ஒரு பாதி விறுவிறுப்பு, மறு பாதி எதிர்பார்ப்பு என திரைக்கதையில் வித்தை காட்டியிருக்கும் ‘கிட்டி.’
தன் காதலியையும், தன்னை கொலை செய்ய வந்த ரவுடி ஒருவரையும் கொன்று விட்டதாக சொல்லி போலீஸில் சரணடைகிறான் இளைஞன் விஜய். என்ன நடந்தது, ஏது நடந்தது என்பதை தெரிந்துகொள்ள களமிறங்குகிற போலீஸ் இன்ஸ்பெக்டர் நடந்த கொலைகளின் பின்னணியை அலசி ஆராயும்போது எதிர்பார்க்காத ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் காத்திருக்கின்றன…
விஜய்யாக ‘முருகா’ அசோக். யாராவது அவரிடம் நீதான் அதை செய்தாய், இதை செய்தாய் என்று சொன்னால் அப்படியே நம்பி விடுகிற வித்தியாசமான இயல்புடைய தனித்துவமான கேரக்டர். அதற்கு காதல் உணர்வு, படபடப்பு, கோபம், ஆக்ரோஷம் என பொருத்தமான உணர்வுகளாலும் உடல் மொழியாலும் பலம் சேர்த்திருக்கிறார்.
அசோக்கின் காதலியாக சங்கவி. ஹோம்லி லுக்கில் வருகிறார். நடிப்பில் குறையில்லை. அசோக்குடனான லவ் கெமிஸ்ட்ரிக்கு பாஸ்மார்க் போடலாம்.
நிஷா, சிமு அத்வானி என எளிமையான நடிப்பில் வலம் வருகிற மற்ற கதாநாயகிகளுக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்கிறது.
கதையின் இரண்டாவது ஹீரோ இன்ஸ்பெக்டராக வருகிற யுகன். உண்மையான கொலையாளியை கண்டறிவதில் போதுமான பரபரப்பு காட்டியிருக்கிறார். போலீஸுக்கான கம்பீர உடற்கட்டும் மேன்லி லுக்கும் கவனம் பெறுகிறது.
டாக்டராக வருகிற இயக்குநர் அரவிந்த்ராஜுக்கு கதையின் திருப்புமுனைக்கு உதவுகிற வலுவான கேரக்டர். நீதிபதியாக வந்து போகிறார் ஓய்.ஜி.மகேந்திரன்.
காதர் இசையில் ஒய் ஜி மகேந்திரனின் பேரன் பாடும் ‘மாறா மாறா மாயம் செய்யும் வீரா’ பாடல் இதம் தருகிறது. பின்னணி இசையை சஸ்பென்ஸ் திரில்லர் கதையோட்டத்துக்கு பொருந்திப் பயணிக்கிறது.
வி.எஸ்.வேலனின் ஒளிப்பதிவு பட்ஜெட்டில் அடங்கியதாக தெரிந்தாலும் காட்சிகளின் தரம் நிறைவு.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் சப்ஜெக்டுக்கு நாயகனுக்கு இருக்கிற மனநலம் சார்ந்த பலவீனத்தை பயன்படுத்தி நடக்கும் கொலைகள் என சற்றே புதுமையான கதையை எடுத்துக் கொண்ட இயக்குநர் நெடுமாறன் மோகன்தாஸ்,
இன்டர்வல் வரை சஸ்பென்ஸுக்கு மேல் சஸ்பென்ஸ் வைத்து, அடுத்து என்ன நடக்கும்? முன்பு என்ன நடந்திருக்கும்? என பலவிதமாக யோசிக்க வைத்து, படத்தின் இரண்டாம் பாதியை புத்திசாலித்தனமான சம்பவங்களின் தொகுப்பாக்கியிருக்கிறார். அந்த புத்திசாலித்தனமே ஒரு கட்டத்துக்கு மேல் குழப்பமூட்டவும் செய்கிறது.
கிட்டி – ஓரளவு கெட்டி!
-சு.கணேஷ்குமார்

