ஆயிரம் கார் வாங்குகிற அளவுக்கு வசதியுள்ள கிறிஸ்தவ இளைஞன் அய்யங்கார் வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிற கதை.
அந்த பெண் மழையில் நனைந்து கொண்டிருக்கும் தருணத்தில் பார்க்கிறான் அவன். கண்டதும் காதல் உருவாகிவிட, அவளை அடிக்கடி பின் தொடர்கிறான். அவள், அவனது விருப்பத்தை ஒரு கட்டம் வரை மறுத்து, பிறகு ஏற்கிறாள். அப்புறமென்ன வழக்கம்போல்தான்… மதத்தைக் காரணம் காட்டி இருவரின் குடும்பமும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவர்கள் வீட்டை எதிர்த்துக் கொண்டு கல்யாணம் செய்து கொள்ள, அதுவரை வேலை வெட்டி பற்றி சிந்திக்காத அவன் வேலைக்குப் போக, ஏற்கனவே வேலைக்குப் போய்க் கொண்டிருந்த அவளது வருமானமும் இணைய பெரியளவில் முன்னேறுகிறார்கள்.
கதையில் புதிதாய் ஏதுமில்லை என்று தோன்றுகிறதுதானே? ஆடியன்ஸை அப்படி ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காக, கிளைமாக்ஸில் அதிரவைக்கும் சம்பவமொன்று அப்லோடு செய்யப்படிருக்கிறது.
அன்சன் பாலின் தோற்றத்திலும் நடிப்பிலும் காதல் நாயகனுக்கான தகுதிகள் நிரம்பியிருக்கிறது. அவரது காதலியாக வருகிற ரெபா ஜான் ஏற்கனவே சில படங்களில் கச்சிதமான நடிப்பாலும் அழகாலும் கவர்ந்தவர். அந்த ஜோடி சந்திக்கும் பிரச்சனைகள், சமாளிக்கும் விதம், முன்னேற்றம் என எல்லாமே கிளிஷேவாக இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி இருவரது கெமிஸ்ட்ரியும் அசத்துகிறது.
நாயகனின் அப்பாவாக மேத்யூ வர்கீஸ், அம்மாவாக அனுபமா குமார், நண்பனாக கிஷோர், காதலர்களுக்கு உதவுகிற வெற்றிவேல் ராஜா என மற்றவர்கள் தங்கள் பங்களிப்பை சரியாக செய்து நகர்கிறார்கள்.
அப்படி திரும்பினால் ஒன்று, இப்படி திரும்பினால் இன்னொன்று என ஏகப்பட்ட பாடல்களை அவ்வளவாய் மனதைக் கவராதபடி கொடுத்திருக்கும் விஷ்ணு பிரசாத், பின்னணி இசையில் பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார்.
கதைக்களம் காலத்துக்கேற்றதாக இல்லாவிட்டாலும், கிளைமாக்ஸில் பரபரப்பைத் திணித்து படத்துக்கு சுறுசுறுப்பூட்டியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ்குமார்.
மழையில் நனைகிறேன் _ பாஸிங் கிளவுட்ஸ்!
-சு.கணேஷ்குமார்