மகாசேனா சினிமா விமர்சனம்

இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் காந்தாரா மாதிரியான ஒரு படத்தை எடுக்க நினைத்திருப்பார் போலிருக்கிறது.

மலைமேல் வாழ்பவர்கள், அடிவாரத்தில் வசிப்பவர்கள் என இரு தரப்பு மக்களுக்கிடையில் ஆயிரக்கணக்கான வருஷத்துப் பகை இருக்கிறது. அடிவார மக்களுக்கு மலை மேல் இருக்கிற மக்கள் வழிபடுகிற யாழிஸ்வரர் சிலையை அபகரிப்பது குறிக்கோள். இரு தரப்பு பகையைப் பயன்படுத்தி அந்த சிலையை கைப்பற்ற வனத்துறை அதிகாரியொருவர் திட்டமிடுகிறார். அதன் விளைவாக ஒருவருக்கொருவர் அடிதடி, வெட்டுக்குத்து, துப்பாக்கிச் சூடு என இறங்க யாளீஸ்வரர் யாரிடம் சென்று சேர்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

மலைமேல் வாழ்கிற மக்களின் தலைவனாக வருகிற விமல் அடிவார மக்களின் தலைவியிடமும் அவரது கணவரிடம் மோதுகிறபோது பட்டாசாக சீறுகிறார். தன்னைச் சார்ந்த மக்கள் மீதும் மனைவி மகள் மீதும், வளர்க்கும் யானை மீதும் பாசம் காட்டும்போது தென்றலாக மாறுகிறார். கதை நன்றாக இருந்திருந்தால் இன்னொரு வெற்றிப் படத்தில் நடித்த பெயர் கிடைத்திருக்கும்.

கதைப்படி மலையடிவார மக்கள் அரக்கர்கள், அரக்கிகள். அந்த மக்களின் தலைவியாக வருகிற மகிமாவின் வில்லத்தனம் மிரட்டல் ரகம்.

‘நானே கடவுள்’ என சொல்லிக்கொண்டு, கிளைமாக்ஸில் சிலை கடத்தல் தாதாவாக எட்டிப்பார்க்கும் கபீர் துகான் சிங்கிற்கு துப்பாக்கியால் மனித உயிர்களை வேட்டையாடுகிற வேலை. அதை வெறித்தனமாக செய்திருக்கிறார்.

கபீருக்காக வேலை செய்யும் காட்டிலாக்கா அதிகாரியாக, தான் நினைத்ததை சாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்பவராக ஜான் விஜய். மனிதாபிமானமின்றி அராஜக அக்கிரமங்களைச் செய்வதில் அவரிடமிருந்து கிடைத்திருப்பது பல படங்களில் வெளிப்படுத்திய அதே திமிர் தெனாவட்டுமிக்க சேட்டைகளால் நிரம்பிய ஜெராக்ஸ் நடிப்பு.

விமலின் மனைவியாக வருகிற ஸ்ருஷ்டி டாங்கேவை அவரது நிஜமான நிறத்திலும் பளபளப்பிலும் நடமாட விட்டிருப்பதால் மலைவாழ் மக்களில் ஒருவராக அவரை பொருத்திப் பார்க்க முடியவில்லை. சில தருணங்களில் குழந்தைத்தனம் சில காட்சிகளில் வீரத்தின் வெளிப்பாடு என தன்னால் முடிந்ததை செய்திருக்கிறார்.

யோகிபாவும் படத்தில் இருக்கிறார் என்பதை தவிர அவரை பயன்படுத்தியதில் விசேஷமாக ஏதுமில்லை.

விஜய் சேயோன், அல்ஃப்ரெட் ஜோஸ், சுபாங்கி ஜா, சிவகிருஷ்ணா, குழந்தை நட்சத்திரம் இலக்கியா என இன்னபிற கதாபாத்திரங்களை ஏற்றிருப்போரின் நடிப்பு கச்சிதம்.

பிரமாண்ட மலை, காடு, அருவி என கதை நிகழ்விடங்களை கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் விதத்தில் படமாக்கியிருக்கிறது ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபுவி கேமரா.

பக்திப் பாடல்களுக்கு சிலிர்ப்பூட்டும் விதத்தில் இசையமைத்திருக்கும் உதய் பிரகாஷ், பின்னணி இசையில் கதையோட்டத்துக்கு தேவையானதை பரிமாறியிருக்கிறார்.

கதை எந்த காலத்திலோ நடக்கவில்லை; இப்போதைய நிகழ்காலத்தில்தான் நடக்கிறது. இன்றைய காலகட்டத்தில் எந்த மலையடிவாரத்தில் அரக்கர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரியவில்லை. கதையும் சரியில்லை; திரைக்கதையும் ஈர்க்கவில்லை என்பதற்கு இப்படி பலவற்றை பட்டியலிடலாம். அதனாலேயே படம் பார்த்தபின், மற்றவர்களை பார்க்கப் பரிந்துரைக்கலாமா வேணாமா என யோசித்துக் குழம்பும் மனநிலைக்குத் தள்ளுகிறது மகாசேனா!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here