பாலா இயக்கும் படங்களின் ஹீரோக்கள் பாசத்தைப் பொழிவதோ, கோபப்படுவதோ, பழி வாங்குவதோ, காதலில் உருகுவதோ எதுவானாலும் எக்ஸ்ட்ரீம் எண்டுக்கு போவது வழக்கம். அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ளாத படைப்பாக ‘வணங்கான்.’
அநியாய அக்கிரமங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டால் கொதித்தெழுந்து அவர்களை அடித்துத் துவைப்பது கோட்டியின் வழக்கம். அப்படியொருமுறை அடிதடியில் ஈடுபட போலீஸ் பிடித்துக் கொண்டு போகிறது. போன இடத்தில் போலீஸ்காரர்களையும் அடித்து துவம்சம் செய்கிறான். அந்தளவுக்கு முரடன். அந்த முரட்டுத்தனத்தின் உச்சகட்ட வெளிப்பாடாக இரண்டு பேரை கொடூரமாக கொல்கிறான்.
போலீஸ் விசாரணையில் கொலை செய்ததை ஒத்துக் கொள்ளவும் செய்கிறான். ஆனால் கொலை செய்தது ஏன் என்பதை சொல்ல மறுக்கிறான்.
போலீஸ் அதிகாரிகள் அடிக்கிறார்கள்; மிதிக்கிறார்கள். ஒரு பயனும் இல்லையென்றானபின் சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். இப்படியான பரபரப்போடு முன்பாதி முடிவுக்கு வர, சிறையிலிருந்து வெளியில் வந்தபின் இன்னும் ஒருவரை கொலை செய்யப் போவதாக சொல்கிறான்.
அந்த கொலை வெறிக்கு காரணம் என்ன என்பதை ஆடியன்ஸுக்கு காட்டிவிடுகிற திரைக்கதை, போலீஸுக்கும் கோர்ட்டுக்கும் கிளைமாக்ஸில்தான் தெரியப்படுத்துகிறது…
பாலாவின் முந்தைய படங்களின் ஹீரோக்களை நகலெடுத்தது போன்ற தோற்றத்தில் கோட்டியாக அருண் விஜய். பேசவும் கேட்கவும் முடியாத மாற்றுத்திறனாளியாக வருகிற அவர் கேவலமான மனிதர்களைப் போட்டுப் பொளப்பதாகட்டும், பெண்களுக்கு எதிரான குற்றச் செயலில் இறங்கியவர்களை குரூரமாக கொல்வதாகட்டும் ஆவேசத்தின் உச்சத்தை தொட்டு நிற்கிறார். தங்கை மீதான பாசத்தில், தன்னை விரும்பும் பெண்ணிடம் காட்டும் நேசத்தில் வேறொரு பரிமாணத்துக்கு தாவியிருக்கிறார்.
பளீர் நிறத்தையும் பளபள தேகத்தையும் சுமந்திருக்கிற ரோஷினி பிரகாஷுக்கு காதல் உணர்வோடு ஹீரோவைச் சுற்றிவருகிற எளிமையான வேலைதான் என்றாலும், அந்த படபட பேச்சும், நடிப்பிலிருக்கிற தேர்ச்சியும் கவர்கிறது.
தன் அண்ணனுக்கு தண்டனை கிடைத்துவிடும் என்ற நிலை உருவாகும்போது வெடித்து அழுவது, அந்த அழுகை கடைசி வரை தொடர்வது என நீளும் காட்சிகளில் 100 சதவிகிதம் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் ரிதா.
குற்றவாளிகளை அடையாளம் காட்டுகிறவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடாமல், வழக்கின் தன்மையை அலசி ஆராய்ந்து தீர்ப்பெழுதுகிற நீதிபதியாக கெத்து காட்டியிருக்கிறார் மிஷ்கின். காவல்துறை விசாரணை அதிகாரியாக கம்பீரமாய் நடமாடியிருக்கிறார் சமுத்திரகனி. சர்ச் ஃபாதராக பாலசிவாஜி, கதாநாயகியின் அப்பாவாக சண்முகராஜன் என முக்கியத்துவமுள்ள பாத்திரங்களை ஏற்றிருப்போர் ஏராளம்.
கதை நிகழும் கன்னியாகுமரியின் அழகை, கடற்பரப்பின் நீள அகலங்களை அங்குலம் அங்குலமாக சுருட்டியிருக்கிறது ஆர் பி குருதேவின் கேமரா.
சில்வாவின் பங்களிப்பில் சண்டைக் காட்சிகளில் தீ பறக்கிறது; ரத்தம் தெறிக்கிறது.
சாம் சி எஸ் பின்னணி இசையை மிரட்டலாக தந்திருக்க, ஜீ வி பிரகாஷ் இசையில் ‘முகிலின் மேலே’, ‘இறை நுறு’ பாடல்களில் இதம் வழிகிறது.
பாலாவின் திரைமொழி விசித்திரமானது; அவர் சித்தரிக்கும் மனிதர்களும் விசித்திரமானவர்கள். அப்படியான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது சற்றே சலிப்பு தந்தாலும், மிரட்டலான மேக்கிங்கால் வணங்கான் வலுவானவனாகியிருக்கிறான்.