கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பாம்பாட்டம்.’
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் ஆர்யா டிரைலரை வெளியிட்டார்.
நிகழ்வில் இயக்குநர் ஏ. வெங்கடேஷ், தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விழாவில் படத்தின் நாயகன் ஜீவன் “படம் வருவதற்கு முன்பே டிரைலர் பேசப்படுகிறது. இந்த கதை புதிய கோணத்தில் இருக்கும். இது நான் நடிக்கும் முதல் பீரியட் படம். இயக்குனர் வடிவுடையானின் உருவத்துக்கும் அவருடைய நடவடிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது. ’பாம்பாட்டம்’ யாராலும் தீர்மானிக்கமுடியாத படமாக வெளிவரும்” என்றார்.
இயக்குனர் வி.சி.வடிவுடையான் “படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறோம். நான் கடுமையாக உழைப்பதாக சொல்கிறார்கள். ஒரு இயக்குனர் கடினமாக உழைத்துதான் ஆகவேண்டும். இந்த படத்தின் கதைக்காக மூன்று வருடங்கள் உழைத்தேன். பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த பெரிய படமாக ‘பாம்பாட்டம்’ இருக்கும். அடுத்து என்ன என்று யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கும்” என்றார்.
நிகழ்ச்சியில் நடிகைகள் சாய் ப்ரியா, ரித்திகா சென், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். சிறப்பு விருந்தினர்களுக்கு தயாரிப்பாளர் பழனிவேல், பொன்னாடை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியை ஐஸ்வர்யா தொகுத்து வழங்கினார்.
படம் பற்றி…
‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்துக்கு இனியன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.