எப்போதோ சுந்தர் சி இயக்கிய ‘மதகஜராஜா’ வசூல்ராஜாவான குஷியில், சூட்டோடு சூடாக திரைக்கு வருகிறான் எப்போதோ சுந்தர் சி நடித்த ‘வல்லான்.’
ஒரு நபர் கொலை செய்யப்பட்டு முகமும் உடலும் சிதைக்கப்பட்ட நிலையில் போலீஸுக்கு கிடைக்க, அது யார், நடந்தது என்ன என்பதை விசாரிக்க வரும் போலீஸ் எந்த தகவலும் கிடைக்காமல் திணறுகிறது. சில காரணங்களால் போலீஸ் பணியிலிருந்து விலகியிருக்கும் திவாகரிடம் அந்த கேஸ் ஒப்படைக்கப்படுகிறது. அவர் சுறுசுறுப்பாக களமிறங்க, உயரதிகாரி ஒருவர் அவரை வேலை செய்யவிடாமல் தடுக்க அதையெல்லாம் மீறி விசாரணையை தீவீரமாக்கும் திவாகர் கண்டறிந்தது என்னென்ன, குற்றவாளி யார் என்பது கதையின் மிச்சசொச்சம். இயக்கம் மணி சேயோன்
திவாகராக சுந்தர் சி. போலீஸ் அதிகாரிக்கான கம்பீரத்தை எளிமையான உடல்மொழியில் கொண்டு வந்திருப்பவர், வழக்கு விசாரணை சூடுபிடித்த நிலையில்தன் மனதுக்குப் பிடித்த பெண்ணை சடலமாகப் பார்த்து அதிர்ந்து கலங்கும் போது நெகிழ வைக்கிறார். தன் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தரம் தாழ்த்திப் பேசும் தன் உயரதிகாரியிடம் காட்டும் கோபமும், ஹீரோயினிடம் தன் விருப்பத்தை சொல்லும் விதமும் கவனம் பெறுகிறது.
தன்னை பெண் பார்க்க வரும் ஹீரோவிடம் தன்னை பிடிக்கவில்லை என சொல்லச் சொல்வதும், பின் அவரது விருப்பத்துக்கு சம்மதம் தெரிவிப்பதையுக் கவிதைபோல் வெளிப்படுத்தியிருக்கும் தான்யா ஹோப்பின் இளமையாலும் அழகாலும் மனதில் இடம்பிடிக்கிறார்.
ஹெபா படேல் கவர்ச்சிக்காகவும் கதையோடு இணைந்து பயணிக்கவும் சரிவிகிதத்தில் பயன்பட்டிருக்கிறார்.
படத்தில் பலரும் வில்லன்களாக இருக்க ஜோயல் என்ற பாத்திரத்தை ஏற்றிருக்கிற கமல் காமராஜின் வில்லத்தனத்தில் தெரியும் லேசான மிரட்டல் கிளைமாக்ஸின் பரபரப்புக்கு உதவுகிறது.
சாந்தினி தமிழரசன், அபிமாமி வெங்கடாச்சலம், தலைவாசல் விஜய், லப்பர் பந்து டிஎஸ்கே, ஜெயக்குமார் என இன்னபிற நடிகர், நடிகைகள் கதையின் தன்மையுணர்ந்து நடித்திருக்க,
சந்தோஷ் தயாநிதியின் காட்சிகளுக்குப் பொருத்தமான பின்னணி இசை, மணி பெருமாளின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தை தாங்கிப்பிடித்திருக்கின்றன.
கொலை, கொலைக்கான பின்னணியை அலசி ஆராய்ந்து கொலையாளியை நெருங்கும் போலீஸ் என பார்த்துப் பழகிய இன்வெஸ்டிகேசன் திரில்லர்தான் என்றாலும் கதையின் நகர்விலிருக்கும் சிலபல திருப்பங்கள் வல்லானுக்கு வலிமை சேர்த்திருக்கிறது.
-சு.கணேஷ்குமார்