிறது.

இது குறித்து கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனர் கார்த்திக் கவுடா பேசியபோது, “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸை கன்னடா மற்றும் இதர பிராந்திய மொழி படங்களை தயாரித்து அவற்றை பெரிய அளவில் விநியோகம் செய்வதற்காக துவங்கினோம். எங்களின் மிகமுக்கிய நோக்கம், வித்தியாசமான கதை எழுதுவோரை ஊக்கப்படுத்துவது தான். வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை எடுப்பதில் பிரபலமாக அறியப்படும் டி.வி.எஃப். நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதன் மூலம் எங்களின் நோக்கம் விரிவடையும்” என்றார்.

டி.வி.எஃப். நிறுவனர் அருனப் குமார் பேசியபோது, “லைட், கேமரா, ஆய்வு மற்றும் இந்தியா முழுக்க கதைகளை கொண்டு சேர்ப்பதில் உள்ள ஆர்வத்தை தொடரும் வகையில், கன்னடம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் புதிய படங்களைத் தயாரிக்க ரத்தன் பிரபஞ்சா, குருதேவ் ஹொய்சாலா போன்ற படங்களை தயாரித்த ஸ்டூடியோவுடன் கூட்டணி அமைப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்றார்.

டி.வி.எஃப். நிறுவன தலைவர் விஜய் கோஷி பேசியபோது, “அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் ஆழமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுக்க வேண்டும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறோம். பான் இந்தியா அளவுக்கு வெற்றி பெறும் வகையிலான படங்களை உருவாக்குவதற்காக இணைந்துள்ளோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here